பிக் பாஸ் வீட்டின் விருந்தினர் வருகை என்பது நம் வீடுகளில் நிகழும் உறவினர்களின் வருகையைப் போலத்தான். சிறிய பிரிவுக்குப் பிறகு கூடுகிற குதூகலமும் மகிழ்ச்சியும் வீடெங்கும் பெருகும். அதே சமயத்தில் ஆங்காங்கே பழைய வம்புகள் கிளறப்பட்டு விரோதப் புகையும் கிளம்பும். ஒரு குடும்பத் திருவிழாவின் கலவையான மனநிலை இது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

ஸ்டோர் ரூம் வழியாக அதிகாலையில் அனன்யா உள்ளே வந்தார். இது அவரது மூன்றாவது வருகை. அமைதியாக வந்து அர்ச்சனா மற்றும் மாயாவின் பக்கத்தில் படுத்துக் கொண்டார். அசைவு உணர்ந்து எழுந்த அர்ச்சனா ஆச்சரியத்தில் வாயைப் பொத்திக் கொண்டார். (தூக்க கலக்கத்திலும் ஓவர்ஆக்ட் செய்வது ஒரு கலை!). மாயாவும் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கினார். அண்ணன்மார்கள் இன்னமும் எழாமல் தூங்கிக் கொண்டிருந்தால் சீக்கிரம் விழிப்பு வந்து விட்ட தங்கைமார்களுக்கு அது பிடிக்காது. எனவே சத்தம் ஏற்படும் வகையில் எதையாவது வேண்டுமென்றே செய்து கொண்டிருப்பார்கள். அது போல் விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியோரை உசுப்பி எழுப்பினார் அனன்யா. தினேஷ் ஒரு நல்ல கனவில் இருந்தார் போலும். திகைத்து நோக்கினார். விஷ்ணுவோ ‘நீயா’ என்று சலித்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டார்.

பிக்பாஸ் வீடு

‘டமடமக்கு டம்மா’ என்கிற எனர்ஜியான பாடலைப் போட்டு விட்டார் பிக் பாஸ். நண்பர்களிடம் வீடியோ கால் பேசிய பிறகு விஷ்ணுவிற்கு தெளிவு வந்திருக்கும் என்று நினைத்தேன். ம்ஹூம். தன்னைப் பற்றி வெளியுலகம் என்ன நினைக்கிறது என்கிற பதட்டத்திலேயே அவர் இன்னமும் இருக்கிறார். “ஆல் ஓகே?” என்று அனன்யாவிடம் அவர் ஒரு பிட்டைப் போட “எதுவும் ஓகே இல்லைன்னு சொன்னா.. நீ என்ன பண்ணப் போற?” என்று மணி வாரியது ஒரு நல்ல நகைச்சுவை. “எதையாச்சும் நோண்டி நோண்டி கேட்பான்” என்று சிரித்தார் தினேஷ்.

முன்னாள் போட்டியாளர்களின் வருகை

சபையைக் கூட்டிய அனன்யா “போகும் போது டல்லா இருந்ததால உங்க கிட்ட சரியா பேசல. நீங்க எல்லோரும் ரொம்ப அற்புதமான பிளேயர்ஸ்’ என்று ஒரு சம்பிரதாய உரையை நிகழ்த்தினார். வீட்டிற்கு வயதான விருந்தினர்கள் வந்தால் சின்ன பிள்ளைகள் உள்ளே போய் வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டு தங்களுக்குள் ஏதாவது புறணி பேசுவார்கள். அப்படியாக விஷ்ணுவும் மணியும் சின்ன வீட்டுக்குள் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “அவங்க நம்ம கிட்டலாம் பேச மாட்டாங்க போல” என்று விஷ்ணு அனத்த “அதெல்லாம் அது அதுங்க க்ரூப்லதான் போய் சேரும். நாம நார்மலா இருக்கற மாதிரி இருப்போம்” என்று ஆறுதல் சொன்னார் மணி.

