விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க வேண்டும் என்று கோரி, வரும் 13ம் தேதி டெல்லியில் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றன. விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்பீடு வசதி கொடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக டெல்லிக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் ஹரியானா வழியாகத்தான் டெல்லிக்குள் வரவேண்டும். எனவே அவர்களை தடுத்து நிறுத்த மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹரியானா எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. எல்லையில் சிமெண்ட் தடுப்புகள், வயர்கள் மற்றும் மணல் சாக்கு மூட்டைகள் மூலம் தடுப்பை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் மற்றும் ட்ரோன்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹரியானா போலீஸாருக்கு துணையாக 50 கம்பெனி துணை ராணுவ படையும் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள அம்பாலா மற்றும் குருஷேத்ரா உட்பட 7 மாவட்டங்களில் மொபைல் இண்டர்நெட் சேவை வரும் செவ்வாய்கிழமை இரவு வரை துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு 200 விவசாய அமைப்புகள் ஆதரவு கொடுத்திருக்கின்றன. எனவே பஞ்சாப்பில் இருந்து விவசாயிகள் வருவதை தடுக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையை சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சண்டிகர் மற்றும் டெல்லி இடையே செல்பவர்களுக்கு இடையூராக அமையும் என்பதால், அவர்கள் மாற்று வழியில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியானா டி.ஜி.பி சத்ருஜித் எச்சரித்துள்ளார். மேலும் பொது சொத்துகுக்கு குந்தகம் ஏற்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஏற்கனவே நொய்டாவில் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தாலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய சங்கங்களை மத்திய அரசு அழைத்துள்ளது. இப்போராட்டத்திற்கு சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்து இருக்கிறது. கடந்த 2020-21ம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய பாரதிய கிஷான் யூனியன் வரும் 13ம் தேதி நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. அதேசமயம் `13ம் தேதி போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டால், நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்’ என்று பாரதிய கிஷான் அமைப்பு எச்சரித்துள்ளது.

டெல்லி

டெல்லியில் முன்னெச்சரிக்கை

டெல்லி போலீஸாரும் விவசாயிகள் போராட்டத்தை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு நடந்த போராட்டத்தில் விவசாயிகளுடன் போலீஸார் கைகலப்பில் ஈடுபட்டனர். அது போன்ற ஒரு நிலை வராமல் இருக்க போலீஸார் இன்று டெல்லியில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். டெல்லி-ஹரியானா எல்லை சாலைகளை போலீஸார் மூடியுள்ளனர். அதோடு ராட்சத கண்டெய்னர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர். வடக்கு டெல்லியில் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்களது கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மூக்கில் அடைப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். நாளை மறுநாள் 20,000 விவசாயிகள் 2 ஆயிரம் டிராக்டர்களில் டெல்லிக்குள் நுழைவார்கள் என்று புலனாய்வுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து அவர்கள் வருகின்றனர். இப்போராட்டத்திற்குள் சமூக விரோத சக்திகள் நுழைந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்யலாம் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே டெல்லி போலீஸார் சோசியல் மீடியாக்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.