ஓய்வுக் கால முதலீடுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஓய்வுக் கால செலவுகளுக்காக முதலீடு செய்து வரும் திட்டங்கள் மூலம், நமக்கு அதிக வருமானம் கிடைக்க வேண்டும். குறைந்தபட்சம் விலைவாசி உயர்வு என்கிற பணவீக்க விகிதத்தை விட ஒரிரு சதவிகிதம் அதிகமாக இருப்பது அவசியமாகும். அப்போதுதான், பணி ஓய்வுக் காலத்தில் அவசிய செலவுகளுக்கு தாரளமாக செலவு செய்ய முடியும். இல்லை என்றால் வாழ்க்கைமுறை (Lifestyle) செலவுகளை குறைத்துகொண்டு, இருப்பதற்குள் வாழ வேண்டும். அடுத்து லாபத்துக்கு கட்டும் வருமான வரியும் குறைவாக இருக்க வேண்டும்.  

ஓய்வுக் காலம்; எவ்வளவு பணம் தேவை? |கணக்கீடு

முதலீடுகள் பலவிதம்.. வருமானம் பலவிதம்..!

முக்கிய நிதி சார்ந்த முதலீடுகள் என்கிற போது,  ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள், கலப்பின மியூச்சுவல் ஃபண்ட்கள், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள், நிறுவனப் பங்குகள் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

 30 வயதான ஒருவர் மாதந்தோறும் ரூ.5,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு பல்வேறு நிதித் திட்டங்களில் மொத்தம் 18 லட்சம் ரூபாய் முதலீடு செய்து வந்தால் அவரின் 60 வயதில் என்ன தொகுப்பு நிதி கிடைக்கும் என்கிற விவரத்தை கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள்.

இதில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில்தான் அதிக வருமானம் கிடைத்திருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திர முதலீடு மூலம் ரூ.75 லட்சம் கிடைத்துள்ளது. கலப்பின ஃபண்ட்கள் மூலம் ரூ. 1.14 கோடியும், ஈக்விட்டி ஃபண்ட்கள் மூலம் ரூ. 1.77 கோடியும் கிடைத்துள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட் & கடன் மியூச்சுவல் ஃபண்ட்

முதலீட்டில் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களுக்கு ஏற்றதாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 8 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். நாட்டில் பணவீக்க விகிதம் 6-7 சதவிகித அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில் இவற்றின் லாபம் பெரிதாக இருக்காது.

மேலும், ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்ட்கள் மூலமான வருமானத்துக்கு, முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் (புதிய வரி முறையில் 5%, 10%, 15%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கு ஏற்ப வரிக் கட்ட வேண்டும். அதிக வருமானம் பெறுபவர்கள் / கொண்டவர்கள் அதிக வருமான வரிக் கட்ட வேண்டி வரும்.

கட்டுரையாளர்: கே.கிருபாகரன், பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், www.moneykriya.com

கலப்பின ஃபண்ட்கள்

அடுத்து நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்க கூடியவர்கள், நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யக்கூடிய கலப்பின ஃபண்ட்களில் (Hybrid Funds) முதலீடு செய்து வரலாம்.    

இந்த ஃபண்ட்களில் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் எதிர்பார்க்கலாம். இந்த ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் 65%-க்கு மேல் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டால், அது பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டகளாக கருதப்பட்டு அதற்குரிய வரி விதிக்கப்படும். அதாவது, முதலீட்டை ஓராண்டுக்குள் விற்றால் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் லாபத்துக்கு 15% குறுகிய கால மூலதன ஆதாய வரிக் கட்ட வேண்டும். ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் லாபத்துக்கு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 10% வரிக் கட்டினால் போதும்.

பங்குச் சார்ந்த ஃபண்ட்கள்..!

ஓய்வுக் கால முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க கூடியவர்கள் மற்றும் நீண்ட காலம் 15-30 ஆண்டுகள் இருந்தால் தாராளமாக பங்குச் சார்ந்த  திட்டங்களில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களில் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் எதிர்பார்க்கலாம்.

பங்கு சார்ந்த ஃபண்ட்களில் முதலீட்டை ஓராண்டுக்குள் விற்றால், ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் லாபத்துக்கு 15% குறுகிய கால மூலதன ஆதாய வரிக் கட்ட வேண்டும். ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 10% வரிக் கட்டினால் போதும்.

ஓய்வுக்காலத் திட்டமிடல் (Representational Image)

அந்த வகையில் குறைவான வருமான வரிக் கட்டினால் போதும்.

 ஓய்வுக் கால முதலீடும் கால வரம்பும்:

  • முதலீட்டுக் காலம் 10-30 ஆண்டுகள்: பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள்

  •  முதலீட்டுக் காலம் 5-10 ஆண்டுகள்: கலப்பின மியூச்சுவல் ஃபண்ட்கள்

  •  முதலீட்டு காலம் 1-5 ஆண்டுகள்: ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள்

 அடுத்த வாரம், ‘ஓய்வுக் கால திட்டமிடல்: முறையான முதலீட்டு முறைகள்..!’ பற்றி பார்ப்போம்.

– கே.கிருபாகரன், பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், www.moneykriya.com

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.