பிரச்சாரத்திற்கு பிக் பாஸ் வாய்ப்பு தந்தது போக, தானே அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருந்தார் மாயா. ஒப்பனை அறையில் காமிரா முன்னால் ‘நான் இந்த கேமை எப்படியெல்லாம் சுவாரசியமாக ஆடினேன், மற்றவர்கள் எப்படி அதை பார்த்தார்கள், அதிலிருந்த விருப்பு, வெறுப்பு என்ன…’ என்பதையெல்லாம் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் சாக்கில் மக்களிடம் பதிவு செய்து கொண்டிருந்தார். ‘மாயா மண்டையைக் கழுவுகிறார்’ என்று புலம்புவதை விடவும் அதிலிருக்கும் உண்மையையும் பொய்யையும் பிரித்தறிந்து பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். இந்தக் காட்சியை எடிட் செய்யாமல் எபிசோடில் இடுவதின் மூலம் பிக் பாஸ் டீமும் ஏதோவொரு செய்தியைச் சொல்கிறார்கள் போலிருக்கிறது.

முகமூடி அணிந்த இன்னொரு நபர் உள்ளே வர “ஜோவிகா” என்று பரவசத்துடன் கத்திக் கொண்டே ஓடிவந்தார் விஜய். தவறான கணிப்பா அல்லது அவரது உள்மன விருப்பமா என்று தெரியவில்லை. வந்தவர் அக்ஷ்யா. முகமூடியுடன் வந்தவரைப் பார்த்து அர்ச்சனாவும் மாயாவும் திகைத்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் போல இந்தக் காட்சியை தொலைவில் இருந்து விஷ்ணுவும் மணியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இவ என்னை சப்போர்ட் பண்ண மாட்டா” என்று முனகினார் மணி. கிச்சனை நோக்கி ஓடிய அக்ஷயா, விஷ்ணுவை குறும்பாக வாழ்த்தி விட்டு ‘கோக்கோ மில்க் வேணும். போட்டுத் தர்றீங்களா?” என்று பழைய பாக்கியைக் கேட்டது சுவாரசியம்.

இது தொடர்பாகத்தான் அக்ஷயாவிடம் முன்பு வம்படியாக ஒரண்டை இழுத்தார் விஷ்ணு. விஷ்ணு சண்டைக்கோழியாக உலவிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஆனால் இப்போதோ ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும் பணியாளர் போல “யெஸ் மேடர். யுவர் ஆர்டர் ப்ளீஸ்” என்று பணிவாகி விட்டார். வெளியில் நடக்கும் விஷயங்களை அக்ஷயாவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பம்முதல் இது. விருந்தினர்கள் பெரிய வீட்டுப் பக்கமே உலவிக் கொண்டிருக்க “இந்தப் பக்கம் யாரையாவது அனுப்பி விடுங்க பிக் பாஸ்” என்று விஷ்ணு வேண்ட “கொஞ்ச நஞ்ச ஒரண்டையா நீ இழுத்து வெச்சிருக்க?” என்று கிண்டலடித்தார் மணி.

நிக்சன் பகிரங்க மன்னிப்பு கோருவாரா?

அடுத்து வந்தவர் வினுஷா. “என்ன நொண்டிட்டே வர்றீங்க?” என்று அவர் தினேஷைப் பார்த்து கேட்க “அப்ப நீங்க லேட்டஸ்ட் எபிசோட்லாம் பார்க்கறதில்ல போல” என்று யூகித்தார் தினேஷ். பிக் பாஸில் கலந்து கொண்டவர்களே அதைப் பிறகு பார்ப்பதில்லை போல. புத்திசாலிகள்தான்.

