‘நான் கேப்டனான பிறகு எத்தனையோ சிறப்பான தருணங்களை எதிர்கொண்டிருக்கிறோம். பல போட்டிகளை வென்றிருக்கிறோம். பல சிறப்பான போட்டிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறோம். ஆனால், 100% சொல்கிறேன். இதுதான் எங்களின் மிகச்சிறப்பான வெற்றி!’

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரித்திருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் மிகச்சிறப்பாக வீழ்த்தியிருக்கிறது இங்கிலாந்து அணி.

England team

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரண்டு அணிகளின் சார்பிலும் அவரவர் கொள்கைகள் சார்ந்த கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் நாங்கள் இங்கேயும் ‘BazBall’ ஆட்டம்தான் ஆடப்போகிறோம் என்பதைத் தெளிவாக கூறியிருந்தார். கூடவே சேர்த்து இந்தியாவில் அந்த அதிரடி பாணியில் ஆடுவது தங்களுக்கு பெருத்த சவால்களையும் கொடுக்கும் என்று ஒத்துக் கொண்டிருந்தார். முதல் போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித்திடம் இங்கிலாந்தின் அணுகுமுறை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘எதிரணியை பற்றி நாங்கள் சிந்திக்கப்போவதில்லை.

எங்கள் அணியின் திட்டங்களிலும் அணுகுமுறையிலும் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறோம்.’ எனக் கூறியிருந்தார். இந்திய அணியின் வழக்கமான அணுகுமுறை என்பது மரபார்ந்தது. ஒரு டெஸ்ட் போட்டியை எப்படி ஆட வேண்டும் என வகுத்து வைத்திருக்கிறார்களோ அந்த எல்லைக்குள் நின்று ஆடுவதுதான் இந்தியாவின் வழக்கம். இங்கிலாந்து அணியின் அணுகுமுறை இதற்கு அப்படியே எதிர்தரப்பில் நிற்கக்கூடியது. அவர்களுக்கு எந்த எல்லைக் கோடுகளும் கிடையாது. வரம்புகளை மீறுவதுதான் அவர்களின் நவீன பாணி.

England team

இந்தப் போட்டியை நன்றாக உற்றுக் கவனித்தால் பெரும்பாலான சமயங்களில் இங்கிலாந்து அணி தங்களின் குணாதிசயங்களையும் அணுகுமுறைகளையும் சரியாக வெளிக்காட்டியது. குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் எப்படியான ஆட்டத்தை ஆட வேண்டும் என இங்கிலாந்திலிருந்து கிளம்பினார்களோ அதே ஆட்டத்தை அப்படியே ஆடினார்கள். ஆனால், இந்திய அணியோ தாங்கள் நம்பும் தங்களின் மரபார்ந்த முறையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்களின் அவசரகதியான பேட்டிங்கையும் அணுகுமுறையையும் பார்த்தாலே இது நன்றாக விளங்கும். வெறும் 231 ரன்கள்தான் டார்கெட். கையில் 5 செஷன்கள் மிச்சமிருக்கிறது.

ஆனால், இந்திய அணியோ இரண்டே செஷன்களுக்குள் 202 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி நிற்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதமடித்த போது ரோஹித் வழக்கத்துக்கு மீறிய ரிவர்ஸ் ஸ்வீப்களை அதிகமாக ஆடியிருந்தார். டி20 க்களில் தன்னுடைய சர்வைவலுக்காக ரோஹித் செய்துகொண்ட தகவமைப்பு அது. ஆனால், அதே விஷயத்தை இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிகமாக செய்திருந்தார். டிஃபன்ஸை விட இப்படியான ஸ்வீப்களை ஆடவே ரோஹித்தின் மனம் அதிகம் விரும்பியது. இதன்விளை டாம் ஹார்ட்லி நேராக ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தை கூட முழுமையான நேர்த்தியுடன் டிஃபன்ஸ் ஆட முடியாமல் போல்டைப் பறிகொடுத்துச் சென்றார்.

