விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13-ம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். அவர்கள் ஹரியானா மற்றும் பஞ்சாப் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அவர்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள்மீது ட்ரோன்கள் உதவுயுடன் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதில் ஒரு விவசாயி இறந்துபோனார். சுப்கரன் சிங் என்ற அந்த விவசாயி இறந்து பல நாள்கள் ஆகிவிட்ட நிலையில், அவரின் உடலுக்கு இன்று உறவினர்கள் இறுதிச்சடங்குகள் செய்தனர். போலீஸார் விவசாயி மரணம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த பின்னரே கனவுரி எல்லையில் இருந்து விவசாயியின் சொந்த ஊருக்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது.

இறந்த விவசாயி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகையும், இறந்த விவசாயியின் மகளுக்கு அரசு வேலையும் கொடுப்பதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதிய திருப்பமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை ரத்து செய்வதற்கான வேலையில் போலீஸார் இறங்கியிருக்கின்றனர்.

பாஸ்போர்ட்

இது தொடர்பாக ஹரியானா மாநிலம், அம்பாலா மாவட்ட துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள சோஷியல் மீடியா பதிவில், `விவசாயிகள் போராட்டத்திற்கு பஞ்சாப்பில் இருந்து ஹரியானா வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் மற்றும் தூதரகத்திற்கு கடிதம் எழுதப்படும்.

கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களின் புகைப்படங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவர்கள் பெயரில் விசா அல்லது பாஸ்போர்ட் இருந்தால் ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாட்டில் இருக்கின்றனர். இந்தியாவிற்கு வந்த அவர்களும், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். விசா மற்றும் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால் அவர்களால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.