”கடைக்குத் தானே போறீங்க… வர்றப்ப நான் சொல்றதுலாம் வாங்கிட்டு வந்துருங்க’’ – குளித்த பின் ஈரத் தலையை சாம்பிராணிப் புகைக்குக் காட்டிக்கொண்டே தன் கணவரைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் திலகவதி.

‘`சரி சொல்லுடி’’ என்றபடி பேப்பரும் பேனாவுமாய் வந்து அமர்ந்தார் பரமகுரு. மஞ்சள் தூள், மிளகு, சீரகம் என அஞ்சறைப் பெட்டி பட்டியல் முடிந்ததும் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, சந்தனம் என பூஜைப் பட்டியல் தொடர, குறுக்கிட்டார் பரமகுரு.

Parents

“அடுத்து… உனக்கு நாப்கின் சேர்த்திடவா? போன தடவை நான் வாங்கிட்டு வந்த புது ஹெர்பல் பிராண்ட் உனக்கு ஓ.கேவா..?’’ என்று கொஞ்சம் ரொமான்ஸும் பெருமையும் கலந்து கேட்க, “ஏங்க … கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உங்களுக்கு? சொல்றதை முதல்ல எழுதுங்க…’’ – படக்கென்று பட்டியல் சொல்வதை நிறுத்திவிட்டு உள்ளே போனார் திலகவதி.15 வயது மகன் ருத்ரன், விடலைப் பருவ சிரிப்பை வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

பரமகுருவுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. கொஞ்ச நேரம் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தார். மறுபடியும் வெளியே வந்தார் திலகவதி.

“ஏங்க, வயசுப் பையன் முன்னாடி பார்த்துப் பேசுங்க. வர வர வயசாகுதே தவிர, அறிவு கொறைஞ்சிட்டே போகுது..’’ – குறைப்பட்டுக் கொண்டே நகர்ந்து போனார். பதிலுக்கு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார் பரமகுரு.

“இப்ப என்ன நாம தப்பா சொல்லிட்டோம்..? குடும்பத்துக்குத் தேவையான பொருள் தானே அதுவும்? பையன் அப்படித்தானே நினைப்பான்..?’’ – குழப்பத்தோடு டீக்கடைக்குப் போய் உட்கார்ந்தார்.

Couple (Representational image)

கடைக்காரர் கொதிக்கிற பாலில் டிக்காக்ஷனை விட்டு மேலும் கீழுமாய் ஆற்றுவதைப் பார்க்கப் பார்க்க பரமகுருவுக்கு நினைவெல்லாம் எங்கோ போனது. திருமணமாகி இந்த 16 வருடங்களில், இப்போதெல்லாம் திலகவதி அடிக்கடி தன்னைக் கடிந்து கொள்வதாக நினைத்து எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக, `வயசாகிடுச்சு… அறிவிருக்கா’ போன்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவர் கண்முன் வந்து போயின.

“ஏங்க.. கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உங்களுக்கு… டாட்டட் காண்டம்ஸ் வாங்கிட்டு வரச் சொன்னா.. இதென்ன மொக்கையா வாங்கிட்டு வந்திருக்கீங்க? அப்றம்… இந்த ஃப்ளேவர் எனக்குப் பிடிக்கல, வேற மாத்திட்டு வாங்க’’ – முன்பெல்லாம் ` அறிவிருக்கா’ என்று திலகவதி கேட்டபோது ஜிவ்வென்று கிக்காக இருந்த சொல், இப்போது ஏதோ வயதை வைத்து குத்திக் காட்டுவதைப் போல தெரிந்தது.

திருமணமான புதிதில் நாளுக்கு இரண்டு என ஆரம்பித்த தாம்பத்யம், ருத்ரன் வளர வளர மாதத்துக்கு இரண்டு என்கிற அளவில் குறைய ஆரம்பித்தது. அதன் பின், மாதம் இரண்டுக்கும் சூழலையும் காதலையும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டிய நிலை.