indian team

இக்கட்டான கட்டத்தில் நின்ற போது வட்டத்திற்குள் ஃபீல்டர்களின் கையில் அடித்துவிட்டு ரன் ஓட வேண்டிய அவசரம் ஜடேஜாவுக்கும் ஸ்ரேயாஸூக்கும் எங்கிருந்து வந்தது? விக்கெட் வேட்டை நடத்திய டாம் ஹார்ட்லியை சமாளிக்க மேலே அனுப்பப்பட்ட அக்சர் படேல் அவர் கையிலேயே கேட்ச் கொடுத்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்றார். ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் ஸ்பெசலிஸ்ட்டான ஸ்ரேயாஸாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அஸ்வினும் கே.எஸ்.பரத்தும்தான் டாப் ஆர்டர் வீரர்கள் ஆடியிருக்க வேண்டிய ஆட்டத்தை ஆடினர்.

ஆனால், அவர்களாலும் ஆறுதல் மட்டுமே கொடுக்க முடிந்தது. விக்கெட் அழுத்தத்தால் அஸ்வினும் இறங்கி வந்து தன்னுடைய விக்கெட்டை அள்ளி கொடுத்துவிட்டு சென்றார். தங்களின் வழக்கமான ஆட்டத்தையும் ஆட முடியாமல் அதிரடி ஆட்டத்தையும் ஆட முடியாமல் இடையில் சிக்கிக்கொண்டதுதான் இந்தியாவின் பிரச்சனை. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு இந்த பிரச்சனை இருந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங்,பௌலிங் இரண்டிலுமே தங்களின் வலு என்னவோ அதை மட்டுமே பற்றிக் கொண்டு ஆடினர். பௌலிங்கில் ஸ்டம்பு டூ ஸ்டம்பாக முழுமையாக டைட்டாக வீசிக்கொண்டே இருந்தனர். பேட்டிங்கிலும் அதிரடிதான். ஆலி போப் நின்று நீடித்து தன்னுடைய கரியரின் சிறந்த ஆட்டத்தை ஆடி 196 ரன்களை அடித்திருந்தார்.

Ollie Pope

இதே ஆலி போப் கடந்த முறை இந்தியா வந்திருந்த போது 8 இன்னிங்ஸ்களில் சேர்த்தே 154 ரன்களைத்தான் அடித்திருந்தார். 8 இன்னிங்ஸ்களில் 6 முறை ஸ்பின்னர்களிடம் வீழ்ந்திருந்தார். அஸ்வின் போப்பின் விக்கெட்டை சொல்லி சொல்லி எடுத்தார். ஆனால், இந்த முறை முதல் போட்டியிலேயே போப் அசத்திவிட்டார். ‘பேட்டர்களுக்கு கிரிக்கெட் ஆட கடினமான களங்களில் இந்தியாதான் முதன்மையானதாக இருக்கும். இந்தத் தொடருக்கு முன்பாக என்னிடம் அதிக நேரம் இருந்தது. நிறைய பயிற்சி செய்தேன். என்னுடைய டெக்னிக்குகளை கொஞ்சம் மாற்றிக் கொண்டேன்.

என போப் உற்சாகமாக பேசியிருக்கிறார். போப் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கடி ஆடுகிறார். ஆனால், அவரின் ரிவர்ஸ் ஸ்வீப்பிலேயே நான்கைந்து வேரியேஷன்கள் இருக்கிறது. அதுதான் இவ்வளவு தாக்கமிக்க ஆட்டத்துக்கு காரணம் என ஜோ ரூட் போப்பை புகழ்ந்திருக்கிறார். ‘BazBall’ என்பது வெறுமென அதிரடி ஆட்டம் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. அதைத்தாண்டி அதற்குள் பல நுணுக்கங்கள் இருக்கிறது என்பதற்கு ரூட்டின் ஸ்டேட்மெண்ட்டும் பெரிய உதாரணம்.

Rohit Sharma

‘சிராஜூம் பும்ராவும் ஆட்டத்தை ஐந்தாவது நாளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என நினைத்தேன்.’ என ரோஹித் சர்மா பேசியிருக்கிறார். ஆனால், இதில் அவர்களை குறை சொல்ல ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதர்சனம். முழுமையாக அதிரடி ஆட்டமும் ஆடாமல் நிதானமும் காட்டாமல் இடையில் நின்று இந்தியா சொதப்பியிருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளிலாவது இந்திய அணி தவறுகளை திருத்திக்கொண்டு வெல்ல வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.