பெட்டியோடு பூர்ணிமா வெளியேறி விட்டார். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்த சீசன் உயிர்ப்போடு இருந்ததற்கு பிரதானமான காரணங்களில் ஒருவராக இருந்தவர் பூர்ணிமா. இனி இந்த ஆட்டத்தின் கிளைமாக்ஸ் எப்படியிருக்கும்?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

நாள் 96-ன் காலையில் ஒலித்த பாடல் என்னவென்று புரியவில்லை. அதைக் கண்டுபிடிப்பவர்களுக்கே ஒரு பரிசுப்பெட்டி தரலாம். ஒப்பனை அறைதான், மாயா – பூர்ணிமாவின் சதியாலோசனை அறை எனலாம். “பயங்கர குழப்பமா இருக்கு. மக்களா பார்த்து அனுப்புற வரைக்கும் இருப்பேன்னு சொல்லிட்டேன். தப்பாயிடுமோன்னு பயமாயிருக்கு” என்று பெட்டி எடுப்பதைப் பற்றித் தவிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. “15 வரைக்கும் போவாங்கன்னு தோணுது. இன்னிக்கு எடுக்கறது புத்திசாலித்தனமான முடிவு. ரன்னர் அப் காசு வந்துடும்” என்று தினேஷ் சொல்ல, அதை ஆமோதித்தார் விஷ்ணு. ஃபைனலிஸ்ட்டாக இல்லையென்றால், பெட்டி எடுக்கும் ரேஸில் விஷ்ணுவும் நிச்சயம் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

Bigg Boss 7 Day 96

மூன்று நண்பர்களோடு ஒரு ரோட் டிரிப்

இன்றைக்கும் ஏதாவது சண்டையை மூட்டி விடுவோம் என்று முடிவெடுத்த பிக் பாஸ், காலையிலேயே ராவுகாலத்தை ஆரம்பித்தார். “இங்கிருந்து மூன்று பேரை அழைத்துக் கொண்டு ரோட் டிரிப் செல்வதென்றால் யாரை அழைத்துச் செல்வீர்கள், எந்த இடம்?” என்பது கேள்வி. ‘நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகப் போறேன்’ என்று போட்டியாளர்களின் மைண்ட் வாய்ஸில் வந்திருக்கலாம். என்றாலும் பதில் சொன்னார்கள்.

வழக்கம் போல் மங்கலம் போட்டு ஆரம்பித்த அர்ச்சனா, “கேர்ள்ஸ் டிரிப்பா போகணும். ஸோ… மாயா அண்ட் பூர்ணிமா. மூணு பேருன்றதால தினேஷ் ப்ரோவையும் அழைச்சுட்டு போவேன்” என்றார். “எதுக்கு டயர் மாத்தறதுக்கா?” என்று சிரித்தார் தினேஷ். விசித்ராவைத் தவிர்த்தது, அர்ச்சனாவின் புத்திசாலித்தனம் என்றால் ‘கேர்ல்ஸ் மட்டும்’ என்று சொல்லி விசித்ராவின் வயதையும் கூடவே மறைமுகமாகச் சொல்லிக் காட்டியது குறும்பு. அர்ச்சனா செல்ல விரும்பும் இடம் ‘பனாயி’. கோழிக்கோடு மாவட்டத்தின் அருகே.

அடுத்து எழுந்த விஷ்ணு, “என் டார்ச்சரைத் தாங்கிக்கற பாய்ஸ் டீமை கூட்டிட்டுப் போவேன்” என்று மணி, தினேஷ், விஜய்யை சொன்னது எதிர்பார்த்ததுதான். “ரெண்டு ஸ்பெஷலான இடம் இருக்கு. அதுக்கு அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ராவைக் கூட்டிட்டு போவேன்” என்றார் மாயா. அடுத்து எழுந்த மணி “புலம்பல் ராஜா விஷ்ணு, ஆர்வக்கோளாறு தினேஷ், ஃபெர்ஃபெக்ட் பிளான் விஜய்” என்று பட்டப்பெயர் வைத்துச் சொன்னார். இதில் ரவீனா இல்லாமலா? அவரோடு கூல் சுரேஷூம் இருப்பாராம்.

