திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் நேசபிரபு. புதன்கிழமை இரவு பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே நேசபிரபு தனது காரில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட கும்பல் அவரிடம் பிரச்னை செய்துள்ளனர்.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் நேசபிரபுவை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில், கை, கால்களில் பலத்த காயமடைந்த நேசபிரபு அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அங்கிருந்த பொதுமக்கள் நேசபிரபுவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேசபிரபு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேசபிரபு

இதுகுறித்து பல்லடம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதன்கிழமை மதியம் நேசபிரபு வீட்டுக்கு அருகாமையில் வாகன எண் இல்லாத இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மர்ம நபர்கள் சிலர் அவர் குறித்த தகவல்களை விசாரித்துள்ளனர். நேசபிரபு மாலை வீட்டுக்கு வந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரைப் பற்றி சிலர் விசாரித்தது குறித்து அவரிடம் தெரிவித்துள்ளனர்.

சிறிதுநேரம் கழித்து நேசபிரபு வீட்டில் இருந்தபோது, மீண்டும் இரண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நான்கு பேர் அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக நேசபிரபு காவல் கட்டுப்பட்டு அறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, காமநாயக்கன்பாளையம் போலீஸார் நேசபிரபுவை தொடர்பு கொண்டு புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

நேசபிரபு

புகார் குறித்த விளக்கத்தை அவர் அளித்த நிலையில், தன்னை மீண்டும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வருவதாகவும் வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக நேசபிரபு தெரிவித்துள்ளார். ஆனால், நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளிக்குமாறு போலீஸார் கூறியுள்ளனர்.

இதனால், தனது காரில் வீட்டை விட்டு வெளியேறி தன்னை நோட்டம் விடுபவர்களின் வாகன எண், அவர்களின் அடையாளத்தை காண நேசபிரபு வந்துள்ளார். பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு தன்னை நோட்டமிடுபவர்கள் குறித்த விவரங்களை செல்போனில் காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு நேசபிரபு தெரிவித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த 20-க்கும் மேற்பட்டோர் நேசபிரபுவை சுற்றி வளைத்துள்ளனர்.

இதையடுத்து, நேசபிரபு அருகில் இருந்த பெட்ரோல் பங்க் அலுவலகத்துக்குள் ஓடி உள்ளார். பங்க் அலுவலகத்துக்குள் நுழைந்த கும்பல் நேசபிரபுவை கடுமையாக தாக்கியதோடு அவரை வெளியே இழுத்து கை, கால் என பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். புகார் அளித்தபோதே நேசபிரபுவுக்கு பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த சம்பவத்தை முன்கூட்டியே தடுத்திருக்கலாம். போலீஸாரின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது” என்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் சிலர் நம்மிடம் கூறுகையில், “காமநாயக்கன்பாளையத்தில் உள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தொடர்பாக நேசபிரபுவுக்கும், அந்த பார் உரிமையாளருக்கும் இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியையும் அவர் வெளியிட்டிருந்தார். அதேபோல், தனிப்பிரிவு காவலர் சுபின் என்பவர் ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவது தொடர்பான செய்தியையும் நேசபிரபு வெளியிட்டிருந்தார். இதனால், தனிப்பிரிவு காவலர் சுபின் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதில், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

நேசபிரபு

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். எந்த காரணத்துக்காக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது இதுவரை தெரியவில்லை. பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிஸ் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேசபிரபு அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றார். செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.