பாட்ஷா பாய், ’எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ’ என்று ஒரு கோட்பாட்டை ராமையாவுக்கும், இன்னபிற குரூப் டான்ஸர்களுக்கும் வரையறுத்து வழங்கினார். நான் இருக்கும் எட்டில் அதை பொருத்திப்பார்த்து, ’இந்த வருடம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும்’ என்றெல்லாம், 2022 ஜனவரியில் உத்வேகம் கொண்டேன். ஆனால் 2022 டிசம்பரில், ‘அதுல ஒண்ணும் இல்ல… கீழ போட்டுரு’ ஆக அது வடிந்திருந்தது.

ஆனால், 2023 அப்படி அல்ல. இந்த வருட ஜனவரியில், நான் செய்ய நினைத்து தயாரித்த ’டு டூ’ லிஸ்ட்டுடன், செய்யவே நினைத்திடாத பல நல்லவற்றையும் சேர்த்து முடித்திருக்கிறேன் இப்போது டிசம்பரில். அந்தளவுக்கு என்னை, என் நாள்களை, மாதங்களை, ஒரு வருடத்தை மாற்றியமைத்திருக்கிறது… டைரி எழுத ஆரம்பித்த என் பழக்கம். டைரியில் எழுதும் எழுத்து என்ன மேஜிக்கையெல்லாம் செய்யும்  என்று நான் உணர்ந்த என் அனுபவத்தை, இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

டைரி

எல்லா வருடமும் மற்றவர்கள் கொடுக்கும் டைரியில் என் பெயரை மட்டும் மறக்காமல் எழுதி விடுவேன். அடுத்த வருட தொடக்கத்தில் அது பழைய பொருளாக மாறி பயன்பாடற்ற பொருளாக குப்பைக்கு சென்றுவிடும். இந்த வருடமும்… பிரவுன் நிற அந்த டைரியின் தொடக்கம் அப்படித்தான் இருந்தது. ஜனவரி முதல் வாரமே பூவாய் நுழைந்த ஒன்று பூகம்பமாய் மாறி வாழ்க்கையை சுழற்றி அடிக்க, அதை யாரிடமும் பகிர முடியாமல் தவித்தேன். வாட்ஸ்அப்பில் ஒரு செல்ஃப் சாட் தொடங்கி எனக்கு நானே மெசேஜ் பண்ணி என்னை தேற்றிக்கொள்ள ஆரம்பிச்சேன். வாட்ஸ்அப்பில் இருந்த அந்த சாட்டை அடுத்த சில நாள் கழித்து எடுத்து படிக்கும்போது, நான் கடந்து வந்த சூழல் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது. நான் வடித்த கண்ணீர் பயனற்றது என்பது புரிந்தது.

கைப்பட எழுதும் எழுத்து..! 

காலம் மருந்தாகும் என்பது உண்மைதான் போல என்பதை உணரத் தொடங்கினேன். அப்போதுதான் சிறுவயதில் அப்பா டைரி எழுதுவது நினைவுக்கு வந்தது. போனில் சேகரிக்கப்படும் எழுத்துக்கே இவ்வளவு வீரியம் இருக்கிறதென்றால், இன்னும் என் கைப்பட எழுதும் எழுத்துகளுக்கு எவ்வளவு வீரியம் இருக்கும் என்று எண்ணி 2023 என பொறிக்கப்பட்ட  பரவுன் நிற டைரியில் என் வாழ்வில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை எழுத ஆரம்பித்தேன்.

டைரி

எழுதியது கண்ணில் பட்டபோதெல்லாம்…

ஒவ்வொரு வருடம் தொடங்கும்போது, அந்த ஊருக்குப் போக வேண்டும், இந்த ஊருக்குப் போக வேண்டும் என்று திட்டமிடுவேன். ஆனால் நாள்கள் செல்ல செல்ல அந்த எண்ணம் மறந்துவிடும். இந்த வருடம் தஞ்சை போக வேண்டும் என்று என் டைரியில் எழுதியிருந்தேன். டைரியை புரட்டும்போதெல்லாம் அது கண்ணில் பட, அந்த ஆசையை நிறைவேற்றி விடுவோம் என்று எண்ணி, தஞ்சை கிளம்பினேன்.

ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில்தான் பயணம் செய்தேன். ஒருவிதமான எரிச்சல் உணர்வில்தான் அந்த பயணம் தொடங்கியது. ஆனால், அந்தப் பயணத்தில் நான் கவனித்த மனிதர்கள் அற்புதமானவர்கள்.

கடக்கும் நினைவுகள் அல்ல, கரையாத பதிவுகள்…

நான்கு பேர் அமரும் சீட்டில் தன் ஒரு காலை லேசாக நகர்த்தி ஏழாவதாக ஒரு பெண் அமர இடம் கொடுத்தவர்கள், கொண்டு வந்திருந்த பொட்டலத்திலிருந்த புளிசாதத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் மனம் இருந்தவர்கள், பெரிய கோயிலின் பிரமாண்டம் என… அப்பயணம் ரசனைக்குரியதாக மாறியது.

இதற்கு முன்புகூட, இது போன்று ஆசைப்பட்டு பல இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். பல மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் முகமும், பேசிய வார்த்தைகளும், நிகழ்வுகளும் அமாவாசை தின நட்சத்திரங்களாக பளிச்சென மனதில் மின்னும். ஆனால், டைரி பழக்கம் ஆரம்பித்த பின்னர், அந்த உணர்வுகளை எல்லாம் டைரியில் எழுத ஆரம்பித்தபோது, அவர்கள் எல்லாம் கடந்துபோன நினைவுகளாகக் கரையாமல்… பதிவுகளாக என் மனதோடு படிந்துபோனார்கள்.

இந்த வருட இறுதியில் அந்த டைரியை புரட்டியபோது, எத்தனை எத்தனை மனிதர்களை, அனுபவங்களை கடந்திருக்கிறோம் என்று நிறைவாக உணர முடிகிறது.

டைரி

சுயபரிசோதனை செய்ய வைக்கும் டைரி…

பொதுவாக சின்ன விஷயங்களுக்குகூட உடனே ரியாக்ட் செய்யும் குணம் என்னுடையது. தவறு என் மீதும் இருக்கலாம் என்பதை ஒருமுறைகூட நான் யோசித்ததே இல்லை. இதனால் நிறைய மனிதர்களை இழக்கவும் செய்திருக்கிறேன். ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது, நெருங்கிய தோழியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறிவிட்டது. வழக்கம்போல் என் மீது தவறே இல்லை என்ற தொனியில் வாதாடி விட்டு ஜெயித்த உணர்வில் வீட்டுக்கு வந்துவிட்டேன். உண்மையில் அன்று நடந்தவற்றை என் டைரியில் எழுதியபோதுதான் புரிந்தது… ஜெயித்தது தோழியின் பொறுமைதான் என்பது. மேலும், ஒரு பிரச்னையை மீண்டும் அசைபோடும்போது அது வெறும் நிகழ்வாக மாறி நீர்த்துப்போகும் என்பதை டைரி எழுதும் போதுதான் கற்றுக்கொண்டேன். 

பாசிட்டிவ் வைப்ஸ்…

காதலர்கள் தங்களின் சாட்களை மீண்டும் மீண்டும் படிப்பார்கள். ஒரு காலத்தில் நானும் அதை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், எதிர்காலத்தை தேடி ஓட ஆரம்பித்தாலோ என்னவோ அந்த சின்னச் சின்ன சந்தோஷங்கள் எல்லாம் மறந்து தொலைந்தே போய்விட்டன.

இந்த வருடம், முக்கிய சூழல் ஒன்றில் நண்பர் ஒருவர் ஆற்றுப்படுத்தும் அன்புடன் சொன்ன ‘லவ் யூ’வையும், அது தந்த தெம்பையும் டைரியில் எழுதினேன். எழுதியதை நானே படித்துப் பார்த்தபோது, அந்த வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது, அது எந்தளவுக்கு நம்மை ஆசுவாசப்படுத்தும், வெறுப்பை தணிக்கும் என்பதை எல்லாம் உணரமுடிந்தது. அன்றிலிருந்து… ஆறுதலுக்காக தளும்பி நிற்கும் மனிதர்களுக்கு நானும் ‘லவ் யூ’ சொல்ல ஆரம்பித்தேன். ஒருவேளை மற்றவர்களின் டைரியில் நான் சொன்ன லவ் யூக்களும் இப்படி சென்று அமர்ந்து, அவர்களுக்கும் எனக்குக் கிடைத்ததுபோல பாசிட்டிவ் வைப்ஸை கொடுத்தால்… அதைவிட நிறைவு வேறு என்ன இருக்க முடியும்?!

