`ஒரு நல்ல ஆசிரியரின் முக்கியத்துவத்தை போதுமான அளவுக்கு அழுத்தமாக என்னால் விவரிக்க முடியாது.’ – அமெரிக்கக் கல்வியாளர் டெம்பிள் கிராண்டின் (Temple Grandin).

`அன்புடைமை அதிகாரத்தை

ஆசிரியர் கற்பிக்கிறார்

கையில் பிரம்புடன்.’ இது, எழுத்தாளர் கழனியூரன் எழுதிய கவிதை.

எல்லா ஆசிரியர்களும் அப்படியிருக்க மாட்டார்கள். ஆனால், மாணவர்களிடம் கடுமை காட்டும் ஆசிரியர்கள் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நேர்படப் பேசுகிறது ஒரு கதை. கற்பனைக் கதைதான். ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான கதை. இன்றைக்கும் இதை யாரோ ஓர் ஆசிரியர், மாணவர்களுக்குப் பாடத்தோடு பாடமாகச் சொல்லிக்கொண்டிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

Motivation Story – டெடி ஸ்ட்டார்டு கதை

அது ஓர் ஆரம்பப்பள்ளி. அன்றைக்குப் புதிதாக ஓர் ஆசிரியை பள்ளியில் சேர்ந்திருந்தார். பெயர் மிஸஸ் தாம்சன் (Mrs. Thomson). ஐந்தாம் கிரேடு மாணவர்களுக்கு அவர்தான் கிளாஸ் டீச்சர். தன்னை பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட மிஸஸ் தாம்சன், “எனக்கு எல்லா மாணவர்களும் ஒண்ணுதான்’’ என்றார். உண்மையில் மனதிலிருந்து வந்த வார்த்தைகள் இல்லை அவை. வந்த முதல் நாளே முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பையனை அவருக்குப் பார்த்ததுமே பிடிக்காமல்போனது. அந்தக் குட்டிப் பையனின் பெயர் டெடி ஸ்டாட்டர்டு (Teddy Stoddard).

`என்ன இந்தப் பையன் இப்பிடி இருக்கான்… தலையைக்கூட ஒழுங்கா வாரலை. சரியா அயர்ன் பண்ணாத சட்டை. ரெண்டு, மூணு நாளா இதையேதான் போட்டுக்கிட்டு வர்றான்போல இருக்கு. மத்த பசங்க யாரும் இவன்கிட்டயே போக மாட்டேங்கறாங்களே… ஒழுங்கா குளிப்பானோ, மாட்டானோ…’ டெடியின் தோற்றம் இப்படி ஓர் எண்ணத்தை மிஸஸ் தாம்சனின் மனதில் விதைத்துவிட்டது. அதனாலேயே அந்தப் பையனை பாரபட்சமாக நடத்த ஆரம்பித்தார். டெஸ்ட் பேப்பர்களில், அவன் தவறாக எழுதும் பதில்களில் சிவப்பு பேனாவால் பெரிதாக `X’ (தவறு) என்று போடுவார். அவன் ஃபெயிலான பாடங்களில் அதை எல்லா மாணவர்களுக்கும் தெரிவிக்கும்விதமாக, தாளின் முன்பக்கத்தில் `F’ என்று சிவப்பு பேனாவால் குறித்துவைப்பார்.

ஒவ்வொரு கல்வியாண்டு முடிவதற்கு முன்பும் ஆசிரியர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களின் கல்வி, நடத்தை குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இது அந்தப் பள்ளியின் முக்கியமான விதிமுறை. மற்ற எல்லா மாணவர்கள் குறித்த ஃபைல்களையும் குறித்த நேரத்தில் கொடுத்துவிட்டார் மிஸஸ் தாம்சன். ஆனால், டெடியின் ஃபைலைத் தொடவே அவருக்குத் தயக்கமாக இருந்தது. கெடுவுக்கான தேதி நெருங்கியது. வேறு வழியின்றி டெடியின் ஃபைலைப் பிரித்தார் மிஸஸ் தாம்சன். அதிர்ந்துபோனார்.

Motivation Story – டெடி ஸ்ட்டார்டு கதை

`சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை.’ – மகாத்மா காந்தி.

