`தமிழ்­நாடு உள்­பட அனைத்து மாநில நிதி ஆதா­ரங்­க­ளும் சுரண்­டப்­பட்டு சுருட்­டப்­ப­டு­கின்­றன. கடந்த ஆண்டுகளில் நாம் 1 லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் நிவாரண நிதி கேட்டால் மத்திய அரசு வெறும் 5000 கோடியைத்தான் ஒதுக்கியிருக்கிறது’ என தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தனது தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறது. `அப்படியென்றால்… நாங்கள் கொடுக்காத நிதியை நீங்கள் எப்படி கொடுத்து சமாளித்தீர்கள்… கணக்கு காட்டுங்கள்?’ என பா.ஜ.க-வும் கடுமையாக கேள்வி எழுப்பியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் – பிரதமர் மோடி

தமிழ்நாட்டை கடந்த டிசம்பர் மாதம் உலுக்கியெடுத்த மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத வெள்ளம் ஆகியவை ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பாக `மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை’ என்ற புகாரை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில், தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தனது தலையங்கத்தில் `யாருடைய பணம் இது?’ என்ற தலைப்பில் செந்தில்-கவுண்டமணியின் வாழைப்பழக் காமெடியைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறது.

`யாருடைய பணம் இது?’ – முரசொலியில் வந்த தலையங்கம்:

“கவுண்­ட­மணி – செந்­தில் வாழைப்­ப­ழக் காமெ­டி­யைப் பார்த்­தது தமிழ்­நாடு. ‘ஒரு பழம் இங்க இருக்கு… இன்­னொரு பழம் எங்க?’ என்று கேட்­பார் கவுண்­ட­மணி. ‘அது தான்ணே இது’ என்­பார் செந்­தில். ஒன்­றிய அர­சி­டம் நிதி கேட்­டால், ‘நீங்­கள் செலவு செய்­யும் பணம் எல்­லாம் எங்­கள் பணம் தான்’ என்று சொல்­கி­றார்­கள். மாநில அர­சு­க­ளி­டம் இருந்து பணத்தை வசூ­லித்து எடுத்­துச் செல்­லும் ஒன்­றிய அரசு, மாநில அர­சுக்கு அள்­ளி­யும் தரு­வது இல்லை, கிள்­ளி­யும் தரு­வது இல்லை. ஆனால் எள்ளி மட்­டும் நகை­யா­டு­கி­றது.

சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் சீர­மைப்பு மற்­றும் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக தற்­கா­லிக நிவா­ர­ணத் தொகை­யாக 7,033 கோடி ரூபா­யும், நிரந்­தர நிவா­ர­ணத் தொகை­யாக 12,659 கோடி ரூபா­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் கோரி உள்­ளார்­கள். திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, தென்­காசி மாவட்­டங்­க­ளில் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் இன்­னும் முழு­மை­யாக அள­வி­டப்­ப­ட­வில்லை. எனவே, அவ­சர நிவா­ரண நிதி­யாக 2 ஆயி­ரம் கோடி ரூபாய் தர­வேண்­டும் என்­றும் முத­ல­மைச்­சர் அவர்­கள் பிர­த­ம­ரி­டம் கோரி­யுள்­ளார்­கள். ஆக மொத்­தம் 21 ஆயி­ரத்து 692 கோடி ரூபாய் தமிழ்­நாடு அர­சால் ஒன்­றிய அர­சி­டம் கேட்­கப்­பட்­டுள்­ளது. இந்த பணத்தை அவர்­கள் தரத் தயா­ராக இல்லை.

