கணவருடன் இந்தியா வந்த ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணி ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் வாய்மூடி மௌனமாக இருப்பதாக பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது. பலர் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவை குறிப்பிட்டு, பல எதிர்ப்புப் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் தங்கியிருந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் வேறு எங்கும் நான் கண்டதில்லை. ஒருமுறை நான் ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் பெண் ஒருவர் வந்து, `என்னுடைய காதலனாக சிறிது நேரம் நடிக்க முடியுமா… ரயிலில் என் படுக்கைக்கு அருகில் இருக்கும் ஒருவர், என் கால்களைத் தொட்டு அத்துமீறுகிறார். பாதுகாப்பற்று உணர்கிறேன். அவர் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டே இருக்கிறார்’ எனக் கூறினார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் ஒரு பெண் தோழியை இந்திய இளைஞர் ஒருவருக்கு அறிமுகப்படுத்தினேன். என் தோழி கை குலுக்க கைகளை நீட்டியபோது, அந்த இளைஞர் என் தோழியின் மார்பகங்களை பிடித்து அநாகரிகமாக நடந்துகொண்டார். நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகின் மிகவும் பிடித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், அங்கு பெண்கள் தனியாக பயணம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்னையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். காலப்போக்கில் எல்லாம் மேம்படும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ

இதற்கு இந்திய தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்தார். அதில், “இது போன்ற சம்பவம் நடந்தபோது நீங்கள் எப்போதாவது காவல்துறையில் புகார் செய்தீர்களா? இல்லை என்றால் நீங்கள் முற்றிலும் பொறுப்பற்ற நபர். சமூக வலைதளங்களில் மட்டும் எழுதுவதும், முழு நாட்டையும் அவமானம்படுத்துவதும் நல்ல செயலல்ல” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “நான் கூறியது முழு நாட்டையும் இழிவுபடுத்துகிறதா? இந்தியாவில் பெண்களின் அவலநிலையை நிவர்த்தி செய்வதற்காக அதைக் குறிப்பிட்டேன். ஆனால் இந்தியாவை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. நான் பார்த்ததிலேயே அழகான, தத்துவ நுண்ணறிவு கொண்ட கலாசாரம் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவின் அறிவொளி என்பது நிலத்தின் கருத்தியல்ரீதியாக உருவானது. ஆனால், அங்கு மக்களுக்கான பிரச்னைகளும் இருக்கின்றன. நான் காஸா, கொரியா, இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, பெரு உள்ளிட்ட பிற இடங்களுக்கும் சென்றவர்.

ரேகா சர்மா

நான் விரும்பாத நாடுகள் குறித்த அக்கறை எனக்கு குறைவாகவே இருக்கும். ஆனால், நான் இந்தியாவின் குறைபாடுகளை கடுமையாக விமர்சிப்பவன். நாம் விரும்பும் ஒன்று மேம்பட வேண்டும் என கருதுவதால் விமர்சிக்கிறேன். எந்த அளவு இந்தியாவில் வசீகரங்கள் இருக்கிறதோ, அதே அளவு சிக்கல்களும் இருக்கின்றன. அந்த சிக்கல்கள் உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்களுக்கு இந்தியாவைப் பற்றி தெரியாது என்றுதான் பொருள். அதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியாவில் பாலியல் வன்கொடுமை பற்றிய சில மோசமான சம்பவங்களை நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.

நான் இந்தியாவில் நண்பர்களாக சந்தித்த, அல்லது அறிந்த பெண்கள் அனைவருக்கும் இது போன்ற அனுபவங்கள் வேறு வேறு வகையில் நடந்திருக்கிறது. ஆனால், இந்தியா எதற்கும் உதவாத நாடு என யாரும் இங்கு சொல்லவில்லை. இந்தியாவின் புத்திசாலிப் பெண்கள் உங்களையும் என்னையும் விட அதிகம் கொடூரமான சூழல்களை சந்தித்தவர்கள். இந்த சூழல்களால் யாரும் இந்தியாவை குறைவாக மதிப்பிடவில்லை. ஒருவேளை அப்படி மதிப்பிட்டால் அது அவர்களின் இழப்புதானே தவிர இந்தியாவுக்கல்ல.

பாலியல் வன்கொடுமை

வெளிப்படையாகச் சொல்வதானால், இந்தியாவில் பெண்களை நடத்துவது தொடர்பான பிரச்னைகள் பனிப்பாறையின் முனை மட்டுமே. இந்தியாவைப் பற்றி விவாதிக்க நிறைய அசிங்கங்கள் உள்ளன. நான் இந்தியன் இல்லை, அதனால் நான் முன்வைக்கும் என் பார்வையை எடுத்துக் கொள்ளுங்கள். என் இந்திய நண்பர்கள் தேசிய மகளின் ஆணையத்தின் (NCW) மீது அதிக மரியாதை வைத்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு காரணம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் போதும் தாக்கப்படும்போதும், கொலை செய்யப்படும்போதும் பெண்களுக்கான பாதுகாப்பை தேசிய மகளிர் ஆணையம் குறைக்கிறது என்பதுதான்.

பெண்கள் பகிரங்கமாக நிர்வாணமாக்கப்பட்டு, கும்பலால் தாக்கப்பட்டு, பொதுவெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாக பெண்கள் உரிமைக் குழுக்கள் தாக்கல் செய்த புகார்களுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக இந்த ரேகா சர்மாவே விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனாலும், இந்தியாவை இழிவுபடுத்தியதாக என்னைக் குற்றம் சாட்டுவதற்கு அவர் வெட்கப்படவே இல்லை.

மணிப்பூர்

ரேகா சர்மா, தேசிய மகளிர் ஆணையம் என்ற குழுவிற்குத் தலைமை தாங்கி, மேலே குறிப்பிட்டுள்ள பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணாமல், இந்த முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொண்டதற்காகவும், என்னைப் போன்றவர்களை விமர்சிப்பதன் மூலம் இந்தியாவை இழிவுபடுத்துவது நீங்கள்தான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரேகா சர்மா, “ட்வீட் மூலம் இந்திய நாட்டை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்பானிஷ் பெண்ணுக்கு நடந்த சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியதும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியதும் அவசியம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகிறார்கள். அவர்களில் பலர் தனியாகத்தான் வருகின்றனர். இந்தியா, காலப்போக்கில் கடுமையான சட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக, பெண்களின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.

ரேகா சர்மா

அதனால், அவர்கள் பாதுகாப்பாகவே வந்து செல்கிறார்கள். இந்தியா பாலியல் வன்கொடுமைகளை ஒரு மிகக் கடுமையான குற்றமாகப் பார்க்கிறோம். அதுபோலவே, இன்றுவரை, பாலியல் வன்கொடுமையை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதாத நாடுகளும் இருக்கிறது. தும்காவில் நடந்த சம்பவத்தை NCW ஒரே குரலில் கண்டிக்கிறது. புகார் பதிவுசெய்யப்பட்ட சில மணிநேரங்களில் பாதிக்கப்பட்டவரை அணுகி ஆறுதல் அளித்தது.

குற்றவாளிகள் சரியான நேரத்தில் பிடிபடுவதற்கு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது முக்கியம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அதுவும் இங்கே சரியாகவே நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கை நான் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறேன், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் NCW-யிலிருந்து வழங்குவேன். எனவே, உங்களின் இந்தப் பதிவை நீக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.