“நான் பண்றதெல்லாம் தப்பா சரியான்னே தெரியல” என்று குழப்பமணியாக அனத்திக் கொண்டிருந்த விஷ்ணுவிடம் “முயல் டாஸ்க்ல நீங்க நல்லா ஆடினீங்க” என்று வினுஷா சொல்ல விஷ்ணு முகத்தில் பல்பு எரிந்தது. ‘எப்படி செமல்ல” என்று விஷ்ணு உற்சாகப்பட்டு முடிப்பதற்குள் அதில் வெந்நீரை ஊற்றினார் வினுஷா. “ஆக்சுவலி. அதில் மணிதான் ஜெயிச்சிருக்கணும்” என்றதும் விஷ்ணுவின் முகம் தொங்கியது.

வினுஷா

தான் வந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் வினுஷா. “உங்க மேல செம கோபமா இருக்கேன். ‘அவ கீழ படுத்துக்கட்டும்’ன்னு சொல்றீங்க” என்று விஷ்ணு மீது பொய்க் கோபத்துடன் அவர் கேட்க “ஹிஹி.. அது வந்து அப்ப சண்டைக்கோழி மோட்ல இருந்தேம்மா” என்று சமாளித்தார் விஷ்ணு. உண்மையில் இந்தப் பழைய விவகாரங்களை கிளறுவதில் வம்பு பேசும் சுவாரசியம் மட்டும்தான் இருக்குமே தவிர, மற்றபடி நேர விரயம்தான். எல்லோருமே அந்தந்த சூழலில் எதையாவது கோக்குமாக்காக செய்துதான் வைத்திருப்பார்கள். இதைப் புரிந்து கொள்பவர்கள் ‘ஆல் இன் தி கேம்’ என்று அதிகமாக கிளற மாட்டார்கள்.

“தம்பி போன் பண்ணானா?” என்று நிக்சனைப் பற்றி விசாரித்தார் தினேஷ். “இங்க வந்து காமிரா முன்னாடி மன்னிப்பு கேக்கறதா சொன்னான். இதே காமிரா முன்னாடிதானே தப்பு பண்ணான்?!” என்று வினுஷா சொன்னது சரியானது. இதை நிக்சனே சொன்னாரா அல்லது வினுஷா வற்புறுத்தினாரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பொது மன்னிப்பு நிகழ்வது நல்ல விஷயம்தான்.

கிடுக்கிப்படி கேள்விகளால் அர்ச்சனாவை தவிக்க வைத்த வினுஷா

அடுத்ததாக அர்ச்சனாவிடம் நகர்ந்தார் வினுஷா. தன்னுடைய கிடுக்கிப்பிடி கேள்விகளின் மூலமாக வலையை இறுக்கமாகப் போட்டார் வினுஷா. அர்ச்சனாவிற்கு இது தர்மசங்கடம். தப்பிக்க முயன்றால் தன்னுடைய தவறு அப்பட்டமாக அம்பலமாகும். அதே சமயத்தில் சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்ய முடியாது. இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நேரத்தில் கெட்ட பெயரை வாங்க முடியாது. சூழலை திறமையாகவே சமாளித்தார் அர்ச்சனா.

அக்‌ஷயா

“நிக்சன் என்னைப் பத்தி தப்பா பேசியிருக்கான். நீங்க என்ன சொல்றீங்க.. ப்ரீயா விடு. மக்கள் மறந்துடுவாங்கன்னு அசால்ட்டா அவன் கிட்ட சொல்றீங்க. ஆனா பின்னாடி ஒரு சண்டை வரும் போது என் பெயரை சரியா யூஸ் பண்றீங்க. நான்தானே இங்க விக்டிம்? நீங்க முதல்லயே தட்டிக் கேட்டிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா உங்க சண்டைக்குத்தான் என்னைப் பயன்படுத்திக்கிட்டீங்க” என்று வினுஷா கேட்பது சரியான கேள்வி. “நிக்சன் செஞ்சது டாஸ்க்ல வந்த போது அவன் ரொம்ப பயந்துட்டான். கை, கால்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு. அதனால அப்படிச் சொன்னேன். அதுக்கு அப்புறம் பண்ணது வேணுமின்னுதான். முந்தின நாள் அவன் என் கிட்ட வம்பிழுத்தான். அதனால அவனை டார்கெட் பண்றதுக்குத்தான் இதை இழுத்தேன். ஸாரி” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் அர்ச்சனா. அவருக்கு வேறு வழியும் கிடையாது.

