‘இந்தியா எனது விருப்பமான நாடுகளில் ஒன்று. ஆனால், அங்கு தனியாக செல்ல வேண்டாமென என் தோழிகளிடம் சொல்லியிருக்கிறேன்’ – டேவிட் ஜோசப் என்ற அமெரிக்க பத்திரிகையாளரின் இந்த ட்வீட் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. சர்ச்சையைத் தாண்டி, இதிலிருக்கும் உண்மை பற்றி நாம் பேசியே ஆக வேண்டிய காலம் இது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கணவன் – மனைவி, ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதியன்று தங்கியிருந்தனர். அன்று இரவு, அந்தப் பெண்ணை ஏழு பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர். நாட்டையே அதிரச்செய்த இச்சம்பவம் குறித்துதான், டேவிட் ஜோசப் மேலே குறிப்பிட்ட ட்வீட்டை எழுதியிருந்தார். மேலும், தன் இந்தியப் பயணங்களில் அவர் பார்த்த பாலியல் சீண்டல் சம்பவங்கள் பற்றியும் எழுதியிருந்தார். இதற்குப் பதிலளித்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த ஆறுதலும், ஆதரவும் தெரிவிக்காமல், ‘இதைப் பற்றி புகார் அளித்தீர்களா? இல்லையெனில் அது உங்கள் தவறு, இந்தியாவை களங்கப்படுத்தாதீர்கள்’ எனப் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்திருந்தார்.

தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு ஒரு விஷயத்தை நினைவுப்படுத்த வேண்டி யிருக்கிறது. 2011-ம் ஆண்டு சர்வதேச அளவில் ‘பெண்களுக்கு ஆபத்தான நாடுகள்’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியாவுக்கு நான்காம் இடம். அதே சர்வேயில் 2018-ல் இந்தியா முதல் இடத்துக்கு `முன்னேறியது’. அதை மறுக்க, நம்மிடம் எந்த தர்க்கமும் இல்லை. ஏனெனில், ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒரு பெண் இங்கே பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகிறார். இதில் வெளிநாட்டினர், இந்தியப் பெண்கள் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதோடு வயது வித்தியாசமும் இல்லை என்பதுதான் நெஞ்சை உலுக்கும் யதார்த்தம்.

சில நாள்களுக்கு முன், புதுச்சேரியில் 9 வயது சிறுமி கூட்டு சிறார் வதைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சி கூட்டியிருக்கிறது. புதுச்சேரி சம்பவத்துக்கு போதை மருந்தைக் காரணம் சொல்கிறார்கள். உண்மையில், இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடாக இருப்பதற்கு முதல் காரணம்… நம் சமூகத்தின் ஆணாதிக்க சிந்தனைதான். அதிலிருந்துதான் இக்கொடுமைகள் எல்லாம் கிளை பரப்பி வளர்கின்றன. அதைக் கேள்வி எழுப்பாமல், அச்சிந்தனை தவறென அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் இதிலிருந்து இந்தியாவுக்கு விடிவு கிடையாது. அதைச் செய்ய வேண்டிய தேசிய மகளிர் ஆணையமே ஆணாதிக்க சிந்தனையில்தான் செயல்படுகிறது எனும்போது, நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பது தெளிவாகிறது.

இந்திய நகரங்களில் தெருவுக்கு ஒரு பெண் தெய்வத்தின் கோயில் இருக்கிறது. அதன் எண்ணிக்கையைவிட அதிக அளவில் பாலியல் சீண்டலுக்குள்ளான பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது. இந்தியாவைக் களங்கப்படுத்துகிறார்கள் என ஒப்பாரி வைக்காமல், நம் நாட்டைப் பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக மாற்றுவதுதானே சரியான பதிலாக இருக்க முடியும் தோழிகளே?

உண்மையை ஏற்றுக்கொண்டு, அதுகுறித்து சிந்திப்பதுதான், அந்தப் பாதையில் எடுத்து வைக்கப்படும் முதல் அடியாக இருக்கும்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.