விஜய்யின் தமிழக வெற்றிக் கழகப் பேச்சாளர் லயோலா மணி, நேர்காணல் ஒன்றில் பாட்டுப்பாடி கருத்தை வெளிப்படுத்தியது வைரலாகி வருகிறது.

‘ஏ இங்கிலிபீசு வேணான்டி இந்தி பீசு வேணான்டி கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி’ என்று விஜய் நடித்த பாடலைப் பாடி, இந்தி திணிப்பு எதிர்ப்பை சுட்டிக்காட்டியவர் தளபதி, ‘தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து…இதுதான் என் கருத்து’ பாடலை சுட்டிக்காட்டி ‘தலைவர் தீண்டாமையை ஒழிக்கணும்னு நினைக்கிறார்ல’ என்று லயோலா மணி பேசியதை தி.மு.கவினர் பழைய மீம்ஸ் வீடியோக்களோடு, ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், லயோலா மணியிடம் பேசினேன்…

விஜய்யுடன் லயோலா மணி

“நான் ஒரு கானா பாடகர். இயல்பிலேயே பாடல் பாடுவது என்பது என் கலை. மேடைகள்ல நிறைய பாடல்களை பாடியிருக்கேன். ரெண்டு ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளேன். அதனாலதான், என் கருத்துகளை பாடல்கள் மூலமும் வெளிப்படுத்துறேன். இதுல என்ன தப்பு இருக்கு? எனக்கு பாட்டு பாடுறது பிடிக்கும். நான் தவறான வரிகளை பாடலியே? சரியான வரிகளைத்தான் பாடிருக்கேன். தலைவர் விஜய் சார் ரொம்ப நல்ல மனிதர். உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யவே கட்சி தொடங்கியிருக்காரு. மக்களுக்கு இன்னும் நிறைய செய்வார். திரைப்படங்களிலும் சமூக அக்கறையோட நடிக்கிறாரு. ஆனா, அவர் சமூக அக்கறையே இல்லாதவர் மாதிரி நெறியாளர் கேள்வி கேட்டாரு.

‘திரைப்படங்களில் தமிழ் சார்ந்து, மக்களின் உணர்வு சார்ந்து உங்கத் தலைவர் என்ன சொல்லியிக்கார்?’னு கேட்டதுக்கு, “தமிழ் மொழி மீதும் தமிழ் இனம் மீதும் பற்றுகொண்டவர் தலைவர் விஜய். இந்தி திணிப்புக்கு எதிராவும் தீண்டாமைக்கு எதிராகவும் அப்பவே பாடல்கள் மூலமா பட்டாசா வெடிச்சிருக்கார்னு சில பாடல்களை சுட்டிக்காட்டினேன். நிஜத்திலும் விஜய் சார் தீண்டாமைக்கு எதிரானவர். அவரைப் பத்தி நான் சொன்ன கருத்து திமுகவை டிஸ்டர்ப் பண்ணிடுச்சு. ஏன்னா, சமூக நீதி, ஜனநாயகம் கருத்தை அவங்கதானே பேசுறாங்க. அதே கருத்தை நாங்க பேசும்போது, மக்கள் இவங்க பக்கம் போய்டுவாங்களோங்கிற பயத்துல விமர்சிக்கிறாங்க.

சினிமாவிலும் அவர் சமூக அக்கறை கொண்டவர் என்று நான் சொல்ல வந்த கருத்தை சரியா புரிஞ்சுக்காம முன், பின் கட் செய்து தவறான அவதூறு செஞ்சுகிட்டு வர்றாங்க.

லயோலா மணி

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்ம வீரர் காமராஜர், சமூக நீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, பா.ஜ.க கொண்டுவரும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்தும் நான் நிறைய பேசியிருக்கேன். அதையெல்லாம் பரப்பாம இதை மட்டும் பரப்புறாங்கன்னா, அவங்களோட நோக்கம் புரியுது. நான் பேசின மத்த வீடியோவையும் ஷேர் பண்ணினாங்கன்னா இன்னும் சந்தோஷப்படுவேன். தி.மு.க-வினரோட அவதூறுகளும் கேலிகளும் என்னை ஒன்னும் செய்யாது. வளர்க்கத்தான் செய்யும், இன்னும் பக்குவப்பட வைக்கும். இதுவரைக்கும் அத்தனை பேட்டி கொடுத்திருக்கேன். எல்லாத்திலும் பாடல்களையா பாடினேன்?

நான் திருநெல்வேலி மாவட்டம். கஷ்டப்படுற சாதாரண விவசாயக் குடும்பம். என்னை இத்தனை நாள் கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் தெரிஞ்சது. பல கோடி மக்கள் என்னைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுக்கு இலவச விளம்பரம் கொடுக்கும் இணைய உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி” என்கிறவர், “நம்பர் போட்டாலே ஆதார் கார்டின் தகவல்களும் குற்றப் பின்னணியும் வந்துவிடும் என்று பேசி வைரலான கருத்துக்கும் பதிலளித்தார்.

விஜய்யுடன் லயோலா மணி

“யூடியூப் சேனல்ல எடிட் பண்ணுனவங்க தப்பா எடிட் பண்ணிப் போட்டுட்டாங்க. அப்புறம், அவங்களே போன் பண்ணி வருத்தமும் தெரிவிச்சாங்க. முழு வீடியோவையும் பார்த்தா உண்மை தெரியும். நான் தி.மு.க-வின் வாரிசு அரசியலை தொடர்ந்து பேசிக்கிட்டு வர்றேன். ‘இவன்தான் கருத்தியல் ரீதியா பேசுறான், இவனைக் கோமாளி ஆக்கலாம்’னு நினைக்கிறாங்க. அது நடக்காது. மக்கள் நம்பவும் மாட்டாங்க” என்கிறார் அழுத்தமாக!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.