“விஷ்ணு இதை தட்டிக் கேட்டார். எனக்கு சந்தோஷமா இருந்துச்சு” என்று வினுஷா சொன்னது எத்தனை தூரம் சரியென்று தெரியவில்லை. ஏனெனில் அப்போது விஷ்ணுவும் நிக்சனை வம்பிழுக்கத்தான் இந்த தலைப்பை ஆரம்பித்தார். வினுஷா மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால் இந்த விவகாரத்தை மீண்டும் கிளறாமல் இருப்பதுதான் ஜென்டில்மேன்தனம். “எல்லோருமே தப்பு பண்ணுவாங்கதான். ஆனா அப்புறம் மனசு உணர்ந்து மன்னிப்பு கேட்கணும்” என்று வினுஷா சொன்னது சரியானது. இவரிடம் ஒரு இயல்பான ‘க்யூட்னஸ்’ இருக்கிறது. அமைதியாக இருப்பவர்களை மக்கள் பொதுவாக கவனிப்பதில்லை.

பிக் பாஸ் திரையிட்ட ‘மாட்னி ஷோ’ காட்சிகள்

முகமூடி அணிந்து சைக்கிளில் வந்த ஒரு நபர் ‘மாட்னி ஷோவிற்கான’ பிட்நோட்டீஸ்களை விநியோகித்து விட்டுச் சென்றார். கிராமங்களில் திரையிடுவதற்காக ‘டூரிங் டாக்கீஸ்’கார்கள் வந்தால் மாட்டு வண்டியில் இப்படி துண்டுப் பிரசுரங்களின் மூலம் விளம்பரம் செய்வார்கள். இந்த கலர் நோட்டீஸ்களை பொறுக்கிச் செல்வதில் சிறுவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். நிலையான திரையரங்கம் அதிகமில்லாத காலக்கட்டத்தில் ஊர் ஊராக சென்று திரையிடுவதால்தான் ‘டூரிங்’ என்கிற பெயர் வந்தது. மௌனப்பட யுகத்தின் காலம் முடிந்து சினிமா பேச ஆரம்பித்த சமயத்தில் ‘பேசும் படத்தை நாங்கள் திரையிடுகிறோம்’ என்பதை உணர்த்துவதற்காக ‘டாக்கீஸ்’ என்கிற பெயரும் வந்தது. இதெல்லாம் அனைவருக்கும் தெரியும். என்றாலும் தெரியாதவர்களுக்காக.

அர்ச்சனா, மாயா

சில வீடியோ காட்சிகளை போட்டியாளர்களுக்குத் திரையிடுவதற்காக இந்த நோட்டீஸ் அளிக்கும் விளம்பர நூதனத்தை செய்திருந்தார் பிக் பாஸ். முதலில் ‘விதிமீறல்’ என்னும் புதிய திரைப்படத்தின் வெளியீடு நடந்தது. மக்கள் செய்த விதிமீறல்கள் சாட்சியங்களோடு அம்பலப்படுத்தப்பட்டன. ஆண்கள் சீரியஸான முகத்தோடு பார்த்துக் கொண்டிருக்க பெண்கள் தரப்பிலிருந்து கும்மாளமாக இருந்தது. இந்த விதிமீறல் விவகாரத்தில் மாயா, பூர்ணிமா உள்ளிட்டவர்களின் காட்சிகள் இல்லாமல் போனது தற்செயலா அல்லது திட்டமிட்ட எடிட்டிங்கா? (ஊருக்குள்ள பேசிக்கறாங்கப்பா!)

