2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனித்தனியே குழுக்கள் அமைத்து, அந்தக் குழுக்கள் கூட்டணிக் கட்சிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வது என அறிவாலயம் தேர்தல் பணிகளில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. அதோடு தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்கிருக்கும் மக்களிடம் நேரடியாகக் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மற்றொரு புறம் அ.தி.மு.க இந்தத் தேர்தலையொட்டி கூட்டணிக்கான பேச்சுவார்த்தை, அறிக்கை தயாரிப்பது எனத் தீவிரம் காட்டி வருகிறது. பா.ஜ.க ஒரு புறம் அ.ம.மு.க, ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கி, அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது. அ.தி.மு.க-வை மீண்டும் கூட்டணியில் இணைப்பது குறித்தும், கூட்டணியில் வரும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடங்கி… மத்திய அமைச்சரவையில் இடம் என்பது வரை பல்வேறு ஆஃபர்கள் பேசப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால், இன்னும் எந்தக் கூட்டணியிலும் யாருக்கு எவ்வளவு சீட் ஒதுக்குவது என்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஆனால், தி.மு.க., தொடங்கி, அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் முடிவில் இருக்கின்றன.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு

அப்படியானால் கூட்டணிக் கட்சிகளில் யார் யாருக்கு எத்தனை எத்தனை தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதிலும் குறிப்பாக தி.மு.க கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதி என்ற விசாரணையில் இறங்கினோம்.

“காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை ஏழு, எட்டு இடங்களுக்கு மேல் ஒதுக்கக்கூடாது என்ற முடிவில் இருக்கிறது தலைமை.” எனப் பேசத் தொடங்கினார் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கும் சீனியர் ஒருவர். “5 முதல் 6 சீட்டுகள் வரைதான் காங்கிரஸ்க்கு ஒதுக்க வேண்டும் என்பதுதான் கட்சித் தொண்டர்களின் விருப்பம். ஆனால், கூட்டணி தர்மத்துக்காக இந்த முறை எட்டு சீட்டுகள் வரை ஒதுக்கும் முடிவில் இருக்கிறது தலைமை. அதையும் தாண்டி ‘கூடுதலாகத் தொகுதியை ஒதுக்க வேண்டும்’ எனக் காங்கிரஸ் கேட்டால், ‘உங்களைக் கூட்டணியில் வைத்திருப்பதால்தான் அமைச்சர்கள் தொடங்கி, நிர்வாகிகள் வரை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறோம். அதுமட்டுமல்ல, எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் அங்கே நாங்கள்தான் தேர்தல் வேலை பார்க்க வேண்டும். உங்க ஆட்களை நிறுத்தி நாங்க வேலை பார்த்து வெற்றிபெற வைப்பதற்குப் பதில் எங்கள் வேட்பாளரை நிறுத்தினால் கட்சிக்காரர்களாவது உற்சாகம் அடைவார்கள். சூழலைப் புரிந்துகொண்டு ஒதுக்கும் இடங்களை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தத் தொகுதிகள் அனைத்திலும் உங்களை வெற்றிபெற வைப்பது எங்கள் பொறுப்பு’ எனும் செய்தியை காங்கிரஸ் டெல்லி தலைமையிடம் சீனியர்கள் நேரில் சென்று சொல்ல வைக்கும் முடிவில் இருக்கிறது தலைமை.” என்றவர்…

அறிவாலயத்தில் காங்கிரஸ் தலைவர்கள்

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக வந்தபோதே, “பழைய தொகுதிகளையோ, பழைய எண்ணிக்கையிலோ தொகுதிகளை ஒதுக்குவோம்” என நினைக்க வேண்டாம் என தி.மு.க தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறோம்” என விவரித்தார்.

காங்கிரஸ்க்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, ஒதுக்கப்படும் தொகுதிகளும் மாறும் என்கிறார்கள். “கடந்த முறை போட்டியிட்ட பல தொகுதிகளில் இந்த முறை தி.மு.க நேரடியாகக் களம் காணும் முடிவில் இருக்கிறது. சில புதிய தொகுதிகளை ஒதுக்கும் எண்ணத்திலும் தி.மு.க தலைமை இருக்கிறது” என்றபடி பேச்சைத் தொடங்கினார் தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், “மற்ற கூட்டணிக் கட்சிகளான வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கியதுபோல இந்த முறையும் இரண்டு இடங்களை ஒதுக்கும் முடிவில் இருக்கிறது தலைமை. அதுமட்டுமல்ல, முஸ்லீம் லீக், ம.தி.மு.க, கொ.ம.தே.க ஆகிய கட்சிகளுக்கும் கடந்த முறை ஒதுக்கிய ஒரு தொகுதிகளை மீண்டும் ஒதுக்கும் எண்ணத்தில்தான் தலைமை இருக்கிறது. இந்த முறை கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் புதிதாக இணைந்துள்ள மக்கள் நீதி மய்யத்துக்கும் தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கும் முடிவில் இருக்கிறது தலைமை. காங்கிரஸ் கட்சிக்குச் சொன்னதுபோலவே, இவர்களுக்கும் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை.

அதுமட்டுமல்ல, அவர்கள் கேட்கும் தொகுதிகளில் ஒன்றும் மற்றொன்று தலைமை முடிவு செய்யும் ஒன்றுமாகத் தொகுதிப் பங்கீடு இருக்கும். அதாவது காங்கிரஸ் 8 தொகுதிகள் கேட்கிறார்கள் என்றால் அதில் நான்கு அவர்கள் கேட்கும் தொகுதியும் மற்ற நான்கு தி.மு.க முடிவு செய்யும் தொகுதியாக இருக்கும். இரண்டு தொகுதி கேட்பவர்களுக்கும் அப்படித்தான் ஒன்று அவர்கள் முடிவு செய்யும் தொகுதி மற்றொன்று நாங்கள் தரும் தொகுதி” எனத் தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதி ஒதுக்கப்படும் விதங்கள் குறித்து விவரித்தார்.

அறிவாலயத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்

இப்போதைய சூழலில் காங்கிரஸுக்கு ஐந்து முதல் எட்டு தொகுதிகள்தான் ஒதுக்கும் முடிவில் இருக்கிறது என்பது தெளிவாகிறது. மற்ற கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கிய எண்ணிகையில் இருக்கும் ஒதுக்கும் முடிவில் இருக்கிறது. புதிதாக சில கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கும் முடிவில் இருக்கிறது தி.மு.க. இது இப்பொதைய சூழல்தான். தேர்தல் நெருங்கும்போது இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம்… பொறுத்திருந்து பார்ப்போம்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.