ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலங்களில் பக்தர்கள் ஓட்டமும், நடையுமாகச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் 3 நாள்களாக நடந்துவருகிறது. சிவாலய ஓட்டம் பற்றி பல்வேறு புராண வரலாறுகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று சூண்டோதரன் வரலாறு. சூண்டோதரன் வரலாறும் செவிவழியாகக் கூறப்படும் ஒன்றுதான்.

சிவபெருமானை நோக்கிக் காட்டில் தவம் இருந்தான் அசுரனான சூண்டோதரன். தனக்குமுன் தோன்றிய சிவபெருமானிடம், “நான் யாருடைய கழுத்தை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டினாலும் அவர் தலை துண்டாகி இறந்துபோகவேண்டும்” என்ற வரத்தைப் பெற்றான். வரத்தை வாங்கிய அசுரன் அதைச் சோதித்துப் பார்க்க எண்ணினான். காட்டில் வேறுயாரும் இல்லாததால் வரம் கொடுத்த சிவபெருமானையே சோதிக்க எண்ணினான். அசுரனின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சிவபெருமான் அங்கிருந்து புறப்படவும், அசுரன் அவரை நோக்கிச் சென்றான்.

9-வது சிவாலயம் திருவிடைக்கோடு சடையப்பர் ஆலயம்

உதவிக்கு மஹாவிஷ்ணுவை, ‘கோவிந்தா… கோபாலா…’ என அழைத்துக்கொண்டே ஓடியிருக்கிறார் சிவபெருமான். சிவபெருமான் ஓடியபோது ஓய்வெடுத்த பன்னிரண்டு தலங்களில் 12 கோயில்கள் அமைந்துள்ளதாக ஐதிகம் உள்ளது. இறுதியாக மோகினி வடிவில் மஹாவிஷ்ணு அசுரன் முன்பு தோன்றியுள்ளார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரனுக்கு அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. மோகினியிடம் அசுரன் தனது திருமண ஆசையை வெளிப்படுத்தினான். “என்னைக் கடைசிவரை கைவிடமாடேன் எனக் கழுத்தில் கை வைத்து சத்தியம் செய்தால் திருமணம் செய்துகொள்ளலாம்” என மோகினி கூறியுள்ளார். சிவபெருமானிடம் வாங்கிய வரத்தை மறந்து அசுரன் தனது கழுத்தில் கை வைக்கவும் தலை துண்டாகி மடிந்தார்.

வரம் வாங்கிய அசுரனிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் ஓடியது போன்றே பக்தர்களும் காவி ஆடை அணிந்து பன்னிரு கோயில்களிலும், ‘கோவிந்தா… கோபாலா…’ என அழைத்துக் கொண்டு ஓடுவதாகக் கூறுகின்றனர். அசுரனிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடிய சிவபெருமானுக்கு வியர்க்கும் என்பதால் மூலவரான சிவபெருமானுக்கு பக்தர்கள் விசிறிவிடுவதாகக் கூறுகின்றனர். அதற்காகத்தான் கையில் விசிறியுடன் பக்தர்கள் ஓடுவதாகக் கூறுகின்றனர்.

திருமலை கோயிலில் சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிந்து தீ படாத உணவுகளான பழங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள். சிவராத்திரிக்கு முந்தைய நாள் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து, கையில் விசிறியும், திருநீற்று பையும் எடுத்துக்கொண்டு திருமலை கோயிலில் தரிசித்துவிட்டுப் புறப்படுவார்கள்.

மகாசிவராத்திரியின் முந்தின நாள் காவி ஆடை அணிந்து, கையில் விசிறியோடு குமரி  மாவட்டத்திலுள்ள திருமலைக்கோயிலில் தரிசித்துவிட்டு சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் தொடங்குகின்றனர். அங்கிருந்து 2-வது சிவாலயமான திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என 12 சிவாலயங்களுக்கும் ஓடியும் நடந்தும் சென்று தரிசிப்பதையே சிவாலய ஓட்டம் என்கிறார்கள்.

12 கோயில்களையும் சுற்றி வரும்போது மொத்த தூரமாக 108 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றனர் சிவ பக்தர்கள். இந்த சிவாலய ஓட்டம் ஓடும்போது பக்தர்கள் ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக ‘கோவிந்தா, கோபாலா’ என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள். 12வது சிவாலயமான திருநட்டாலத்தில் சிவாலயத்துக்கு நேர் எதிரே குளத்தின் மறு கரையில் விஷ்ணு பகவான் சங்கர நாராயணராக வீற்றிருக்கிறார். சங்கரநாராயணரை தரிசித்துவிட்டு பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

சிவாலய ஓட்டம்

சிவன் கோயில்களில் வீற்றிருக்கும் இறைவன் சிவபெருமான் ஓடும்போது வெப்பமாக இருக்கும், அதனால் வியர்க்கும் என்பதால் கருவறையில் உள்ள சிவபெருமானுக்கு வெளியில் நின்றபடியே விசிறியால் வீசுகின்றனர் பக்தர்கள். மேலும் ஒவ்வொரு சிவன் கோயில்களிலும் இருந்து திருநீற்றைக் கையில் வைத்திருக்கும் பைகளில் எடுத்துக்கொள்கின்றனர். சிவாலய ஓட்டம் முடித்து அந்தப் பையை வீட்டிலுள்ள பூஜை அறையில் வைத்து தினமும் நீறு அணிந்து இறையருளை பெறுகின்றனர்.

நடையும், ஓட்டமுமாகச் செல்ல முடியாத பக்தர்கள் சைக்கிள், பைக், கார் போன்றவற்றில் பயணித்தும் 12 சிவாலயங்களிலும் வழிபடுகின்றனர். இந்த வருடமும் 7-ம் தேதி மதியத்துக்குமேல் சிவாலய ஓட்டம் தொடங்கினர் பக்தர்கள். சிவராத்திரி தினமான 8-ம் தேதி பகல் முழுவதும், இரவு உறங்காமல் 9-ம் தேதி காலைவரையிலும் சிவாலய ஓட்டத்தைத் தொடர்ந்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.