சர்வதேச ஆடம்பர காலுறை பிராண்டான ‘Marc Jacobs’ பிராண்டின் பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காலுறைகளை விற்றதற்காக அமேசான் நிறுவனம் மற்றும் டெல்லியைச் சேர்ந்த காலுறை தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சண்டிகர் மாநில நுகர்வோர் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில், சண்டிகரைச் சேர்ந்த ஜதின் பன்சால் கடந்தாண்டு பிப்ரவரியில் அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ.279.30-க்கு ‘Marc Jacobs’ பிராண்ட் காலுறைகளை வாங்கியிருக்கிறார். அந்த பார்சலை அவர் பிரித்துப் பார்த்தபோது, அது உண்மையிலேயே ‘Marc Jacobs’ காலுறை இல்லை என்பதும், டெல்லியிலுள்ள வி.கே.நிட்டிங் இன்டஸ்ட்ரீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு காலுறை என்பதும் தெரியவந்திருக்கிறது.

அமேசான்

அதையடுத்து, காலுறையை அவர் திருப்பியனுப்ப முயற்சித்தபோது அமேசானில் அதற்கான வழிமுறை இல்லை. பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான அவரது கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இதனால் ஜதின் பன்சால் வேறுவழியின்றி சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, 45 நாள்களுக்கு முன்பே தாங்கள் இதுகுறித்து அமேசானுக்குத் தெரிவித்திருந்தபோதிலும், அவர்கள் திருத்தம் செய்யாதது அவர்களின் தவறுதான் என்றும், இதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் டெல்லி வி.கே. நிட்டிங் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. மேலும், தற்போதுவரை ‘Marc Jacobs’ என்ற பிராண்டின் கீழ்தான் உள்நாட்டு தயாரிப்பு காலுறைகள் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் ஆணையத்தின் முன் நிரூபிக்கப்பட்டது.

பின்னர், வாதங்களைக் கேட்ட நீதிபதி ராஜசேகர் அட்ரி மற்றும் ராஜேஷ் கே ஆர்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லியிலுள்ள வி.கே.நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் தயாரித்த காலுறைகளில் ‘Marc Jacobs’ என்ற பிராண்ட் பெயரைக் காட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு அமேசானுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு இழப்பீடு மற்றும் வழக்குக்கான செலவுத் தொகையை வழங்குமாறு அமேசானுக்கு உத்தரவிட்ட சண்டிகர் மாநில நுகர்வோர் ஆணையம், “அமேசான் தனது இணைய வணிகத்தின் மூலம் ‘Marc Jacobs’ பிராண்டுகளை காட்சிப்படுத்தி, உள்ளூர் தயாரிப்புகளை வழங்கி, 4 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை ஏமாற்றியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

நுகர்வோர் சட்டம் – இழப்பீடு

இதுகுறித்து, மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தியபோதும், அமேசான் தனது தவறை சரிசெய்து கொள்ளவில்லை. அமேசான் இவ்வாறு விற்பனை செய்ததன்மூலம் மக்களிடமிருந்து நிறைய பணத்தை சம்பாதித்து பயனடைந்திருக்கின்றனர். இதன்மூலம் வி.கே.நிட்டிங் இன்டஸ்ட்ரீஸூம் பலனடைந்திருக்கிறது. ஆனால், இவ்வாறு இருதரப்பினரும் இணைந்து மக்களுக்குப் போலியான காலுறைகளை விற்பனை செய்து எவ்வளவு லாபம் ஈட்டியுள்ளனர் என்பது குறித்த தரவுகள் தற்போது இல்லை. தனது தயாரிப்புகள் வேறு பிராண்ட் பெயரில் விற்கப்படுகின்றன என்பதை அறிந்திருந்தும், அந்தப் பொருள்களின் விற்பனையை வி.கே.நிட்டிங் நிறுவனம் நிறுத்தவில்லை.

உத்தரவு

அமேசான் தனது e-commerce தளத்தில் விற்பனையாகும் பொருள்களைத் திரும்பப் பெற மறுக்க முடியாது என்றும், பணத்தைத் திருப்பியளிக்க மறுக்க முடியாது என்றும் தெரிவித்திருப்பது, நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள், 2020-உடன் முரண்படுகிறது. அமேசானின் இந்த செயல் நியாயமற்றது. போலியான காலுறையை டெலிவரி செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ஜதின் பன்சாலுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாகவும், போலி காலுறைக்காக வசூல் செய்த ரூ. 279.30-ஐ திருப்பி வழங்கி, வழக்குச் செலவாக ரூ.20 ஆயிரம் அமேசான் வழங்க வேண்டும். மேலும், அமேசான் நிறுவனம், வி.கே.நிட்டிங் இன்டஸ்ட்ரீஸ் ரூ.25 லட்சத்தை ஆணையத்தின் சட்ட உதவி கணக்கில் வரவு வைக்க வேண்டும்” என உத்தரவிட்டது. அதோடு, இதுபோன்ற தவறான விளம்பரங்களுக்காக அமேசான் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.