நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பழம்பெரும் நடிகரும், நாடக ஆசிரியருமான லியோ பிரபு சமீபத்தில் மதுரையில் மரணமடைந்தார்.

லியோ பிரபு

கலையுலகத்துக்குப் பெரும்பங்களிப்பைச் செலுத்திய இவரின் மறைவுச்செய்தி பொதுமக்களுக்கு மட்டுமல்ல, கலையுலகத்தினரே அறியாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் இவரைப் பற்றி அறிந்தவர்கள்.

அவர் குறித்துப் பேசிய அவரின் நண்பர்கள், “நடிகர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், மேடை நாடக, தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் எனப் பல துறையிலும் சாதனை செய்தவர். 1933 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர் பின்பு, நாடகம் மற்றும் திரைப்படக் கலைஞராகச் சென்னையில் வசித்துவந்தவர், இறுதிக்காலத்தை மதுரையில் கழித்துவந்தார்.

லியோ பிரபு

லியோ பிரபு சிறு வயதிலிருந்து சினிமா, நாடகத்தில் ஆர்வமாக இருந்தார். பழம்பெரும் நடிகர் சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் சேர்ந்து பயிற்சி எடுத்தவர். பின்பு ஏ.வி.எம் ராஜன், புஷ்பலதா, டைப்பிஸ்ட் கோபு ஆகியோருடன் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.

பின்பு சேஷாத்ரி என்பவரின் சாந்தி நிகேதனில் சேர்ந்து சத்திய சோதனை நாடகத்தில் நடித்தார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்த ஒய்.ஜி பார்த்தசாரதி தனது நாடகக் குழுவில் சேர்த்துக்கொண்டார்.

நாடகங்களில் நடித்துவந்தவர், நாடகங்களை எழுதி இயக்க தனியே `ஸ்டேஜ் இமேஜ்’ என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார். புதுமையான கதையம்சம், காட்சி அமைப்புகளைக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றம் செய்தார். மொத்தம் 13 நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கி ரசிகர்களால் கவனிக்கப்பட்டார் லியோ பிரபு.

லியோ பிரபு

`நான் மகான் அல்ல’, `பருவ காலம்’, `புதிர், `பேர் சொல்லும் பிள்ளை’, `இரண்டும் இரண்டும் அஞ்சு’, `இது எங்க நாடு, `அண்ணே அண்ணே’ போன்ற திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

`ஈ -நாடு’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ராம நாராயணனின் `இது எங்க நாடு’ படத்தில் நடித்த கதாபாத்திரத்தால் அதிகம் பாராட்டப்பட்டார். தமிழ் நாடகத் துறைக்கு இவரின் பங்களிப்பு முக்கியமானது. அதன் மூலம் உலகத் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டவர். அந்த அடிப்படையில் தமிழக அரசு இவருக்கு 1990 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

நாடக எழுத்தாளர், திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி புனைவு எழுத்தாளராகவும் பங்களித்தார். அதோடு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி நடித்தவர், ஊடகவியலாளராகவும் பணியாற்றினார்.

கலைத்துறைக்கு இவ்வளவு பங்களிப்பு செய்த லியோ பிரபு வயது முதிர்வால் மரணமடைந்ததற்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு அனுதாபத்தையும் தெரிவிக்கவில்லை” என்று வருத்ததுடன் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.