அடுத்த திரைப்படம் “ஆக்ஷன் அதிரடிக் காட்சிகள்”. வீட்டில் நடந்த சண்டைகள் மிக சுவாரசியமான முறையில் சவுண்ட் எஃபெக்ட்டோடு தொகுக்கப்பட்டிருந்தன. காதலன் திரைப்படத்தின் ‘பேட்ட ராப்’ பாடலின் இறுதியில் வரும் ‘எவ அவ?’ என்கிற முத்தாய்ப்பான ஒலியைப் போல ‘ஷட்அப்’ என்று ஹைடெசிபலில் அர்ச்சனா கத்தும் காட்சியோடு வீடியோ நிறைந்தது. ‘நீயா. பேசியது. என் அன்பே… நீயா பேசியது’ என்பது மாதிரி திகைப்பான சிரிப்புடன் பார்த்தார் அர்ச்சனா.

சண்டைக்காட்சிகளின் அபத்தமும் ஆபத்தும்

இந்த வீடியோவின் மூலம் இரண்டு விஷயங்களை நம்மால் உணர முடியும். ஒன்று, சண்டையின் போது மனிதர்களின் முகங்களும் உடல்மொழியும் எத்தனை விகாரமாகி விடுகிறது என்பது. நாம் கோபப்பட்டிருந்த தருணங்கள் இப்படி வீடியோவாக வெளியிடப்பட்டால் திகைத்து அவமானத்தில் உறைந்து விடுவோம். அடுத்த முறை கோபம் வரும் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது, கடந்த காலத்தின் கோபங்கள், எப்படி சில நாட்கள் கழித்துப் பார்க்கும் போது அற்பமான காமெடியாக மாறி விடுகிறது என்பது. ‘இதற்கா அப்படிச் சண்டையிட்டோம்” என்று நமக்கே நகைச்சுவையாகத் தோன்றும்படிதான் பல கோபதாபங்கள் அமைந்திருக்கும்.

தினேஷ், மணி

“இந்தப்படத்துல விஷ்ணுதான் ஹீரோ. அர்ச்சனாதான் ஹீரோயின் போல” என்று அவர்களை ஜாலியாக கோர்த்து விட்டார் மாயா. அவர்கள் தொடர்பான சண்டைக்காட்சிகள் அதிகம் வந்த குஷி அவருக்கு. அப்செட் ஆகிய அர்ச்சனா வெளியில் தனிமையில் நடந்து சென்றார். “வேணுமின்ட்டேதான் பண்ணியிருக்காங்க” என்று வீடியோ காட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்தார் தினேஷ்.

சண்டைக்காட்சி வீடியோ முடிந்தவுடன் “பிக் பாஸ்…இருங்க இந்தப் படம் இன்னமும் முடியல. சூட்டிங் பாக்கி இருக்கு’ என்கிற செய்தியை மக்கள் சொல்ல விரும்பினார்கள் போல. புத்தம் புதிதாக ஒரு சண்டை துவங்கியது. ‘விஷ்ணு.. கிஷ்ணு’ என்கிற மாதிரி இயல்பான உரையாடலில் அர்ச்சனா சொல்ல, ‘அந்த மாதிரி சொல்லாத’ என்று எச்சரித்தார் விஷ்ணு. ‘ஸாரி ப்ரோ’ என்று அர்ச்சனா சொல்லியிருந்தால் விஷயம் பெரிதாகியிருக்காது. “நான் ஒண்ணும் சொல்லல.. அவங்க சொன்னது’ என்று அலட்சியமாக சொன்னார் அர்ச்சனா.

