வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று சொல்லும் அதே கருத்துக்கணிப்புகள், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 47 சதவிகித வாக்குகளைப் பெற்று, 39 மக்களவைத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றிபெறும் என்று இந்திய டுடே கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதேபோல, தி.மு.க கூட்டணி 36 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது.

திமுக கூட்டணிக் கட்சிகள்

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள், அ.தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தி.மு.க கூட்டணியினரோ, உற்சாகத்தில் இருக்கிறார்கள். காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. இந்தக் கூடட்ணி, வெறும் தேர்தல் கூட்டணியாக மட்டுமே அல்லாமல், பா.ஜ.க எதிர்ப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் நீண்டகாலமாக ஒற்றுமையுடன் பயணித்துவருகிறது. தி.மு.க கூட்டணி பலமாக இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

ஆனால், மற்ற கட்சிகள் எல்லாமே நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டதைப்போல, நாலாபுறமும் சிதறிக்கிடக்கின்றன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வுடன் எஸ்.டி.பி.ஐ., புரட்சிபாரதம் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு, தனிமரமாகி தவித்துவந்த பா.ஜ.க., மீண்டும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டுவருகிறது.

வாசன், எடப்பாடி பழனிசாமி

அதன் ஒரு பகுதியாகத்தான், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. ஆனால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று தெரிகிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கூறிவருகிறார்.

செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். எனவே, கூட்டணி வைப்பதற்கான பா.ஜ.க-வின் அழுத்தத்துக்கு அ.தி.மு.க அடிபணியாது என்றுதான் தெரிகிறது. இந்த நிலையில்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க-வுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்லூர் ராஜு

2026-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான், அ.தி.மு.க-வின் முக்கிய இலக்கு. ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சில இடங்களில் வெற்றிபெற்றால்தானே அது அ.தி.மு.க-வுக்கு கௌரவமாக இருக்கும் என்ற கவலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய சிறிய கட்சிகளால் அ.தி.மு.க-வுக்கு என்ன பலன் கிடைத்துவிடும்?

இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, மண்டல வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கேட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

ஸ்டாலின்

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘ஓ.பன்னீர்செல்வத்தை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். தமிழகத்தில் மக்கள் மனதில் எப்போது நிலைத்திருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க-தான். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும். பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. பா.ஜ.க இரண்டு சதவித வாக்குகளை மட்டுமே வைத்திருக்கிறது. ஓ.பி.எஸ் பா.ஜ.க-வின் அடிமையாக மாறிவிட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் 2.5 சதவிகித வாக்குகள் மட்டுமே வித்தியாசம். எனவே, மீண்டும் அ.தி.மு.க வெற்றிபெறும்’ என்று பேசியிருக்கிறார்.

2.5 சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம் என்று ஜெயக்குமார் சொன்னாலும், வெற்றி பெற்றது யார் என்பதுதானே முக்கியம். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என அ.தி.மு.க வரிசையாக தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அ.தி.மு.க-வுக்கு மற்றொரு சோதனையாக, வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.