பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷரஃப் அறிவித்தாா். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவா் நிறுத்திவைத்தாா்.இது தொடா்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இருந்தாலும், சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூா் உயா் நீதிமன்றம் 2022-ல் தீா்ப்பளித்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வு, 2020-ல் லாகூா் உயா் நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது. அதையடுத்து, முஷரஃபுக்கு எதிரான மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதிசெய்துள்ளது. 

“நான் நேசிக்கும் என் தாய்மண்ணுக்குச் சில வாரங்களில் திரும்பிவந்துவிடுவேன்” – 2016-ம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காக துபாய்க்கு விமானம் ஏறியபோது பர்வேஸ் முஷரஃப் சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக தனது 79-வது வயதில், கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி மரணமடைந்து சடலமாகத்தான் நாடு திரும்பினார். 

மில்டன்

பர்வேஸ் முஷரஃப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இறந்துவிட்ட நிலையில், தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருப்பது, விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இது தொடர்பாக வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம். “இறந்தவர்களை தண்டிக்க முடியாது என்பது எளிமையான லாஜிக். அதே நேரம் பொருளாதார மோசடி வழக்குகளைப் பொறுத்தவரை  இறந்தவர்களிடம் சொத்து இருக்கும் பட்சத்தில் ஒருவர் இறந்தாலும், அவரது வாரிசிடம் அதை வசூலிக்க முடியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கைப் பொறுத்தவரைக்கூட அவர் இறந்த பிறகும், அபராதம் கட்டத்தான் செய்தார்கள்.

முஷரஃப் வழக்கைப் பொறுத்தவரை அண்மையில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு, முட்டாள்தனமானதுதான். இறந்த ஒருவருக்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும். ஒருவர் இறந்துவிட்டால், அவர் நிரபராதி ஆகிவிட்டார் என்பது நம் நாட்டு சட்டம் அல்ல. வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இறந்தவர்களை சேர்க்காதது குறித்தும் சிலர் விமர்சிக்கிறார்கள். எதற்கு அவர்களை சேர்க்க வேண்டும்… சேர்த்தால் தண்டனை கொடுக்க வேண்டும், முடியுமா… எனவே, ஒரு காமன் சென்ஸ்படி நவீனச் சட்டம் அப்படிச் சேர்ப்பதில் எந்தவிதப் பயனும் இல்லை எனக் கருதுகிறது.

அதற்காக அவர்கள் நிரபராதிகள் என்று அர்த்தமில்லை. என்னைப் பொறுத்தவரை இறந்தவருக்கு தண்டனை வழங்குவது அறிவுபூர்வமானது அல்ல. இதன் பின்னணியில் அரசியல் காரணம் உள்ளது. ஒருவர்மீதான பிம்பத்தை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகச் செய்வதுதான் இது” என்றார்.

இது தொடர்பாக வெல்ஃபேர் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹ்மானிடம் பேசினோம். “இறந்த ஒருவருக்கு தண்டனை கொடுப்பது என்பது முட்டாள்தனமானது. அவர் உடலைத் தோண்டி எடுத்தா தண்டனை கொடுக்க முடியும். நிச்சயம் இது அவரையும், அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தையும் இழிவுபடுத்தக்கூடிய, சந்தேகத்திற்கு உள்ளாக்கக்கூடிய ஒரு முயற்சிதான்” என்றார்.

அப்துல் ரஹ்மான்

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காசி ஃபேஸ் ஈசா, “நமது வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். அரசியலமைப்புச் சட்ட அமலாக்கத்தை ரத்து செய்ததற்காக யாரேனும் தண்டிக்கப்படாவிட்டாலும், கடந்த காலத்தில் செய்தது தவறு என்பதை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.