வம்பிழுத்த தினேஷ் – அப்செட் ஆன அர்ச்சனா

இந்த உடல்மொழி தினேஷிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே ‘தொட்டாற்சிணுங்கி’ என்கிற வார்த்தையின் மூலம் அர்ச்சனாவிடம் வம்பிழுத்தார். அதற்கு அர்ச்சனா கோபித்துக் கொள்ள “இதே மாதிரிதானே.. மத்தவங்களுக்கு இருக்கும். உன்னை மட்டும் சொன்னா கோபம் வருதா?” என்று கேட்க இருவருக்கும் வாக்குவாதம் நீண்டது. “நீங்க ஏன் இது நடுவுல வர்றீங்க?” என்று மல்லுக்கட்டினார் அர்ச்சனா. இறுதிக்கட்டத்தில் இவ்வாறு சண்டையிடுவது அவர்களின் மீதான மதிப்பைக் குறைத்து வாக்குகளை சிதைக்கலாம். இது விஷ்ணுவிற்குப் புரிகிறது போல.இது அவருடைய விவகாரம் என்றாலும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது புத்திசாலித்தனம்.

அர்ச்சனா செய்ததைப் பற்றி காரசாரமாக விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தார் தினேஷ். மாங்காய் துண்டுகளை நடுவில் கொண்டு வைத்தார் மணி. ‘இன்னுமா சண்டை போடுகிறீர்கள், மாங்காய் மடையர்களே?!’ என்பதின் குறியீடா அது?! “இன்னமும் மூணே நாள். இங்க இருந்து போய்த் தொலையறேன். என்னை தனியா இருக்க விடுங்க” என்று அனன்யா மற்றும் மாயாவிடம் அழுது குமுறிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. (இதனால் அனுதாப ஓட்டுகள் குவியலாம்!. பொதுவாக மக்களுக்கு இந்த மாதிரி சென்டியாக வாக்களிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்!).

தினேஷ்

தினேஷ் ‘தொட்டாற் சிணுங்கி’ என்று சொன்னால்தான் என்ன? உடனே அதே மாதிரி செய்து அதை நிரூபிக்க வேண்டுமா என்ன? மேலும் தினேஷ் அந்த விவகாரத்தை ஆரம்பித்திருந்தால் கூட தவறு எனலாம். இவர் விஷ்ணுவை கிண்டலாக குறிப்பிட்டு பின்பு அலட்சியமாக பேசியதால்தானே தினேஷின் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டி வந்தது?!

மாயாவைப் பார்த்து பதுங்குகிறாரா விஷ்ணு?

அக்ஷயாவை அமர வைத்து வம்பு பேச ஆரம்பித்தார் மாயா. அப்போதுதான் காமிராவில் சில விஷயங்களை பதிவு செய்ய முடியும். “நீயெல்லாம் அவங்களை விட எவ்வளவோ பெட்டர்” என்று அக்ஷயா குறித்து மாயா சொல்ல “வெளில போய் பார்த்தேன், விஷ்ணு செஞ்ச காரியங்களை. விரும்புனா அவரை வெச்சு செஞ்சுடலாம்” என்றார் அக்ஷயா. “அவன் பூர்ணிமாவுக்கு பண்ணதெல்லாம் கொடுமை. ‘அவங்கதான் என்னை லவ் பண்ணாங்க.. நான் பண்ணலை’ன்னு சொல்லிட்டுத் திரிஞ்சான். டிக்கெட் டூ பினாலே ஆட்டம்லாம் கேவலமா ஆடினான். பைனல் மட்டும் வரலைன்னா போன வாரமே போயிருப்பான்” என்று மாயா சொல்ல, அந்தப் பக்கமாக கடந்து போன விஷ்ணு, பிறகு தினேஷிடம் “வெச்சு செஞ்சதா பேசிக்கறாங்க. யாரைன்னு தெரியல” என்று அனத்த ஆரம்பித்தார். விஷ்ணு ஏன் ஒரு மாதிரி பதட்டமாகவும் குற்றவுணர்விலும் இருக்கிறார் என்று தெரியவில்லை.

மேலும் பல விருந்தினர்கள் உள்ளே வருவார்கள். உற்சாகத்தோடு பழைய வம்புகளும் கிளறப்படும். நிக்சன் வினுஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில எவிக்சன் உண்டு என்கிறார்கள். உங்களைப் பொறுத்த வரை யாரை வெளியேற்றலாம் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.