முதல் ரிப்போர்ட்டை ஒன்றாம் கிரேடு டீச்சர் எழுதியிருந்தார்… `டெடி அற்புதமான மாணவன். எதைச் சொன்னாலும் எளிதில் புரிந்துகொள்கிறான். படுசுத்தமாக இருக்கிறான். அவனுடைய நோட்டு, புத்தகங்கள் அத்தனை நீட்டாக இருக்கின்றன. அவனைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சி பொங்குகிறது. அடுத்த வருடம் என் வகுப்பில் அவன் இல்லை என்பதை நினைக்கவே கவலையாக இருக்கிறது. ஐ மிஸ் யூ டெடி.’

அடுத்து இரண்டாம் கிரேடு டீச்சர்… `டெடி, ஒரு எபவ் ஆவரேஜ் மாணவன். அவனை அத்தனை மாணவர்களும் விரும்புகிறார்கள். வருடக் கடைசியில் அவனுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. வீட்டில் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது என்று அவன் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது.’

மூன்றாம் கிரேடு டீச்சர்… `சமீபத்தில் டெடியின் அம்மா இறந்துபோனார். அது, டெடியின் பிஞ்சு மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. நன்றாகப் படிக்க வேண்டும் என்றுதான் அவன் நினைக்கிறான். ஆனால், அவனுடைய அப்பா அவன்மேலோ, அவனுடைய படிப்பின்மீதோ கொஞ்சமும் ஆர்வமில்லாமல் இருக்கிறார். வீடு, டெடிக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நரகமாக மாறிவருகிறது.’

நான்காம் கிரேடு டீச்சர்… `டெடி, ஒரு கைவிடப்பட்ட குழந்தை. அவனுக்குப் பள்ளிக்கு வருவதில் சுத்தமாக ஆர்வம் போய்விட்டது. அவனுக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஏதோ வருகிறான். அதுவும் அடிக்கடி தடைப்படுகிறது.’

டெடி குறித்த இந்த ரிப்போர்ட்டுகளைப் படித்து நொந்துபோனார் மிஸஸ் தாம்சன். `அந்தக் குழந்தையிடம் போய் இப்படி நடந்துகொண்டோமே…’ என்று துடித்தார்.

Motivation Story – டெடி ஸ்ட்டார்டு கதை

சில வாரங்கள் கழிந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாள்களே இருந்தன. மாணவர்கள், மிஸஸ் தாம்சனுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொண்டு வந்தார்கள். அழகழகான, விதவிதமான பரிசுப்பொருள்களை சிறியதும் பெரியதுமான, வண்ணக் காகிதங்களால் மூடப்பட்ட பெட்டிகளில், ரிப்பன் சுற்றி, கொண்டு வந்து தந்தார்கள். டெடியும் தயங்கித் தயங்கி ஒரு பரிசுப்பொருளைக் கொண்டு வந்தான். ஒரு பழைய மளிகைக்கடை பையில், ஒரு பிரவுன் பேப்பரில், அரைகுறையாகச் சுற்றப்பட்ட பரிசுப்பொருள். அதை அவன் வெளியே எடுத்ததும் மாணவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். மிஸஸ் தாம்சன் மாணவர்களை அதட்டி, அமைதியாக்கிவிட்டு டெடியை அருகே அழைத்தார்.

`எனக்குள் ஏதோ ஒன்று இருப்பதைப் புரிந்துகொண்ட ஆசிரியர்கள் எனக்கு வாய்த்தது என் அதிர்ஷ்டம்.’ – ஆன் பேன்க்ராஃப்ட் (Ann Bancroft).

டெடி ஒரு கவரிங் பிரேஸ்லெட்டும், சென்ட் பாட்டில் ஒன்றையும் பரிசாகக் கொண்டு வந்திருந்தான். பெயருக்குத்தான் அது கற்கள் பதித்த பிரேஸ்லெட். பெரும்பாலான கற்கள் அதில் இல்லை. பாட்டியின் குழி விழுந்த கன்னம்போல் கற்கள் இருந்த இடம் தெரிந்தது. சென்ட் பாட்டிலில் கால்வாசிதான் சென்ட் இருந்தது. மிஸஸ் தாம்சன் மலர்ந்த முகத்தோடு அதை வாங்கிக்கொண்டார். தன் இடது கை மணிக்கட்டில் ஒரு துளி சென்ட்டைவிட்டு ஆழமாக மூச்சிழுத்து நுகர்ந்து பார்த்தார். “வாசனை பிரமாதம் டெடி…’’ என்று சொன்னார். அன்று மதியம் வகுப்பறையைவிட்டு வெளியே போவதற்கு முன்பு டெடி, டீச்சரின் அருகில் போனான். “நீங்க என்னோட அம்மா மாதிரியே சென்ட்டை வாசனை பிடிச்சீங்க… தெரியுமா?’’ என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிப்போனான்.