முரசொலி தலையங்கம்

அதற்­காக மக்­களை காத்­தி­ருக்க வைக்க முடி­யுமா? சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் மாவட்­டங்­க­ளில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 6 ஆயி­ரம் ரூபாயை குடும்ப அட்டை அடிப்­ப­டை­யில் தரச் சொல்லி விட்­டார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இதற்கு மட்­டும் 1,486 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்­கீடு செய்­துள்­ளது. இது 24 லட்­சத்து 25 ஆயி­ரம் குடும்­பங்­க­ளுக்கு பய­ன­ளிக்­கும் வகை­யில் அமைந்­துள்­ளது. புயல் மழை­யால் சாலை­கள், பாலங்­கள், பள்­ளிக் கட்­ட­டங்­கள், அரசு மருத்­து­வ­ம­னை­கள், டிரான்ஸ்­பார்­மர்­கள், மின் கம்­பங்­கள், பழு­த­டைந்த துணை மின் நிலை­யங்­கள் குடி­நீர் தொட்­டி­கள், தெரு­வி­ளக்­கு­கள், கிரா­மச் சாலை­கள் ஆகி­ய­வற்றை சீர் செய்­திட வேண்­டும். அதற்­கும் நிதி அதி­கம் தேவைப்­ப­டு­கி­றது. பொது­மக்­க­ளின் இழப்­பு­க­ளுக்கு நிதி வழங்க வேண்­டும். இவை எதை­யும் மன­தில் கொள்­ள­வில்லை ஒன்­றிய அரசு. ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 6000 ரூபாய் கொடுத்­தது, இது மோடி பணம் தான் என்று வஞ்­ச­கப் பொய்யை அவிழ்த்து விடத் தொடங்­கி­விட்­டார்­கள்.

முரசொலி

24 லட்­சம் பேருக்­குக் கொடுங்­கள் என்று ரூ.1,486 கோடியை ஒன்­றிய அரசு கொடுத்­தி­ருந்­தால்­தான் அது மோடி பணம். தமிழ்­நாடு அரசு தனது கரு­வூ­லத்­தில் இருந்து எடுத்­துத் தரும் பணம் எப்­படி மோடி பணம் ஆகும்? இது மோச­டித் தனம் அல்­லவா? நமக்கு முத­லில் ரூ.450 கோடி­யும், பின்­னர் ரூ.450 கோடி­யும் ஒன்­றிய அரசு வழங்கி இருக்­கி­றது. இவை இரண்­டும் மிக்­ஜாம் புயல் பாதிப்­பு­க­ளுக்­கா­கத் தரப்­பட்ட சிறப்பு நிதி அல்ல. வழக்­க­மாக பேரி­டர் காலங்­க­ளில் தரு­வ­தற்­காக வைத்­தி­ருக்­கும் நிதி­யில் இருந்து எடுத்­துத் தந்­துள்­ளார்­கள். இவை ஏற்­க­னவே ஒதுக்கி வைக்­கப்­பட்டு இருக்­கும் நிதி தானே தவிர, டிசம்­பர் 4,17,18 ஆகிய தேதி­க­ளில் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்­கா­கத் தரப்­பட்ட நிதி அல்ல.

2015-ம் ஆண்டு முதல் பேரி­டர்­களி­னால் ஏற்­பட்ட சேதங்­களை தற்­கா­லி­க­மாக மற்­றும் நிரந்­த­ர­மாக சீர­மைக்­க­வும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­க­வும் தமிழ்­நாடு அரசு ஒன்­றிய அர­சி­டம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி. ஒன்­றிய அர­சால் ரூ.5,884.49 கோடி மட்­டுமே விடு­விக்­கப்பட்­டுள்­ளது. இது தமிழ்­நாடு அரசு ஒன்­றிய அர­சி­டம் கோரிய தொகை­யில் 4.61 விழுக்­காடு மட்­டுமே ஆகும். நாம் கொடுக்­கும் பணத்தை கார்­ப­ரேட் கம்­பெ­னி­க­ளுக்கு கடன் கொடுத்து. அவர்­க­ளுக்கு திவால் நோட்டீஸும் கொடுத்து அழகு பார்ப்­ப­து­தான் பா.ஜ.க-வுக்கு தெரிந்த ஒரே வேலை. இதை தலை­யாட்­டிக் கொண்டு செய்­வ­தற்­கா­கத் தான் நிர்­மலா சீதா­ரா­மன் நிதி அமைச்­ச­ராக ஆக்­கப்­பட்­டுள்­ளார். தமிழ்­நாடு உள்பட அனைத்து மாநில நிதி ஆதா­ரங்­க­ளும் சுரண்­டப்­பட்டு சுருட்­டப்­ப­டு­கின்­றன என்­பது மட்­டுமே உண்மை ஆகும். இத்­த­கைய கார்ப்­ப­ரேட் முத­லை­கள் வேண்­டு­மா­னால், ‘இது மோடி பணம்’ என்று சொல்லிக் கொள்­ள­லாம்.

