பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கான தலைநகர் சண்டிகரில், கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் குல்தீப் குமாருக்கு விழுந்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி கூறியதையடுத்து, பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற அவையில் வாக்குச் சீட்டுகளை செல்லாதவை என அனில் மஸ்ஹி பேனாவால் திருத்தும் வீடியோவை வெளியிட்ட ஆம் ஆத்மி, பா.ஜ.க தனது அதிகாரத்தால் தேர்தல் அதிகாரி மூலம் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது எனக் குற்றம்சாட்டியது.

சண்டிகர் மேயர் தேர்தல்

அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தேர்தல் அதிகாரிமீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்றும் அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இவ்வாறு வழக்கு சென்றுகொண்டிருக்கும்போதே, வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இன்னொருபக்கம், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மூன்று பேர் பா.ஜ.க-வில் ஐக்கியமாகினர். இவ்வாறான சூழலில் நேற்றைய தினம், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி, தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி நேரில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணையின்போது, சண்டிகர் நிர்வாகம் சார்பில் ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீதித்துறை அதிகாரியின் மேற்பார்வையில் புதிய தேர்தல் நடத்த வேண்டும்” என்று பரிந்துரை செய்ததும், “புதிய தேர்தல் அவசியமில்லை. தற்போதைய வாக்குச்சீட்டுகளின் அடிப்படையில் வாக்குகளை எண்ணலாம்” என குல்தீப் குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் குர்மிந்தர் சிங் தெரிவித்தார்.

பா.ஜ.க நிர்வாகிகளுடன் அனில் மஸிஹ்

மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி சண்டிகர் நகராட்சியின் நியமன உறுப்பினர் என்றும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்றும் குர்மிந்தர் சிங் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹியை தலைமை நீதிபதி சந்திரசூட் நூதனமாக கேள்விகேட்டார். இறுதியாக நீதிமன்ற அமர்வு, “நாளை பிற்பகல் 2 மணிக்கு சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளை நீதிமன்றத்திற்குக் கொண்டுவர வேண்டும். புதிதாக தேர்தல் நடத்தாமல், ஏற்கெனவே பதிவான வாக்குகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று கூறியது.

அதன்படி, இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் நீதிமன்ற அமர்வு கூடியது. அப்போது, செல்லாது என அறிவிக்கப்பட்ட அந்த 8 வாக்குச்சீட்டுகளை தாங்கள் பார்க்க விரும்புவதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். அதையடுத்து, நீதிமன்ற அதிகாரியொருவர் அந்த வாக்குச்சீட்டுகளை அமர்வில் சமர்ப்பிக்க, நீதிபதிகள் அனைவரும் அந்த வாக்குச்சீட்டுகளைப் பார்வையிட்டனர்.

பிறகு, தலைமை நீதிபதி சந்திரசூட் வாக்குச்சீட்டுகளை வழக்கறிஞர்களிடம் காண்பித்து, “இந்த 8 வாக்குகளும் குல்தீப் குமாருக்குப் பதிவாகியிருக்கின்றன. அந்த வீடியோவில் பார்த்ததுபோலவே, தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி வாக்குச்சீட்டுகளில் கோடு போட்டிருக்கிறார். வாக்குச்சீட்டுகள் சிதைக்கப்பட்டதால் கோடு போட்டதாகச் சொன்னீர்களே அனில் மஸ்ஹி, வாக்குச்சீட்டு எங்கே சிதைக்கப்பட்டிருக்கிறது?” என்று கேள்விகேட்டார்.

சண்டிகர் மேயர் தேர்தல் – டி.ஒய்.சந்திரசூட்

அதைத் தொடர்ந்து, அனில் மஸ்ஹி, அவரின் வழக்கறிஞர் ரோஹத்கி மற்றும் குல்தீப் குமாரின் வழக்கறிஞர்கள் அந்த வாக்குச்சீட்டுகளைப் பார்த்தனர்.

அதையடுத்து, குல்தீப் குமாரின் வழக்கறிஞர் குர்மிந்தர் சிங், “இது ஒரேயொரு வரி மட்டுமே. அதனால், வாக்குச்சீட்டு செல்லாதவையாகாது” என்று கூறினார்.

பின்னர், அனில் மஸ்ஹியின் வழக்கறிஞர் ரோஹத்கி எழுந்து, “ஒரு வரி போட்டதன் மூலம், அவை செல்லாதவை என அதிகாரி அடையாளம் காட்டியுள்ளார். அது சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். அது அவருடைய மதிப்பீடு. மேலும், அந்த நேரத்தில் அவையில் பரபரப்பு ஏற்பட்டதால், கேமரா வேலை செய்கிறதா என்று கேமராவைப் பார்த்தார். அதுவொன்றும், குற்றவாளி கேமராவைப் பார்ப்பதுபோல் அல்ல” என்று கூறினார்.

அதையடுத்து, நீதிபதி சந்திரசூட், “வாக்குச்சீட்டுகள் மீண்டும் எண்ணப்படும். அதில், அந்த 8 வாக்குச்சீட்டுகளும் செல்லுபடியாகும் எனக் கருதப்பட்டு அதனடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

அதற்கு, வழக்கறிஞர் ரோஹத்கி, “அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதில் தவறு இருந்தால் வேறு யாராவது சரிபார்க்கட்டும் என்றுதான் நானும் கூறுகிறேன். ஒருவர் செய்த தவறுகளிலிருந்து யாரும் பலன் பெறமுடியாது” என்றார். அதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன.

உச்ச நீதிமன்றம்

பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிமன்ற அமர்வு, “செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும், மனுதாரருக்கு (குல்தீப் குமார்) பதிவாகியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த வாக்குச்சீட்டுகளை செல்லாதவையாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் அதிகாரி குறியீட்டை வைத்திருக்கிறார். இதன் மூலம், அவர் சட்டபூர்வ விதிமுறைகளை மீறி செயல்பட்டிருக்கிறார். எதிர் மனுதாரர் வெற்றிபெற்றவராக அறிவிக்கவே இவ்வாறு அவர் திட்டமிட்டுச் செய்திருக்கிறார். மேயர் தேர்தலின் போக்கை அவர் சட்டவிரோதமாக மாற்றியிருக்கிறார்.

எனவே, தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்ட முடிவுகள் சட்டத்துக்குப் புறம்பானது என்பதால், அந்த முடிவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும். அதன்படி, மனுதாரர் (குல்தீப் குமார்) பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 20 ஆகும். எனவே, சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயர் பதவிக்கு செல்லத்தக்க முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளராக மனுதாரர் அறிவிக்கப்படுகிறார்.

தீர்ப்பு

மேலும், தேர்தல் அதிகாரிக்கு எதிராக CrPC 340 பிரிவின் கீழ் வழக்கு தொடரவும் பொருத்தமான வழக்காக இது இருக்கிறது. அதனால், CrPC 340 பிரிவின் கீழ் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்துமாறு, தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்று தீர்ப்பு வழங்கியது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.