மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி, மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே போராட்டம் நடத்தினார். இதையடுத்து மாநில அரசும் சட்டமன்றத்தைக் கூட்டி மராத்தா சமுதாய மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில், மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. ஆனாலும் `மராத்தா மக்களை ஒ.பி.சி பிரிவில் சேர்க்கும்வரை போராடப் போகிறேன்’ என்று மனோஜ் கூறிக் கொண்டிருக்கிறார். ஜல்னாவில் வழக்கமாக போராட்டம் நடத்தும் இடத்தில் மனோஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “என்மீது தவறான குற்றச்சாட்டை சுமத்த சிலருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இந்த சதியின் பின்னணியில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார்.

அவர் என்னைக் கொலைசெய்ய விரும்புகிறார். பட்னாவிஸின் சாகர் பங்களா நோக்கிப் பேரணியாகச் செல்ல தயாராக இருக்கிறேன். எனக்கு சாலைன் மூலம் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்ய திட்டமிட்டுள்ளனர். அரசியல் தந்திரங்கள் மூலம் மராத்தா சமுதாயத்தை இழிவுபடுத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. மராத்தா மக்களுக்கு ஒ.பி.சி சான்றிதழ் கிடைக்கும் வரை ஓயமாட்டேன். இதனை அமல்படுத்த பட்னாவிஸ் மட்டும்தான் தடையாக இருக்கிறார்.

தன்னை விட யாரும் பிரபலமாகிவிடக் கூடாது என்று பட்னாவிஸ் நினைக்கிறார். எங்களை அமைதியான முறையில் போராட கோர்ட் அனுமதித்துள்ளது. அப்படி இருக்கும்போது எங்கள்மீது போலீஸார் ஏன் வழக்கு பதிவுசெய்யவேண்டும். இதற்கு பட்னாவிஸ்தான் காரணம்” என்று தெரிவித்தார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை பட்னாவிஸ் மறுத்துள்ளார். “மனோஜ் அறிக்கைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று அரசுக்கு தெரியும். சரியான நேரத்தில் அதனை தெரிவிப்பேன். அவர் எந்த மாதிரியான அனுதாபத்தை விரும்புகிறார் என்று தெரியவில்லை” என்றார்.

மனோஜ் ஜராங்கே

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இவ்விவகாரத்தில் தங்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், “அரசுக்கு எதிராக மீண்டும் மீண்டும் போராட்டம் நடத்துபவர்கள் அரசின் பொறுமையை சோதிக்கவேண்டாம். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தவேண்டாம். சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே போன்று மனோஜ் ஏன் பேசுகிறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.