வாழைப்­ப­ழக் காமெடி வந்த படம் ‘கர­காட்­டக்­கா­ரன்’. இவர்­களோ பித்­த­லாட்­டக்­கா­ரர்­கள்! ” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருச்சியில் மோடி, ஸ்டாலின்

`இது மலிவான விஷமப் பிரசாரம்…. கணக்கு காட்ட முடியுமா? – கொந்தளித்த தமிழ்நாடு பா.ஜ.க:

தி.மு.க முரசொலியின் இந்த தலையங்கம் குறித்து தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டோம். “தி.மு.கவை பொறுத்தவரை அரசியலும் காமெடியும் ஒன்றுதான். எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மைதான் அவர்களுக்கு. கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அளித்த நிதியை விட மூன்று மடங்கு அதிகமான நிதியை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டுக்காக ஒதுக்கி இருக்கிறது என பிரதமர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதேபோல தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும், குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டமாக இருந்தாலும் சரி, முத்ரா கடன் வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி அதில் தமிழ்நாட்டுக்கான பங்களிப்பு என்பது 10%-மாக இருந்திருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. ஒட்டு மொத்த நாட்டிலும் தமிழகத்திற்கு 10% எல்லா திட்டங்களிலும் கிடைத்திருக்கிறது என்பது தமிழகத்தின் மீது பா.ஜ.க அரசு எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.

நாராயணன் திருப்பதி

அதேபோல, முதலில் மாநில பேரிடர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதி என்றால் என்ன என்பதை முதலில் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் மொத்தமாகவே மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது ரூ.400 கோடி என்ற அளவில் தான் இருந்தது. அதை இப்போது 1200 கோடியாக மாற்றி இருக்கிறது பாஜகவின் ஆட்சி. அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேர்த்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தது வெறும் ரூ.2000 கோடி தான்! ஆனால் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு அது ரூ.8000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த இரண்டு நிதியுமே பேரிடரால் பாதிக்கப்பட்ட உடன் மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி. தவிர, இவை ஒட்டுமொத்தமாக பாதிப்புக்கான நிதியோ, இழப்பீட்டுக்கான நிதியோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை நான் பலமுறை சொல்லியும் வேண்டுமென்றே சட்டம் தெரிந்தும் சட்டப்படி இதை செய்ய முடியாது என்று தெரிந்தும் மலிவான அரசியலுக்காக வேண்டுமென்றே இங்கு இருக்கக்கூடிய மாநில அரசுகள் அதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

மத்திய அரசிடம் 1.27 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டதாகவும் ஆனால் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் தான் மத்திய அரசு தந்ததாகவும் சொல்கிறார்கள். அப்படி உங்களுக்கு நிதி வரவில்லை என்று சொன்னால் மீதமுள்ள 1.22 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசு எப்படி செலவிட்டது? எப்போது செலவிட்டது எங்கே செலவிட்டது என்ற கணக்கை கொடுக்க முடியுமா? அப்படி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம்! எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் மத்திய அரசு துறை ரீதியாக ஆய்வு செய்து அதற்கான நிதியை அந்தந்த துறை வாயிலாக பட்ஜெட்டில் ஒதுக்கும். இதுதான் சட்டப்படி சாத்தியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் சாதாரணமாக பிளஸ்-டுவில் கணக்கு படித்த மாணவர்களுக்கே புரியும். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் மக்களை குழப்புவதற்காக தொடர்ந்து இது போன்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை தி.மு.க விதைப்பது மிகவும் தவறு!” எனப் பதிலளித்தார்.

திருச்சியில் மோடி ஸ்டாலின்

இந்த நிலையில், பலவேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்திருக்கும் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “டிசம்பர் மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருப்பதோடு, மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த காலங்களை ஒப்பிடும் போது, தற்போதைய மத்திய அரசு 3 மடங்கு அதிக நிதியை வழங்கி உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத நிதியை மத்திய அரசு செலவு செய்திருக்கிறது” என்றார். இதையடுத்து, #வடைவேண்டாம்_நிதிவேண்டும் என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் திமுகவினர் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.