இந்த டாஸ்க்கில் அனைவரும் தங்களுக்குச் சௌகரியமான நட்புகளையே சொன்ன போது பூர்ணிமா மட்டும் வித்தியாசமாக எதிர் குரூப்பைச் சொன்னது சுவாரசியம். “இவங்க கூடல்லாம் நல்லா பழகிட்டேன். ஆனா வீட்டுக்கு வெளில அவங்க எப்படி இருக்காங்கன்னு பார்க்கணும்” என்று விஷ்ணு, தினேஷ், மணி ஆகியோரைச் சொன்னார் பூர்ணிமா. (விஷ்ணுவா?! என்ன இருந்தாலும் அந்த ஜெஸ்ஸி… இன்னமும் பத்திரமாகத்தான் இருக்கிறார் போல!) ஆனால் இதை பூர்ணிமா விவரித்த முறைதான் பயங்கரமாக இருந்தது. “மூணு பேரையும் கூட்டிக்கிட்டு மேப்லயே இல்லாத எங்காவது காட்டுக்குள்ள போகணும்” என்று போட்டுத்தள்ளுவது மாதிரியே சொல்லிக் கொண்டிருந்தார்.

Bigg Boss 7 Day 96

பெட்டியை எடுக்க முடிவு செய்த பூர்ணிமா

பூர்ணிமா சொன்னது சர்காஸ்டிக் என்றாலும் மாயாவும் விசித்ராவும் அதை ரசிக்கவில்லை. “என்னது… காட்டுக்கு போகணுமா. ஏன் பூர்ணிமா ஏன்… நாங்கள்லாம் கூட வந்தா ஆகாதா?” என்று உரிமையோடு கேட்டார் விசித்ரா. “அவ்ளோ பெரிய மன்மதனா அவன்? நீயா ஏன் திரும்பத் திரும்ப போற?” என்று விஷ்ணு குறித்து எரிச்சலானார் மாயா. இது விஷ்ணுவின் காதில் விழுந்து விட்டது போல. “நான் மன்மதனும் கிடையாது. இவங்க ஒண்ணும் ரம்பை ஊர்வசியும் கிடையாது. கம்முன்னு இருந்தா வந்து வந்து நோண்டறது” என்று முனகினார். ஏன் மாயாவிடம் போய் சண்டையிடவில்லை?

“நான் இல்லாம நீங்க எப்படி இருப்பீங்க… எப்படி அவங்களை சமாளிப்பீங்க” என்று பூர்ணிமா கேட்க “இவிய்ங்கள்லாம் ஒரு ஆளா. லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணுவேன்” என்றார் மாயா. செய்யக்கூடியவர்தான்.

“பணப்பெட்டியை எடுக்க இன்னமும் கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. தொகை கூடவும் செய்யலாம். குறையவும் செய்யலாம். நோ பிரஷர்” என்று சொல்லி பிரஷரைக் கூட்டினார் பிக் பாஸ். ஒரு மர்மநபர் உள்ளே வந்து தொகையை 16 லட்சமாக உயர்த்தி விட்டுச் செல்ல, “லவ்யூண்ணா” என்று வழக்கம் போல் கத்தி கலாட்டா செய்தார்கள். நீண்ட நேரமாகத் தயக்கத்தில் இருந்த பூர்ணிமா முடிவு செய்த தருணம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். மாயாவைத் தனியாக அழைத்துச் சென்று கட்டியணைத்து விட்டு விசித்ராவிடம் தன் முடிவைச் சொன்னார். “நான் கௌம்புறேன். முடிவு பண்ணிட்டேன்” என்று சொன்ன பூர்ணிமாவிடம் “அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டார் விசித்ரா. அர்ச்சனா “ஏங்க…” என்று தடுக்க முயன்றார்.

Bigg Boss 7 Day 96

இந்த விஷயம் எதிர் குரூப்பிற்குத் தெரிய வர “பூர்ணிமா பெட்டி எடுக்கப் போகுதா” என்று சைகையைில் கேட்டார் தினேஷ். அடிபட்ட காலாக இருந்தாலும் சமாளித்து எழுந்து நடந்த தினேஷ், மணியிடம் செய்தி சொல்ல விரும்பினார். ஆனால் விஷ்ணுவோ பாத்ரூம் கதவையே உடைத்து விடுவார் போலிருக்கிறது. “மணி… மணி… மணியாகுது. சீக்கிரம் வாடா… நீ எடுத்துரு மச்சான்… சொன்னா கேளு… பூர்ணிமா எடுக்கப் போகுது.” என்று அவர் அவசரப்படுத்த, மணியோ “எனக்கு ஐடியாவே இல்ல” என்று தலையைத் துடைத்துக் கொண்டே வந்தார். விஷ்ணுவிற்கு ஏன் இந்த வேலை… எனில் முன்பே மணிக்கு ஆலோசனை சொல்லி எடுக்க வைத்திருக்கலாமே… அவ்வளவு நேரம் பெட்டி அங்கேதானே இருந்தது? பொறாமையில் இரு குரூப்பும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.

