தமிழகத்தின் மிகப் பழைமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையினரால் கடந்த மாதம் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோதும், தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று பேராசிரியர்களும் இதர ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், மார்ச் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால் வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால், திட்டமிட்டபடி எதுவும் நடத்த முடியாது சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம்

இது குறித்துப் பேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் கதிரவன், “சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தணிக்கைத்துறையின் ஆட்சேபனைகள் உள்ளன என்ற காரணத்தைக் கூறி, சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட வேண்டிய உரிய நிதி மானியத்தைப் பெருமளவில் அரசு குறைத்துவிட்டது. தணிக்கைத்துறையால் சுட்டிக்காட்டப்பட்ட ஆட்சேபனைகளுக்கான மொத்த தொகையானது பல்கலைக்கழகத்தின் மொத்த செலவினங்களில் சுமார் 10 முதல் 15 விழுக்காடு அளவிலேயே உள்ளது. ஆனால் இதைக் காரணம் காட்டி, அரசு ஒவ்வோர் ஆண்டும் 70 முதல் 75 விழுக்காடு அளவிலான நிதியைக் குறைத்துவிட்டு, 25 முதல் 30 விழுக்காடு அளவிலான நிதியை மட்டுமே மானியமாக வழங்குகிறது. இதன் காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு நிதிச்சுமை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து, தற்போதும் தொடர்வதால் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்கவே மிகவும் சிரமமான நிலையைச் சென்னைப் பல்கலைக்கழகம் சந்தித்து வருகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில்கின்ற மாணவர்களில் பெரும்பாலோர் கிராமப் புறங்களிலிருந்தும், பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்பு நிலை சமூகத்திலிருந்து வருவதால், கல்வி, தேர்வு, செய்முறைத் தேர்வு, விடுதிக் கட்டணங்களை, பல ஆண்டுகளாகச் சேவை அடிப்படையில் குறைந்த அளவே பெற்று வருகிறது. இதனால் ஏற்படுகின்ற வருவாய் இழப்பையும் சமாளித்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் சேர்க்கை மற்றும் தேர்வுக் கட்டணம் போன்ற வருமானத்தைக் கொண்டு மட்டுமே தனது கல்விப்பணியை செவ்வனே செய்து கொண்டுவருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆளுகையின்கீழ் 136 கலை, அறிவியல் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் பல தன்னாட்சிக் கல்லூரிகளாக மாறிவிட்டதால், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய வருமானம் பெருமளவு சரிந்து வருகிறது. பணி நிறைவு பெறுகின்ற ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதற்கேற்றவாறு காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.

ஒருபுறம் கல்லூரியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலிலும், தற்போது உள்ள 50 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர்களைக் கொண்டே 100 விழுக்காடு கல்வி, நிர்வாகப் பணிகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் எந்தவித தொய்வுமின்றி சிறப்பாக ஆற்றி வருகின்றது. எனவே, இனி வரும் காலங்களில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் ஆகியவற்றை அரசே ஏற்றுக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டு, தொடர்ந்து சிறப்பான கல்விப் பணியை செவ்வனே செயல்படுத்திட வழி வகுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேராசிரியர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “இது தனியார் பல்கலைக்கழகமா இல்லை அரசு பல்கலைக்கழகமா என்பதைத் தமிழக அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். பல்கலைக்கழக சிண்டிகேட்டை மீறி பல்கலைக்கழகத்தால் எதையும் செய்ய முடியாது.

ஆனால் ஊழல், வரி ஏய்ப்பு என்று கேவலமான சொற்கள் மூலம் எங்கள் பல்கலைக்கழகத்தைக் கேவலப்படுத்துகிறார்கள். கடுமையான இந்த நிதி நெருக்கடியில்கூட NAAC தரவரிசையில் A++ இடத்தை பெற்று இருக்கிறோம். வருமான வரித்துறை இதுவரை எங்களிடம் விசாரணை நடத்தவே இல்லை. எங்களிடம் வந்து முறையாக விசாரித்தால்தான் உண்மை தெரியும். எல்லா கணக்குகளின் விவரங்களையும் காட்டுகிறோம். அதை விட்டு விட்டு கணக்கை முடக்கி எங்கள் வாழ்வாதாரத்தில் கைவைக்கக் கூடாது. மாதம் முழுக்க ஒரு ஊழியர் உழைப்பதே சம்பளத்திற்காகத்தான். அதுவே இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். இந்தச் சம்பவத்தால் எங்கள் மானம் போய்விட்டது” என்று வருத்தம் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் பேராசிரியர்களும், மாணவர்களும் இணைந்துள்ளனர். இது குறித்து முன்னாள் பேராசிரியர் ரமணி பாய் பேசுகையில், “இந்தப் பல்கலைக்கழகத்தில் 34 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். இது போன்று ஒரு நாள்கூட நடந்ததாக வரலாறு இல்லை. இந்த நிலைக்கு வர விடாமல் சுமுகமாகப் பேசி தீர்வு கண்டிருக்கலாம். துணைவேந்தர் இல்லாத நிலையில், இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கக் கூடாது. விரைவில் தமிழக அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்தார்.

முன்னாள் பேராசிரியர் ரமணி பாய்

இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பேசுகையில், “பேராசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பாதிப்படைவது மாணவர்கள்தான். இருந்தாலும் இந்நிலையில் அவர்களுடன் துணை நிற்பது எங்கள் தலையாய கடமை. கிராமப்புறங்களிலிருந்து வரும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் கல்வி வழங்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், கல்விக் கட்டணம் உயர்த்தப்படலாம். எனவே மாணவர்கள் பாதிக்காதவாறு விரைந்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேரி

பல்கலைக்கழகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் மேரி பேசுகையில், “எட்டு ஆண்டுகளாக இங்கு வேலை செய்கிறேன். சம்பளம் வராமல் ரொம்ப கஷ்டப்படுகிறோம். கடந்த டிசம்பரிலிருந்து மூன்று மாதங்களாகச் சம்பளம் வரவில்லை. சாப்பிடுவதற்குக்கூட மிகவும் சிரமமாக உள்ளது. அதைவிட வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடுகிறோம். எவ்வளவுதான் எங்களால் கடன் வாங்கிச் சமாளிக்க முடியும்” என்றார் வேதனையுடன்.

பல தரப்பிலும் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.