`தனக்கு வயதாகிவிட்டது என்று சொல்கிறாளா… இல்லை… இதெல்லாம் இனி வேண்டாம் என்கிற நிலைக்கு அவள் வந்துவிட்டாளா…’ – குழப்பங்களுக்குள் நடுவில் டீயை குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் பரமகுரு. மளிகைக் கடையில் பட்டியலைக் கொடுத்து பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். மளிகைப் பையில் எல்லாம் இருந்தன. நாப்கின் மட்டும் இல்லை.

திலகவதி மீண்டும் கேட்டார். “ஏங்க .. அறிவிருக்கா உங்களுக்கு… அதான் எப்பவுமே லிஸ்ட்ல நாப்கின் வாங்குவோம்ல… கேட்டு வாங்கிட்டு வர மாட்டீங்களா?’’

`இவ என்ன பைத்தியமா’ என்று மனதில் நினைத்தாலும் வாயைத் திறக்கவே கூடாது என்று அறையில் போய் உட்கார்ந்தார். திலகவதி மொத்தமாகப் பேசியதில், `அறிவிருக்கா?’ என்ற சொல் மட்டும் தன் டெசிபல் அளவைக் கூட்டிக் கொண்டு ஓங்கி ஒலிப்பது போலவே தெரியவும், அங்குமிங்குமாய் தேடி, இயர் போனை எடுத்து காதில் செருகிக் கொண்டார். அந்த நேரத்துக்குப் பாடல்கள் கேட்கிற மனநிலை இல்லை என்றாலும் தன்னை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

`கடைசியாக எப்போது தாம்பத்யம் நடந்தது? அறிவிருக்கா என்ற சொல்லுக்கும் தாம்பத்யத்துக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம்?’ – பரமகுருவுக்கு ஏற்பட்ட இந்தக் குழப்பம் அவருக்கே வித்தியாசமாகத் தெரிந்தது. நாளை 16-வது திருமண நாள். அதற்கான சமையலுக்குத் தான் மளிகைப் பொருள்களை வாங்கி வந்தது. காலையில் கோவிலுக்குப் போய்விட்டு வந்ததும், மதியம் இருவருவருக்கும் பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிட்டுவிட்டு, மாலை எங்காவது சினிமாவுக்குப் போகலாம் என்பது வரை போன வாரமே பேசி முடிவு செய்த திட்டம். ஆனால், இதெல்லாம் ஏதோ செயற்கையாக நடப்பது போலவே இருக்கிறது. ஒரு பிறந்த நாள் வந்தால் கேக் வெட்டுவது போல், ஒரு பண்டிகை நாளை எப்போதும் போல் கொண்டாடுவதைப் போல்… இருவர் ஒன்றிணைந்து மகிழ்ந்து கொண்டாட வேண்டிய திருமண நாளையும் பத்தோடு பதினொன்றாய் கொண்டாடுவதா? எந்த இடத்தில் இந்த அந்யோன்யம் தவறிப் போனது? மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டே இருந்தார்.

திலகவதி உள்ளே வந்தார்.

“கண்ண மூடிட்டு என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?’’ – பரமகுருவின் இயர் போனை பிடுங்கிவிட்டு அவர் அருகில் உட்கார்ந்தார். அப்போது ருத்ரன் வீட்டில் இல்லை.

“நாளைக்குப் பாசிப்பருப்பு பாயசம் பண்ணிடவா? காலைல முருகன் கோயிலுக்குப் போறப்பவே செஞ்சு எடுதுத்துட்டுப் போயிடலாம்.’’

`உன்கிட்ட மனசுவிட்டு பேசணும் திலகா’ என்று சொல்ல நினைத்தாலும் பரமகுருவால் அதைச் சொல்ல முடியவில்லை. தனக்கு வயதாகிவிட்டது என்பதை குத்திக் காட்டுவது போல் அடிக்கடி `அறிவிருக்கா ‘ என்று திலகவதி பேசுவதைப் பற்றி கேட்பதா? இல்லை முன்பு போல் அதிகம் ஒட்டாமல் கடமைக்குச் செய்கிற தாம்பத்யம் குறித்துப் பேச்சை ஆரம்பிப்பதா?

