அகரமுதல்வன், தன் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து ஈழ நிலத்தின் வலியைக் கடத்திக் கொண்டிருப்பவர்.

சிறுகதை, கவிதைகள், புனைவுத் தொடர் என பல தளங்களில் தனது பங்களிப்பைச் செய்துவருபவர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ‘கடவுள் பிசாசு நிலம்’ கடந்த ஆண்டு வெளிவந்த இவருடைய நூல். இந்நூல் பரலாகக் கவனம் பெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் அகரமுதல்வன் வாங்கியப் புத்தகங்கள் என்னென்ன? எந்தெந்தப் புத்தகங்களை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறார்? என்பது குறித்து பார்ப்போம்.

காஞ்சி

வாங்கிய புத்தகங்கள்:

காஞ்சி – சேரன் (காலச்சுவடு)

என்னைப் பொறுத்தவரை சேரன் தமிழின் மகாகவி. ஈழப் போராட்ட இலக்கியத்தில் சேரனின் கவிதைகள் முக்கியமானவை. வீரயுகம் தோன்றிய காலத்திலிருந்து, அந்த வீரயுகம் வீழ்ச்சியுற்று, அது இல்லாமல் போன காலம் வரைக்கும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கக் கூடிய ஒருவர். அவருடைய கவிதை மொழி, தீர்க்கமான சில சித்திரங்களைத் தரக்கூடியது. அவருடைய பாடித்தீராத ஈழ வாழ்க்கையை வேறுவேறு தளங்களில் பாடிக்கொண்டே இருக்கிறார். அந்தவகையில் சேரன் எனக்கொரு முன்னோடி. அவருடைய கவிதைத் தொகுப்பு தான் காஞ்சி.

2. கங்கு – முத்துராசாகுமார் (சால்ட்)

நான் வாங்கிய அடுத்த புத்தகம் கங்கு நாவல். முத்துராசாகுமார் எழுதியது. மதுரை பிண்ணனி சார்ந்து தமிழில் எழுதக்கூடிய லக்ஷ்மி சரவணகுமார், கார்த்திகைப் பாண்டியன், பா. திருச்செந்தாழை ஆகியோரின் வரிசையில், அந்த நிலவியல் சார்ந்து எழுதுவதில் முக்கியமான ஆளாக இருக்கிறார். இதற்கு முன் அவருடைய ஈத்து என்றொரு சிறுகதைத் தொகுப்பு வந்து, கவனம் பெற்றது. இந்த கங்கு நாவல் தமிழிலக்கிய வரிசையில் ஒரு முக்கியமான நாவலாக அமையும்.

கங்கு நாவல்

3. நடமாடும் நிழல் : தமிழில் – கே.கணேஷ்ராம் (நூல்வனம்)

ஹென்ரிக் ஹாண்டர்ஸன் இம்பெர் எழுதிய குறுங்கதைகள். அதைத் தமிழில் கே.கணேஷ்ராம் மொழிபெயர்த்துள்ளார். கணேஷ்ராம் ‘பத்து இரவுகளின் கனவுகள்’, ‘மூன்று இரத்தத் துளிகள்’, ‘சுழலும் சக்கரங்கள்’ போன்று தேர்ந்தெடுத்த மொழிப்பெயர்ப்புகளைச் செய்பவர். சிறந்த மொழிப்பெயர்ப்பாளர். தமிழில் இப்போது நிறைய குறுங்கதைகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதைக் குறுங்கதைகளின் காலம் என்கிறார்கள்.

குறுங்கதைகள் என்றால் என்ன என்று சொல்லக்கூடிய குறுங்கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளது. இந்தாண்டில் வெளிவந்த மிக முக்கியமான மொழிப்பெயர்ப்புப் புத்தகமாக இதைக் கருதுகிறேன். வாசகர்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்களும் படிக்கவேண்டிய ஒரு‌ புத்தகம். மிகவும் நுண்மையான, ஆழமான அவதானங்களை மிகக் குறுகிய வடிவில் சொல்லக்கூடிய நூல். இதைத் தெறிப்பு (flash Stories) என்று சொல்லலாம்.

தங்க மயில்வாகனம்

தங்கமயில் வாகனம் – தமிழ்நதி (தமிழினி)

தமிழநதி ‘பார்த்தீனீயம்’ என்ற நாவலின் மூலம் கவனம் பெற்ற ஒரு‌ எழுத்தாளர். அவருடைய சிறுகதைத் தொகுப்பு தான் தங்கமயில் வாகனம். ஈழப்படைப்பாளிகளின் வரிசையில் தமிழ்நதியும் மிக முக்கியமான ஒரு நபர்.

பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை – சவிதா அம்பேத்கர். தமிழில் -த.ராஜன் (எதிர் வெளியீடு)

அம்மையார் எழுதிய இந்த நூலை, ‘அம்பேத்கருடைய கடைசி எட்டு ஆண்டு கால வாழ்க்கையின் நேரடிப் பதிவு’ என்று இராமச்சந்திர குகா கூறுகிறார். அந்த நூல் ஒரு தன் வரலாற்று நூல் எனலாம். த.ராஜன் மொழிப்பெயர்த்திருக்கிறார்.

பரிந்துரைத்த புத்தகங்கள்:

திருவேட்கை – தெய்வீகன் (தமிழினி)

இவர் ஒரு ஈழ எழுத்தாளர். புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழக் கூடியவர். அவர் தன்னுடைய கதைகளில் ஈழ நினைவுகளையும், தான் புலம்பெயர்ந்து வாழக்கூடிய மண்ணில் உள்ள ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் பிண்ணனிகளையும் கலந்து ஒரு உலகத்தை உருவாக்கக்கூடியவர்.

சுதந்திரத்தின் நிறம் – லாரா கோப்பா. தமிழில் – B.R. மகாதேவன் (தன்னறம்)

காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள், ஜெகநாதன் ஆகியோரைப் பற்றி வெளிநாட்டிலிருந்து வந்து, அவர்களுடன் தங்கி, அவர்களைப் பற்றி எழுதிய புத்தகம். அறிவு இயக்கத்தில் இருக்கக்கூடிய, இலட்சியத் தன்மையோடு இலக்கியத்தில் இருக்கக் கூடிய எல்லா மானுடர்களும் வாசிக்கக் வேண்டிய ஒரு புத்தகம். இலட்சியத் தன்மையோடு வாழ்க்கையை வாழக் கூடியவர்களின் நிறைவு இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

வேறு வேறு சூரியன்கள் – சந்திரா தங்கராஜ் (சால்ட்)

சந்திரா தங்கராஜ் சிறுகதைகளின் மூலம் அறியப்பட்ட ஒரு எழுத்தாளர். அவர் ஏற்கனவே ‘மிளகு’ என்றொரு கவிதைத் தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார். அதற்குப் பிறகு, ‘வேறு வேறு சூரியன்கள்’ கவிதைத் தொகுப்பு இந்தப் புத்தகக் கண்காட்சியில் சால்ட் பதிப்பகத்தில் வெளியாகியுள்ளது.

வேறு வேறு சூரியன்கள்

இது ஒரு தீமை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதிலுள்ள பெரும்பாலான கவிதைகளில் சூரியன் என்ற ஒன்று பயணித்து வந்துள்ளது. சமகாலத் தமிழ் கவிதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.