மத்திய பா.ஜ.க அரசு, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 2018-ல் தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிக்கு நிதியளிக்க விரும்பும் தனிநபர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் பணத்தைக் கொடுத்து தேர்தல் பத்திரமாக அதை மாற்றி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். இதில், தேர்தல் பத்திரம் மூலம் ஒரு அரசியல் கட்சி எவ்வளவு நிதி பெற்றது என்பது மட்டும் தெரியும் வகையிலும், ஆனால் யார் அந்த நிதியைக் கொடுத்தார்கள் என்பது தெரியாத வகையிலும் பா.ஜ.க சட்டத்தை உருவாக்கியிருந்தது.

தேர்தல் பத்திரம் electoral bonds

தகவல் அறியும் சட்டத்தில்கூட இதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் சட்டவிரோத பணப் பதுக்கலுக்கு வழிவகுக்கும், ஜனநாயகத்துக்கு எதிரானது என ADR, Common Cause India, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள்மீது கடந்த ஆண்டு இறுதியில் விசாரணை நடத்தி முடித்த உச்ச நீதிமன்றம், `தேர்தல் பத்திரம் திட்டம் சட்டத்துக்கு முரணானது’ எனக் கடந்த மாதம் ரத்து செய்தது.

அதோடு, தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் மார்ச் 6-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த தகவல்களை மார்ச் 13-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், ஜூன் 30-ம் தேதி வரை எஸ்.பி.ஐ கால அவகாசம் கேட்க, உச்ச நீதிமன்றமோ மார்ச் 12-ம் தேதிக்குள் அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறிவிட்டது.

உச்ச நீதிமன்றம் – தேர்தல் பத்திரம்

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) தலைவர் அதிஷ் அகர்வாலா, தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்குமாறு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 22,217 தேர்தல் பத்திரங்கள் முற்றிலும் சட்டபூர்வமானவை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவை. சட்டபூர்வமாகக் கொடுத்ததற்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எவ்வாறு தண்டிக்கப்பட முடியும்… தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்திருந்தாலும், அந்தத் தடை இனிவரும் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் தவிர கடந்த காலத்துக்கு அல்ல.

SCBA தலைவர் அதிஷ் அகர்வாலா

மேலும், இந்தத் தீர்ப்பின் மிக முக்கிய பகுதி, எந்தக் கட்சி எந்த கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து எவ்வளவு தொகையைப் பெற்றது என்பதைப் பகிரங்கப்படுத்துமாறு கூறியிருப்பது. இது, நம் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், பெருநிறுவன சுதந்திரத்துக்கும் சாவு மணி அடிக்கும் சாத்தியம் இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்குப் பங்களித்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது கார்ப்பரேட் நிறுவனங்களைப் பலிவாங்கும் நிலைக்கு ஆளாக்கும்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இது போன்ற செயல், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்வதிலிருந்து தடுக்கும். மேலும், சர்வதேச அரங்கில் நம் நாட்டுக்கு இருக்கும் நற்பெயரை இந்தத் தீர்ப்பு சிதைத்துவிடும். எனவே, தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தங்களின் குறிப்பின் பேரில் நிறுத்திவைக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிஷ் அகர்வாலா எழுதியிருந்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.