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ங்க’’ – எதிர்பார்க்காததொரு நொடியில், திலகவதி பேச்சை ஆரம்பித்தார்.

“நான் ஒண்ணு சொல்லுவேன். ஆனா, அதை கேட்டுட்டு நீங்க ருத்ரனை திட்டவோ அடிக்கவோ கூடாது.’’

`சொல்லு’ என்பது போல் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“போன மாசம் ருத்ரனோட ஸ்கூலுக்குப் போயிருந்தேன். இந்த விஷயத்தைப் பத்தி ருத்ரன்கிட்ட எதுவும் கேட்காதீங்கன்னு சொல்லிதான், அவங்க மிஸ் என்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க..’’

திலகவதி சொல்வதை நிதானமாகக் கேட்கிற பொறுமை இல்லாமல் எழுந்து நின்றார் பரமகுரு.

Teen age boy (Representational image)

“சொல்லு… என்ன பண்ணான் அவன். எதுவும் எக்ஸாம்ல பிட் அடிச்சானா?’’

“இல்ல… பிட்டு படம் காட்டியிருக்கான்…’’

திலகவதி சொன்னதைக் கேட்டு வாயடைத்து நின்றார்.

“பையன் வளர்ந்துட்டான். அவனுக்கு இப்ப எல்லாம் தெரியுது.‘’

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றியா?’’

“கடைசியா நாம எப்ப ஒண்ணா இருந்தோம்?’’ – திலகவதி நிறுத்தினார்.

“அது ரெண்டு, மூணு மாசம் இருக்கும்ல?’’

“அது இருந்துட்டுப் போகட்டும் விடுங்க. அதுக்கப்புறம் காண்டம்ஸ் பாக்ஸை எங்க வச்சீங்க?‘’

“எப்பவும் வைக்கிற கப்போர்ட்லதான்.’’

“இல்ல… உங்க பக்கத்துலயே வச்சிட்டு தூங்கிட்டீங்கபோல. ருத்ரன், அவன் போன்ல அதை போட்டோ எடுத்துட்டுப் போய் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டியிருக்கான். அதோட நிறுத்தாம, இதைப் பத்தின டிஸ்கஷனும் க்ளாஸ்ல ஓடியிருக்கு.’’ – பரமகுரு, என்ன பதில் பேசுவதென்று தெரியாமல் உட்கார்ந்தார்.

இது மொபைல் காலம். இன்றைய காலகட்டத்தில் வளரும் பிள்ளைகளுக்கு இவற்றைப் பற்றி தெரியாமல் போனால்தான் ஆச்சர்யம். என்றாலும், பிள்ளைகள் டிவியிலும், டிஜிட்டல் உலகிலும் பார்க்கும் வயதுக்கு மீறிய காட்சிகள் வேறு. அதையே நேரில் பார்க்க நேரிடுவது வேறு. அப்போது, அந்த நேரடி தாக்கத்தால் அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று தடுமாறவே செய்கிறார்கள்.

இன்றைய நாகரிக வாழ்வில், குழந்தைகளின் முன்னரே பெற்றோர் கட்டி அணைப்பதும், முத்தம் கொடுப்பதும் நார்மலைஸ் செய்யப்பட வேண்டும் என்று சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதை முறையாகச் செய்ய வேண்டியதும் அவசியம். அன்பை உணர்த்தும் விதமாக அணைப்பது, கைகளைப் பிடிப்பது, முத்தமிடுவது போன்றவை ஓ.கே. அதுதான் எல்லை என்பதையும் உணர வேண்டும்.

முதலில், செக்ஸ் எஜுகேஷன் பதின் பருவப் பிள்ளைகளுக்கு முறையாகக் கற்றுக்கொடுக்கப் பட வேண்டும். அப்படி அதை செயல்படுத்தாத சூழலில், அவர்களது பாலியல் சிந்தனைகளுக்குத் தீனி போடும் விதமாக, தூண்டும் விதமாக அவர்களைச் சுற்றிய சூழல் இருக்கக் கூடாது. அந்த வகையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் முன்பாக சில அந்தரங்க விஷயங்களை கவனக்குறைவாகக் கூட செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான், திலகவதி, பரமகுருவுக்கு மறைமுகமாகச் சொல்ல நினைத்தது. அதை எப்படிச் சொல்வது என்பதில் தான் அவர் காலம் தாழ்த்திவிட்டார்.