பூர்ணிமாவின் மன்னிப்பும் ஃபேர்வெல் உரையும்

“நீங்க எடுக்கறதா இருந்தா எடுக்கலாம்” என்ற விஷ்ணு ‘ஸ்மார்ட் மூவ்’ என்று பூர்ணிமாவை பாராட்டவும் தவறவில்லை. ‘பெட்டியை எடுத்தவர்கள் மெயின் டோர் வழியாக வெளிய வரலாம்’ என்று முன்னர் சொன்ன பிக் பாஸ், பிறகு கடைசியாக ஒரு கன்டென்ட் தரட்டும் என்று நினைத்தாரோ, என்னவோ, “கடைசியா ஏதாவது சொல்றதா இருந்தா சொல்லலாம்” என்று தூக்குத்தண்டனை கைதிக்குச் சொல்வது போலச் சொன்னார். தனது சொற்பொழிவை ஆற்றத் துவங்கினார் பூர்ணிமா. சும்மாவே ஒரு எபிசோடுக்குப் பேசுவார்! இப்போது கேட்க வேண்டுமா?!

“இதுவே ஆல்மோஸ்ட் நூறு நாள்தான். எனக்கு திருப்தியா இருக்கு. ஃபைனல் போவேன்னு இருநூறு சதவிகிதம் நம்பிக்கை இருக்கு. பெட்டி வெச்சப்பே முடிவு பண்ணிட்டேன். பயங்கரமா கேம் ஆடியிருக்கேன். ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்திருக்கேன். உங்களை ஓட விட்டிருக்கேன். நான் உங்களையெல்லாம் அட்டாக் பண்ணதுக்கு சாரி” என்று பூர்ணிமா சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ததெல்லாம் அநாவசியமானது. டிராமாவும் கூட!

Bigg Boss 7 Day 96

“ச்சே… ச்சே… இது கேம்தானே?” என்று ஸ்போர்ட்டிவ்வாக சொன்னார் தினேஷ். “நீங்க பதிலுக்கு விழ வேணாம்” என்று பூர்ணிமாவிடம் வழக்கமான குறும்பு வெளிப்பட்டது. “செம ஜாலியா போறேன். இறுதி வரைக்கும் இருந்துட்டேன். திருப்தியா இருக்கு. நிறைய நண்பர்கள் எனக்கு உதவியிருக்காங்க. குறிப்பா மாயா மெயின் சப்போர்ட். அதுக்கு நன்றியோட இருப்பேன். என்னை மாதிரி நண்பர் கிடைச்சதும் மாயாவுக்கு அதிர்ஷ்டம்தான். விசித்ரா டைட்டில் வின் பண்ணணும்ன்றது ஆசை. அர்ச்சனாவிற்கு நடக்கப் போறது உண்மையா இருக்கலாம்” என்று முடித்தார்.

இதுவரையான மொத்த சீசனில் பிக் பாஸை நேரடியாக விரோதித்துக் கொண்ட ஒரே போட்டியாளர் பூர்ணிமாவாகத்தான் இருப்பார். (வனிதா ரேஞ்ச் வேற!) “பூர்ணிமா ரவி well played” என்று பிக் பாஸ் சொல்ல “லவ் யூ பிக் பாஸ். நான் உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சுக்கங்க” என்று பூர்ணிமா கலாய்க்க “None Taken” என்று பெரியவர் சொன்னது விவேகமான பதில். தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஒருவரின் வசையை நாம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அது நமக்குச் சொந்தமாகும்.

மாயா – பூர்ணிமா – நட்பின் இலக்கணம்

இத்தனை ரகளையான வெளியேற்றம் இதற்கு முன்பு நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை. ‘காசு மேல காசு வந்து’ என்கிற பாடல் ஒலிக்க பூர்ணிமாவும் மற்றவர்களும் இறங்கி குத்தி ஆடியது சுவாரஸ்யமான காட்சி. பூர்ணிமா பெட்டி எடுத்தது குறித்து மணிக்கு சந்தோஷமா, இல்லையா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பாடல் ஒலித்ததுமே தன்னிச்சையாக அவர் ஆடத் துவங்கியது ஒரு நல்ல டான்ஸ் மாஸ்டருக்கான அறிகுறி. (“அய்யோ… அந்தப் பாட்டைப் போடாதீங்க… என்னால வேலை செய்ய முடியாது” என்று ‘மின்சார கனவு’ படத்தில் பிரபுதேவா கதறுவார்). பூர்ணிமாவை வழியனுப்பும் வகையில் மாயா பாடியதும் அருமையாக இருந்தது. (என்னவொரு குரல்!). பின்னணி இசை இல்லாமல், சில குரல்கள் மட்டுமே கவரும். மாயாவிற்கு அப்படியொரு குரல் வாய்த்திருக்கிறது.

