மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து இறக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்கள் அணியின் கேப்டனாக அறிவித்திருக்கிறது. பின்னணியில் நடந்தது என்ன?

ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்காகதான் பல சீசன்களாக ஆடி வந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி புதிதாக வந்த போது அந்த அணிக்காக 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டார். கேப்டனாக பதவியேற்று முதல் சீசனிலேயே அந்த அணியை சாம்பியனாக்கினார். அடுத்த சீசனில் குஜராத் அணி ரன்னர் அப். குஜராத் அணிக்காக வெற்றிகரமாக ஆடிக்கொண்டிருக்கும் போதே வரவிருக்கும் மினி ஏலத்திற்கு முன்பாக மும்பை அணி ஹர்திக்கை பணத்தின் அடிப்படையில் பண்டமாற்று செய்து குஜராத்திடமிருந்து தங்கள் அணிக்கு வாங்கிக் கொண்டது.

Hardik Pandya

இந்நிலையில்தான் மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வாங்கிக் கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து விலக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக அறிவித்திருக்கிறது மும்பை அணியின் நிர்வாகம்.

இது தொடர்பான அறிக்கையில் மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே கூறியிருப்பதாவது, ‘மும்பை அணியின் சகாப்தத்தை நீட்சியடைய செய்யும் வகையிலான முயற்சி இது. வருங்காலத்தை மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டும் என்கிற மும்பை அணியின் தத்துவத்திற்கு உண்மையாக இருக்க நினைக்கிறோம். சச்சின், ரிக்கி பாண்டிங், ஹர்பஜன், ரோஹித் என அற்புதமான தலைமைகள் கிடைக்க நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தோம்.

ரோஹித்தின் அபாரமான தலைமைத்துவத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவரின் தலைமையில்தான் எல்லாரும் விரும்பக்கூடிய ஒரு அணியாக வெற்றிகரமான அணியாக மாறினோம். ஐ.பி.எல் வரலாற்றிலேயே தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக ரோஹித்தும் இருந்தார்.

அவரின் அனுபவத்தின் வழி மும்பை அணியை தொடர்ந்து வழிகாட்ட வேண்டும். அணியின் புதிய கேப்டன் ஹர்திக்கிற்கு வாழ்த்துகள்.’ என மும்பை அணியின் சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

குஜராத் அணியிலேயே ஹர்திக் வெற்றிகரமான வீரராகவும் கேப்டனாகவும்தான் இருந்தார். அணியின் நிர்வாகத்தோடும் அவருக்கு எந்தவிதமான பிணக்கும் இருந்ததாக தெரியவில்லை. ஆனாலும், அவர் மும்பை அணியிடமிருந்து வந்த ஆஃபரை ஏற்றுக்கொண்டார். அதற்கு காரணமாக பணம் மட்டுமே இருக்காது.

கேப்டன் பதவியை தருகிறோம் என மும்பை அணி உறுதியளித்திருக்கக் கூடும் அதனால்தான் ஹர்திக் குஜராத்திலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கக்கூடும் என்பது முன்னரே அணுமானிக்கப்பட்டது. அதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது.

Hardik Pandya

கிரிக்கெட்டின் மையமாக மாற துடிக்கும் குஜராத் அணிக்கு கேப்டனாக இருப்பதை விட ஏற்கனவே கிரிக்கெட்டின் மையமாக இருக்கும் மும்பை அணிக்கு கேப்டனாக இருப்பது கூடுதல் கௌரவம் என ஹர்திக் நினைத்திருக்கக்கூடும். அதனால்தான் அணி தாவும் முடிவையே அவர் எடுத்திருக்கக்கூடும். மும்பை அணிக்குமே இதில் சில பலன்கள் இருக்கிறது. ஒருவேளை ரோஹித் சர்மா இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்திருந்தால், உலகக்கோப்பையை வென்ற கேப்டன் என்கிற அந்த புகழை உறிஞ்சிக்கொள்ள அவரை இன்னும் சில ஆண்டுகளுக்கு மும்பை அணி கேப்டனாக வைத்திருந்திருக்கும்.

ஆனால், ரோஹியத் உலகக்கோப்பையை வெல்லவில்லை. இந்திய அணியிலும் அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அதேவேளையில் இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்ட்யாதான் இந்திய அணியின் கேப்டனாக வருங்காலத்தில் முன் நின்று வழிநடத்தவிருக்கிறார். இது இரண்டையும் ஒரே புள்ளியில் இணைத்தால் மும்பை அணிக்கு ஏன் ஹர்திக் பாண்ட்யா தேவைப்பட்டார் என்பது புரிந்துவிடும். அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய அணியின் மையமாக பேசுபொருளாக இருக்கப்போகிற ஹர்திக் பாண்ட்யாவே மும்பை அணியின் மையமாகவும் பேசுபொருளாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் மும்பை அணியின் எண்ணமாக இருந்திருக்கும். அதனால்தான் யாருமே கற்பனை செய்தே பார்த்திடாத பண்டமாற்றத்தை ஹர்திக் மூலம் மும்பை நிகழ்த்தியது.

Rohit Sharma

கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டிருக்கிறார். அவரது அனுபவம் தேவை, அவர் தொடர்ந்து அணியில் இருப்பார் என்றெல்லாம் மும்பை அணி கூறினாலும் மும்பை அணிக்குள்ளும் ரோஹித் சர்மாவின் இடம் கேள்விக்குறியாகத்தான் போகிறது. 2024 சீசனுக்குப் பிறகு ஒரு மெகா ஏலம் நடைபெறும் அல்லது மெகா ஏலம் பாணியில் எதோ ஒன்றை நடத்தி மொத்த அணிகளும் தங்களை களைத்துப் போட்டுக் கொள்ளும். அப்போது மும்பை அணி சில வீரர்களை தக்கவைக்கும் போது அந்த விருப்பப்பட்டியலில் ரோஹித் இருப்பாரா என்பதே சந்தேகம்தான்.

கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். ஆனால், அவர் இப்போது கேப்டன் இல்லை. ஒரு வீரராகவும் கடந்த சில ஐ.பி.எல் சீசன்களாக ரோஹித்தின் ஃபார்ம் சுமார்தான். எனில், எந்த அடிப்படையில் மும்பை அணி கோடிகளை கொட்டி ரோஹித்தை தக்கவைக்கும்?

Hardik Pandya – Rohit Sharma

ஓப்பனாக ஏலத்தில் விட்டு குறைந்தத் தொகைக்கு ரோஹித்தை வாங்கி போட முயற்சிக்கும். அப்படி வாங்கும்போதும் அவர் முதல் சாய்ஸ் வீரராக இருப்பாரா என்பதும் சந்தேகம். வேறு சில அணிகள் ரோஹித்தை அணுகலாம். மும்பை அணியின் முகமாகவே பதிந்து போன ரோஹித் அந்த ஆஃபர்களை ஏற்றுக்கொள்வது சிரமம்தான். ஆக, 2024 சீசனுக்குப் பிறகு ரோஹித் விடைபெறலுக்கு தயாராவார் அல்லது நிலைமையை புரிந்து கொண்டு மும்பை அணியில் கிடைக்கிற இடத்தோடு திருப்திப்பட்டுக் கொள்வார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.