Teen age

அப்பாவோ, அம்மாவோ தங்கள் பிள்ளைகளிடம், அதற்குரிய வயது வந்ததும், ஃப்ரெண்ட்லியாக, ‘இதெல்லாம் ஹார்மோன்களின் விளையாட்டு…’ என்று ஓர் உரையாடலை ஆரம்பிக்கலாம்; சாத்தியப்படும் சூழலில் பாலியல் கல்வியைப் புகட்டலாம். ஆனால், ‘இந்த வயசுல இவங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன…’ என்ற எண்ணத்திலோ, பிள்ளைகள் தங்களை கவனிப்பதை உணராத அலட்சியத்திலோ… பாலியல் விஷயங்கள் பற்றி சிந்திக்க, தங்கள் நண்பர்களுடன் பேசிச் சிரிக்க அவர்களுக்கு வீட்டுக்குள்ளேயே கன்டன்ட் கொடுத்துவிடக் கூடாது.

பரமகுருவுக்கு இவற்றை எல்லாம் திலகவதி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல, அவர் குழப்பம் முடிவுக்கு வந்து சற்றுத் தெளிந்திருந்தார்.

“நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணுமோ?’’ – தலையில் கைவைத்துக் கொண்டார் பரமகுரு.

“ஆமானுதான் சொல்லுவேன்” என்ற திலகவதி, பின்னர் அவரை இலகுவாக்க, ’’அவங்க கிளாஸ் மிஸ் போனை வாங்கி பாத்தப்போ… பெப்பரபேனு நீங்க தூங்குறதையும் பாத்திருக்காங்க. இனிமேலாச்சும் மறைக்க வேண்டியதை மறைச்சு வைங்க…’’ என்று சிரித்தார்.

“ஏய் … என்னடி சொல்ற?’’

“அட… நான் அந்த காண்டம் பாக்கெட்டைச் சொன்னேன்.’’

பரமகுரு, தன் கைகளை ஒரு கணம் முகத்தில் பொத்திவிட்டு எடுத்தார்.

Couple I Romance

“நாளைக்குச் சாயங்காலம் படத்துக்குப் போயிட்டு அப்டியே க்ரீன்ஹில்ஸ் ரெசார்ட் போறோம். நான் புக் பண்ணிட்டேன். ருத்ரன் கிட்ட, ஒரு ரிலேட்டிவ் கல்யாணத்துக்குப் போறோம்னு சொல்லி வச்சிருக்கேன்… நீங்களும் அதையே சொல்லிடுங்க’’ – பரமகுருவுக்குப் பேச்சு வரவில்லை.

“ஸ்கை ப்ளூ கலர் காம்பினேஷன்ல ரெண்டு பேருக்குமே டிரெஸ் எடுத்தாச்சு. உங்களுக்குப் பிடிச்ச பெர்ஃப்யூம் கூட வாங்கி வச்சிட்டேன். இன்னொண்ணு சொல்லவா… திட்டாதீங்க… அந்த `டாட்டட்’ கூட நானே வாங்கிட்டேன்’’ – வெட்கம் வந்தாலும் திலகவதி தொடர்ந்தார். ’’எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா நாளைக்கு என்ன சர்ப்ரைஸ் இருக்கும்னு யோசிக்கிறீங்களா? இது வெறும் ட்ரைலர் தான்’’ என்றபடி அறையை விட்டுப் போனார்.

கண்ணாடி முன்பாகப் போய் நின்றார் பரமகுரு. கண்ணாடியின் பிம்பம் அவரை திட்டியது.

“நிஜமாவே உனக்கு வயசாயிருச்சா… அறிவிருக்கா உனக்கு?’’

– ரகசியங்கள் தொடரும்…

– அர்ச்சனா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.