Bigg Boss 7 Day 96

“தாங்க்யூ பூர்ணிமா. எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுக்காம பேசின. நான் உனக்கு சப்போர்ட்டா இருந்ததா சொன்ன. நீதான் எனக்கு மாரல் சப்போர்ட்டா இருந்திருக்கே” என்று கேமரா முன்பாக வந்து நெகிழ்ந்து பேசினார் மாயா. “போற போது கூட என்னைக் கலாய்ச்சிட்டுப் போயிட்டா” என்று விஷ்ணு அனத்த “நல்ல பிளேயர்” என்று பாராட்டினார் தினேஷ். “இந்த ஒரு வாரம் மாயா என்ன பண்ணப் போறாங்கன்றதுதான் அவங்க கேமை முடிவு பண்ணப் போற விஷயம். சப்போர்ட் சிஸ்டம் கூட இல்ல” என்று மாயா குறித்து தினேஷ் சொன்னது சரியான அப்சர்வேஷன். மாயா டைட்டில் ஜெயித்தால் கூட தினேஷ் உள்ளூற அதை விரும்புவார் என்று தோன்றுகிறது.

தொலைக்காட்சித் தொடர்கள் – பழைய சினிமாக்களின் வாசனை

இதுதான் சாக்கு என்று இரண்டு புதிய தொலைக்காட்சித் தொடர்களின் அறிமுகத்தை நடத்திவிட்டார் பிக் பாஸ். பழைய தமிழ் சினிமாக்களின் கதையை அப்படியே எடுத்துப் போட்டு தொடராக்குவதை கூச்சமே இல்லாமல் செய்கிறார்கள். புரொமோவிலேயே அதன் வாசனை நன்றாகத் தெரிகிறது. இதுவும் அப்படியில்லாமல் இருக்கட்டும். ஸ்கூல் யூனிபார்மில் வந்த சிறுமிதான் ஹீரோயினாம். கூட வந்தவர், சிறுமியின் தாய்மாமாவோ என்று பார்த்தால் அவர்தான் ஹீரோவாம். நல்லது. எப்படியும் அடுத்த வருடத்திற்குள் இவர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விடுவார்கள். அதுதானே டிசைன்?!

Bigg Boss 7 Day 96

வந்திருந்த நண்பர் தன்னைக் குழப்பி விட்டுச் சென்றதை காமெடியாக விவரித்துக் கொண்டிருந்தார் விஷ்ணு. “அடிச்சுக்கூட கேப்பாங்க. சொல்லிடாதீங்க. டேய் எதைடா” என்கிற காமெடி மாதிரி “நல்லா குழப்பிட்டுப் போயிட்டான். இவிய்ங்களை எல்லாம் யார் உள்ளே விட்டது?” என்று விஷ்ணு புலம்பியதை மற்றவர்கள் ரசித்து சிரித்தார்கள். விஷ்ணுவிற்குள் ஒரு இயல்பான நகைச்சுவை நடிகர் இருக்கிறார்.

Bigg Boss 7 Day 96

இன்று பஞ்சாயத்து நாள். பிக் பாஸை மட்டுமல்ல, கமலைக் கூட பூர்ணிமா விட்டு வைக்கவில்லை. எனவே இருவரும் மேடையில் தோன்றும் காட்சி எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும். கடந்த சீசன்களில் ‘யார் டைட்டில் வின்னர்? இவரா, அவரா’ என்று இரண்டு சாய்ஸ்கள் மட்டுமே கடைசியில் எஞ்சியிருக்கும். ஆனால் இந்த சீசனில் அப்படிக் கூட தோன்றவில்லை என்பதுதான் விநோதம்.

அப்படி இரண்டே சாய்ஸ் என்றால் யார் அந்த இருவர்? அதாவது வின்னர் மற்றும் ரன்னர்? கமென்ட்டில் வந்து சொல்லுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.