ரயில் பயணம்

தினமும் டைரி என்னிடம் கேட்கும் அந்தக் கேள்வி…

ஓடிக்கொண்டே  இருப்பதில் அடுத்தவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்ற எண்ணத்திற்கு பலர் தள்ளப்பட்டுவிட்டோம். அடுத்தவர்களின் மனநிலையைப்பற்றி நாம் சிந்திப்பதுகூட இல்லை.

அன்றாடம் ரயிலில் பயணிப்பவள் நான். ஏறியதும் ஹெட் செட்டை காதில் மாட்டிக்கொண்டு, அதுவரை வந்திருந்த குறுஞ்செய்திகளை படிக்க ஆரம்பித்துவிடுவேன். சமீபத்திய ரயில் பயணத்திலும் அதுதான் தொடர்ந்தது. சில ஸ்டேஷன்களுக்கு பிறகு நிமிர்ந்து பார்த்தபோது வயதான அம்மா ஒருவர் பரிதாபமாக என்னை பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார். அவரின் கண்களைகூட சந்திக்க அவகாசம் இல்லாமல் மீண்டும் குனிந்து  மெசேஜ் பண்ணத்தொடங்கினேன். பயணம் முடிந்து வீட்டில் என் டைரியில் எழுதும்போது, நான் அந்த வயதானவரிடம் நடந்து கொண்ட விதம் கூனிக்குறுகச் செய்தது. எழுந்து நின்று இடம் கொடுக்காமல் விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு நெஞ்சை அழுத்தியது. அடுத்தடுத்த பயணங்களில் அவரிடம் மன்னிப்பு கேட்க அவரைத் தேடினேன். கண்ணில் தென்படவில்லை.

இப்போதெல்லாம் ரயிலில் ஏறியதும் போனை பையில் வைத்து மனிதர்களை கவனிப்பதை பழக்கமாக்கிக்கொண்டேன். தினமும் இரவு என் டைரி, ‘இன்னைக்கு எந்த மனிதரை, அன்பை சேகரித்து எடுத்து வந்தாய்?’ என்ற கேள்வியுடன் எனக்குக் காத்திருக்கும்போது, அதற்கு நான் கொடுக்க அழகழகான பதில்கள் நிரம்பியிருக்கின்றன என் பேனாவில்.

அநாவசிய செலவுகளுக்குக் கடிவாளம்…

இதுமட்டுமில்லாமல் உணவு முறை, பொருளாதாரம் என நிறைய விஷயங்களை டைரியில் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, அன்றாட செலவுகளை எழுதும் வழக்கம் வந்ததால் தேவையில்லாத செலவுகள் குறைந்திருக்கிறது. ஒரு சிறிய செலவுக்கு முன்பும் இது எதற்காக, அவசியமா எனப் பல கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

மொத்தத்தில் இந்த வருட டைரி என்னை மாற்றியிருக்கிறது… பக்குவப்படுத்தியிருக்கிறது.

2023

We write to taste life twice!

தினமும் டைரி எழுதுவதால் பூமியில் வாழும் நாம் சந்திரனுக்கு போய் விட முடியாதுதான். ஆனால், தவறுகளை உணர்ந்து, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி, வெறுப்பை மறந்து பூமியில் மனிதர்களுடன் மனிதராய் நிச்சயம் வாழமுடியும். திரும்பிப் பார்க்கும் போதுதான் தவறுகள் திருத்தமடைக்கின்றன.

இந்த புத்தாண்டிற்கு வந்த ஏதோவொரு டைரி, எழுத ஆளில்லாமல் உங்கள் வீட்டில் ஏதோவொரு மூலையில் உறங்கிக்கொண்டிருக்கும். அதை உங்கள் பேனா மையால் நிரப்புங்கள்…  உங்கள் வாழ்க்கை தினம் தினம் மாற்றங்களால் நிரம்பும்.

”We write to taste life twice!”

குறிப்பு: மறக்காமல்… டைரியை யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வெச்சிருங்க மக்கா!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.