மிஸஸ் தாம்சன், டெடியின் மேல் தனி அக்கறை காட்டினார். அவனுக்கு ஊக்கம் கொடுத்தார். அவன் நன்கு படிக்க வழிகாட்டினார். அவன் ஆடை அணியும்விதத்தைச் சுட்டிக்காட்டி, அவனைத் திருத்தினார். டெடி, மிஸஸ் தாம்சன் சொல்வதற்கெல்லாம் கட்டுப்பட்டான். அந்த ஆண்டு பரீட்சையில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சியடைந்தான். நடுநிலைப்பள்ளியில் சேர வேறு பள்ளிக்கு மாறவேண்டியிருந்தது. அன்றைக்கு மிஸஸ் தாம்சனின் வீட்டுக் கதவுக்கருகே ஒரு துண்டுச்சீட்டில் டெடி ஒரு குறிப்பு எழுதிவைத்திருந்தான். `என் வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைத்த சிறந்த ஆசிரியர் நீங்கள்தான். நன்றி.’

இது நடந்து ஏழு வருடங்கள் கழித்து டெடியிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. `என் பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டது டீச்சர். வகுப்பில் மூன்றாவது ரேங்க். கல்லூரியில் சேரப்போகிறேன். என் வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைத்த சிறந்த ஆசிரியர் நீங்கள்தான். நன்றி.’

இன்னும் சில வருடங்கள் கழித்து மிஸஸ் தாம்சனுக்கு டெடியிடமிருந்து கடிதம் வந்தது. `கல்லூரியில் பட்டம் பெற்றுவிட்டேன் டீச்சர். மேற்கொண்டு மருத்துவம் படிக்கலாம் என்று இருக்கிறேன். ஆனாலும் டீச்சர்… என் வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைத்த சிறந்த ஆசிரியர் நீங்கள்தான். மிக்க நன்றி.’

Motivation Story – டெடி ஸ்ட்டார்டு கதை

இந்தக் கடிதம் வந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் டெடியிடமிருந்து, மிஸஸ் தாம்சனுக்குக் கடிதம் வந்தது. `அண்மையில் ஒரு பெண்ணைப் பார்த்தேன் டீச்சர். இருவருக்கும் பிடித்துப்போய்விட்டது. வருகிற ஜூனில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறோம். என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோனார். எனவே, சர்ச்சில் திருமணம் நடக்கும் நேரத்தில், மணமகனுக்கான பெற்றோர் இருக்கும் இடத்தில் நீங்கள் அமர்ந்து என் திருமணத்தை நடத்திக்கொடுக்க வேண்டும். ஒப்புக்கொள்வீர்களா டீச்சர்?’ என்று எழுதி, கையொப்பம் இடும் இடத்தில் `தியோடர் எஃப். ஸ்டாட்டர்டு எம்.டி.’ (Theodore F. Stoddard, M.D.) என்று இருந்தது.

மிஸஸ் தாம்சன், டெடியின் திருமணத்துக்கு வந்தார். அவருடைய வலது கையில் கற்கள் விழுந்துபோன அந்த பழைய பிரேஸ்லெட் இருந்தது. இன்னொரு கையில் சிறுவன் டெடி கொடுத்திருந்த சென்ட் பாட்டில். டாக்டர் ஸ்டாட்டர்டு, ஓடி வந்து மிஸஸ் தாம்சனை அணைத்துக்கொண்டார். மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டார். காற்றில் சென்ட்டின் நறுமணம். ஸ்ட்டார்டு டீச்சரின் காதோரம் மெல்ல முணுமுணுத்தார்… “எனக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கும், என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்ததற்கும் நன்றி மிஸஸ் தாம்சன்.’’

மிஸஸ் தாம்சன் கண்களில் நீர்துளிர்க்கச் சொன்னார்… “இல்லை டெடி. நான்தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். நீ எனக்குக் கற்றுக்கொடுத்தாய். நீ கற்றுக்கொடுத்ததால்தான், என்னால் மாற முடிந்தது.’’

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.