திமுக-வின் முக்கிய தளபதிகளான செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசு பொருளாகி இருக்கிறார். தான் எடுத்த 6 சூமோட்டோ வழக்குகளில் முதல் தீர்ப்பை வழங்கி இருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

முதல் வழக்கு:

சொத்துக்குவிப்பு வழக்குகள், முறைகேடு வழக்குகளிலிருந்து தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரையும், அவர்களின் குடும்பத்தினர் உட்பட மேலும் சிலரையும் கீழமை நீதிமன்றங்கள் விடுவித்திருந்தன. முன்னாள் அமைச்சர் பொன்முடியும், 2002-ல் தன்மீது பதியப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார். கீழமை நீதிமன்றங்களின் இந்த உத்தரவுகளை எல்லாம் மறு ஆய்வு செய்யும் வகையில், அந்த 6 வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இந்த 6 சூமோடோ வழக்குகளில்  தீர்ப்பு வெளியாகும் முதல் வழக்காக அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி வழக்கு அமைந்திருக்கிறது. மீதமுள்ள 5 வழக்குகளைப் பொறுத்த வரை வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வரும் 27, 28 ஆகிய நாள்களில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகளின் இறுதி விசாரணை நடைபெறும். பிப்ரவரி 29, மார்ச் 5 ஆகிய நாட்களில் ஓ.பி.எஸ் வழக்கின் மீதான இறுதி விசாரணை நடைபெறும். பொன்முடி வழக்கில் மார்ச் 12 முதல் 15 வரை இறுதி விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசன் என்பவருக்கு முறையீடாக ஒதுக்கீடு செய்ததாக, அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

ஐ.பெரியசாமி

இந்த வழக்கிலிருந்து அமைச்சரை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், “வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் பெரியசாமியின் முதல் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  குற்றச்சாட்டு பதிவுக்கு பின் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அந்த மனுவை ஏற்றுக் கொண்டு அமைச்சரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.

வழக்கில் சாட்சி விசாரணையை முடக்கும் நோக்கில் இரண்டாவது முறையாக விடுவிக்க  கோரி மனுத்தாக்கல் செய்ததன் மூலம் நீதிமன்ற நடைமுறையை அமைச்சர் ஐ.பெரியசாமி தவறாக பயன்படுத்தியுள்ளார். வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, பெரியசாமி அமைச்சராக இல்லை. எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருந்துள்ளார். அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அவருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி பெறத் தேவையில்லை. சபாநாயகரிடம் தான் அனுமதி பெற வேண்டும்.
பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் ஒப்புதல் அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை.

சென்னை உயர் நீதிமன்றம்

எம்.பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றினால், அது நீதி பரிபாலனத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அசைத்து பார்த்து விடும். அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணை என்பது கேலிக்கூத்தானது என மக்கள் நம்ப இடமளித்து விடக் கூடாது” என்றார்.  

இதையடுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை மார்ச் 26-ம் தேதிக்குள் மீண்டும் எம்.பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28-ம் தேதி எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு மாற்றப்பட்ட பின், உடனடியாக விசாரணையை துவங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தாமதப்படுத்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் முயற்சி செய்தால், அவர்களை ஆஜராகக் கூறி, நீதிமன்ற காவலில் வைக்க  உத்தரவிடலாம் எனவும், வழக்கை தினந்தோறும் விசாரித்து ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

பாபு முருகவேல்

இந்த வழக்குகள் குறித்து அ.தி.மு.க-வின் வழக்கறிஞரணி நிர்வாகியான பாபு முருகவேல் கூறுகையில், “வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார்கள். சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்தார்கள் என்பதுதான் இந்த புகாரின் அடிப்படை.

சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இரண்டாவது முறையாக வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்கின்றனர். இந்த மனுவின் அடிப்படையிலேயே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார் ஐ.பெரியசாமி. இவர்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது தான் வழக்கே. ஆனால் அந்த வழக்கு விசாரணையின் போது கூட  அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தான் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

அடுத்து, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை விடுவித்தது தவறு என்பதை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றம் தாங்கள் நினைத்தாலும் இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுதலை செய்ய முடியாது என்ற எண்ணத்திற்கு வந்துவிடும். நீதிமன்ற INTERNAL நடைமுறையின்படி, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ, தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷூக்கு வழக்கின் நிலை குறித்து அறிக்கை வழங்குவார். அது வெளியே தெரியாது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்கள். ஆனால், தீர்ப்புக்கு தடை கொடுப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏன் என்றால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே ‘கடவுள் கொடுத்த வரம் ஆனந்த் வெங்கடேஷ்’ என சொல்லி விட்டார். இந்த கருத்து வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடத்தில் தாக்கம் செலுத்தும். அவர் ஒரு நேர்மையான நீதிபதி என அவர்களுக்கு தெரியும்.

எனவே, இது சட்டத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்ட முடிவா? என்பதை மட்டுமே கவனிப்பார்கள். ஒரு வேளை இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்ததில் டெக்னிக்கலாக ஏதாவது தவறு இருந்தால் கூட அதை சரி செய்யச் சொல்வார்களே தவிர, தீர்ப்புக்கு தடை கொடுக்க வாய்ப்பில்லை. எனவே இனி ஐ.பெரியசாமி  இனி ஓடவும் முடியாத.., ஒளியவும் முடியாத.., நிலைக்கு சென்று விட்டார்” என்றார்.

`உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்’

சரவணன், திமுக செய்தித் தொடர்பாளர்

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜாபர் சேட், கணேசன், ராஜமாணிக்கம் என மொத்தம் 8 பேருக்கு முறைகேடாக வீடு ஒதுக்கப்பட்டதாக 2 வழக்குகள் தொடரப்பட்டது. இதில் மொத்தம் 7 பேர் மீதான வழக்குகள் மேல் முறையீட்டின் போது ரத்து செய்யப்பட்டு விட்டது.  தற்போது கணேசன் என்பவருக்கு வீடு ஒதுக்கிய வழக்கு மட்டும் நிலுவையில் இருக்கிறது.

இது தொடர்பாக வழக்கறிஞரும், திமுக செய்தி தொடர்பாளருமான சரவணனிடம் பேசினோம், “அமைச்சராக இருக்கும் போதுதான் ஐ.பெரியசாமி வீடுகளை ஒதுக்குகிறார். அதற்கு ஆளுநரின் ஒப்புதல் வேண்டும். ஆனால் முறைப்படி ஆளுநரின் ஒப்புதல் பெறப்படவில்லை. இதை வைத்து தான் சிறப்பு நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவிக்கிறது. அப்படி விடுவிக்க முடியாது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

உரிய சட்ட ஆலோசனைகளை பெற்ற பின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். அனைத்து வழக்குகளும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டிருக்கும் போது, இந்த வழக்கில் மட்டும் ஏன் விசாரணையை சந்திக்க வேண்டும் என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்கும் என நம்புகிறோம். ” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.