காங்கிரஸ் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் நடந்து வருகிறது. இன்று கான்பூரின் காந்தி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், “நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 15 சதவிகிதம் பேர் தலித்துகள், 15 சதவிகிதம் பேர் சிறுபான்மையினர், 8 சதவிகிதம் பழங்குடியினர். ஆனால், மோடியின் ராம ராஜ்ஜியத்தில் உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்காது.

மோடி – ராகுல் காந்தி

நீங்கள் எவ்வளவுதான் கூக்குரலிட்டாலும் சரி… நீங்கள் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் அல்லது பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழையாக இருந்தால், உங்களுக்கு வேலை கிடைப்பதை மோடி விரும்பவில்லை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் மக்கள்தொகையில் 90 சதவிகிதம் நீங்கள்தான் இருக்கிறீர்கள். பிரதிநிதித்துவம் உங்களுக்கு மறுக்கப்படுகிறது.

நாட்டில் பட்டினி தொடர்பான மரணங்கள் ஆபத்தான, முக்கியமான பிரச்னையாக வளர்ந்து நிற்கிறது. ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நடந்தது… அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் எங்கும் இல்லை என்பதைக் கவனித்தீர்களா? அவ்வளவு ஏன்… பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர்கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பிரதமர் மோடி

நாட்டில் பின்தங்கிய சமூகங்களின் நல்வாழ்வு மற்றும் பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்குச் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். உண்மையில், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய புரட்சிகரமான நடவடிக்கையாக சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பையே கருதுகிறோம்.

நமது நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதி அம்பானி, டாடா, பிர்லா போன்ற வெறும் இரண்டு முதல் மூன்று சதவிகித மக்கள் கைகளில்தான் குவிந்திருக்கிறது. அவர்கள்தான் மோடி உருவாக்கிய புதிய இந்தியாவின் மகாராஜாக்கள்.

2016-ல் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அக்னிவீர் திட்டம் உள்ளிட்ட மத்திய பா.ஜ.க அரசின் பல்வேறு முடிவுகளால் இந்தியாவின் நிலை என்ன என்பதை நீங்களே அறிவீர்கள்தானே….

திடீரென அரசிடம் ஒப்படைக்கப்பட்ட உங்களின் தனிப்பட்ட ஆவணங்களை யாரோ விற்பார்கள், யாரோ வாங்குவார்கள். அது எப்படி வெளியே கசிந்தது எனத் தெரியாது.

உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி

சில நேரங்களில் நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறீர்கள். ஜி.எஸ்.டி வரி, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் பொருளாதாரரீதியில் முடக்கப்படுகிறீர்கள். ஒருவேளை நீங்கள் ராணுவத்தில் சேருவதற்காக முயன்றாலும், அக்னிவீர் யோஜனா திட்டத்தின் மூலம் அதற்கான பாதையும் மூடப்படும். இதுதான் மோடியின் ராமராஜ்ஜியம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.