சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் (PUTER) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக, பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

அதேபோல சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின்கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்கு பதிவுசெய்து, துணைவேந்தர் ஜெகநாதனைக் கைதுசெய்தனர்.

ஜெகநாதன்

சேலம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ட்ரேட், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், “வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறிய மாஜிஸ்ட்ரேட், நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட  மறுத்தது தவறு. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழும் வழக்கு பதிந்துள்ளதால், சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்ட்ரேட் எடுக்க முடியாது” என வாதிடப்பட்டது.

துணைவேந்தர் தரப்பில், “புலன் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்கவில்லை. புகாரில் எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை. இந்த பொய் புகார், உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளது, பழிவாங்கும் நடவடிக்கை. இடைக்கால ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தீவிரமான இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரமும் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ,

உயர் நீதிமன்றம்

பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ கேட்காமல் இந்த மனுமீது உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது” எனக் கூறி, ஜனவரி 12-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி துணைவேந்தர் தரப்புக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாஜிஸ்ட்ரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.