டெல்லியில் வசிக்கும் ரதிபால் சிங்கின் மகன்பிங்கு 2002ம் ஆண்டு 11 வயதில் காணாமல் போய் இருந்தான். அவனை ரதிபால் சிங்கும் அவரது மனைவி பானுமதியும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. ரதிபால் சிங்கிற்கு சொந்த ஊர் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகில் உள்ள கருவாலி என்ற கிராமம் ஆகும். கடந்த மாதம் 27ம் தேதி ரதிபால் சிங் கிராமத்திற்கு அவரது ஓடிப்போன மகன் வந்திருப்பதாக ரதிபால் சிங்கிற்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர். வந்தவர் துறவி போன்று சாமியாராகி இருந்தார். அவருக்கு ரதிபால் சிங் மகன் பிங்குவிற்கு இருந்த தழும்பு கூட இருந்தது. உடனே அந்த நபரை ரதிபால் சிங் தங்களது ஓடிப்போன மகன் என்று நம்பினார். வனவாசத்திற்கு சென்ற மன்னர் திரும்பி வந்தது போன்று ரதிபால் சிங்கும் அவரது உறவினர்களும் இதை கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

மகன் என்று கூறிக்கொண்டு வந்தவர் தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மடாலயத்தில் சன்னியாசியாக மாறிவிட்டதாகவும், பிறந்த வீட்டில் பிச்சை எடுத்து அயோத்தி சென்று வந்த பிறகுதான் குடும்பத்தோடு சேர முடியும் என்றும் தெரிவித்தார். ஆரம்பத்தில் அவரை செல்ல அனுமதிக்க ரதிபால் சிங் மறுத்தார். ஆனால் வேறு வழியில்லாமல் ரதிபால் சிங்கும் அவரது உறவினர்களும் 13 குவிண்டால் உணவு தானியம் மற்றும் 11 ஆயிரம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர். தொடர்பில் இருக்கவேண்டும் என்று கூறி கூடவே ஒரு மொபைல் போனையும் வாங்கி கொடுத்து அனுப்பினர்.

சில நாட்கள் கழித்து பிங்கு தனது பெற்றோராக கருதும் ரதிபால் சிங்கிற்கு போன் செய்து தான் ஊருக்கு வர விரும்புவதாகவும், ஆனால் இங்கு இருப்பவர்கள் மடாலயத்திற்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் விடுவிப்பார்கள் என்று தெரிவித்தார். குடும்ப வாழ்க்கைக்கு திரும்ப சன்னியாசி இப்பணத்தை கொடுக்கவேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து ரதிபால் சிங் கூறுகையில்,” எனது மகன் மீண்டும் எங்களுடன் சேரவேண்டும் என்பதற்காக எனது சொத்தை விற்று 11 லட்சம் தயார் செய்தேன். பணத்தை நானே ஜார்க்கண்ட் மடத்திற்கு கொண்டு வந்து கொடுப்பதாக தெரிவித்தேன். ஆனால் என்னை வரவேண்டாம் என்று சொன்னார்.

அதோடு பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கும்படியும் கேட்டார். இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே பிங்கு சொன்ன மடாலயம் குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். இதில் அவர் சொன்ன பரஸ்நாத் மடம் என்ற பெயரில் ஜார்க்கண்டில் எந்த மடமும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீஸில் புகார் செய்தேன்” என்று தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது பிங்கு என்று கூறிக்கொண்டு வந்தவரின் உண்மையான பெயர் நபீஸ் என்றும், அங்குள்ள கொண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. ரதிபால் சிங் குடும்பத்தை நபீஸ் ஏமாற்ற முயன்றுள்ளார் என்று தெரிய வந்தது.

2021ம் ஆண்டு நபீஸ் சகோதரர் ரஷீத் இதே போன்று நாடகம் நடத்தி வேறு ஒரு குடும்பத்தில் காணாமல் போன மகனாக நடித்து லட்சக்கணக்கில் ஏமாற்றி இருந்தது தெரிய வந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹஸ்புரா என்ற கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவரின் மகன் 14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் இருந்தார். அவரது பெயரை சொல்லிக்கொண்டு ரவி வீட்டிற்கு வந்த ரஷீத் சில நாட்கள் தங்கிவிட்டு லட்சக்கணக்கான பணத்துடன் மாயமாகிவிட்டார். அதே வழியில் ரதிபால் சிங்கை மோசடி செய்ய நடந்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.