டிசம்பர் 5, மிக்ஜாம் புயல் மழையில் வடசென்னை புளியந்தோப்பு பகுதியில் கழுத்தளவு நீர் சூழ்ந்தது. அந்த வெள்ளத்தில், புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த எட்டு மாத கர்பிணிப்பெண் சௌமியா, அவரின் ஒருவயது குழந்தை, கணவர் மசூத் பாஷா ஆகிய மூவரும் சிக்கியிருக்கின்றனர். சரியாக மதியம் 12 மணியளவில் கர்ப்பிணி சௌமியாவுக்கு பிரசவலி எடுக்க, அக்கம் பக்கத்தினர் செல்போன்மூலம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்க, அழைப்பை எடுத்தவரால் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கால் கனெக்ட் செய்யமுடியாமல் நீண்ட நேரமாக காத்திருக்கும் சூழல் உருவானது.

இதற்கிடையில் திடீரென்று குழந்தை பிறக்கவும், அது இறந்துபோயிருக்கிறது. வேறுவழியில்லாமல் அந்த வெள்ளத்திலேயே தாய் சேய் இருவரையும் மரப்பலகையில் வைத்து பாதிதூரம் சுமந்துகொண்டும் பின்னர், மீன்பாடி வண்டி மூலமும், அருகிலிருக்கும் புளியந்தோப்பு G3 அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றிருக்கின்றனர். ஆனால், அங்கு மருத்துவமனை மூடியிருந்திருக்கிறது. பின்னர் அருகிலிருக்கும் முத்து – பிரைட் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று தாய்க்கு முதல்கட்ட சிகிச்சையளித்திருக்கின்றனர்.

குழந்தை உடலை சுமந்து நிற்கும் மசூத்

அதற்கடுத்து தனியார் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் தாயையும், இறந்த குழந்தையையும் எழும்பூர் மருத்துவ மனைக்கு கொண்டுசெல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், எழும்பூர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் அழைப்பு ஏற்கப்படவில்லை. பின்னர் காவல்துறை அதிகாரிகள் சிலரின் உதவியோடு படகு மூலம் புரசைவாக்கம் கொண்டுசென்று, பிறகு அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு இறந்த குழந்தை பிணவறைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. குழந்தை இறப்பின் ஃபார்மால்டிகளை முடிக்கவேண்டுமென்றால் ஆதார் கார்டு வேண்டும், காவல்துறையிடம் ரிப்போர்ட் கடிதம் வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தால் குழந்தையின் தந்தை மசூத் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்.

பின்னர் மசூத், `மருத்துவமனை சிகிச்சையில் மனைவி, பிறந்து ஓராண்டே ஆன மற்றொரு கைக்குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த சூழலில் குழந்தையைப் பெற்று அடக்கம் செய்ய வழியில்லை என்றுகூறி, குழந்தையை மருத்துவமனையிலேயே அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு பிணவறை ஊழியர் 2,500 ரூபாய் பணம் கேட்டதாகவும், அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தன் சூழ்நிலையை கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், டிசம்பர் 10-ம் தேதி, குழந்தையின் உடல் மசூத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மருத்துவத்துறை விதிமுறைகளின்படி, குழந்தையின் உடலை முறையாக காடா துணி சுற்றப்பட்டு பேக்கிங் செய்து கொடுக்காமல், மருத்துவமனை நிர்வாகம் மசூத் எப்படி குழந்தையை கொடுத்தாரோ அதேநிலையில், க்ளீன்கூட செய்யாமல் சாதாரண அட்டைப்பெட்டில்(Carton Box) போட்டு கொடுத்திருக்கிறார்கள். இதுதெரியாமல் அட்டைப்பெட்டியோடு இறந்த குழந்தையை சுமந்துகொண்டு தந்தை மசூத்தும், காவல்துறை மற்றும் த.மு.மு.க தன்னார்வலர்களும் வியாசர்பாடி கன்னிகாபுரம் மசூதிக்கு சொந்தமான மயானத்தில் உடலை அடக்கம் செய்ய வந்திருக்கின்றனர். அப்போது அட்டைப் பெட்டியை திறந்துபார்க்கும்போதுதான் குழந்தையின் உடலில் துணியே இல்லாமல், அப்படியே கொடுக்கப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த த.ம.மு.க தன்னார்வலர்கள் தங்களின் செலவில் புதிய வெள்ளைத் துணியை வாங்கிவந்து, குழந்தையின் உடலில் சுற்றி பின்னர் முறைப்படி அடக்கம் செய்திருக்கின்றனர்.

அடக்கம் செய்யும் த.மு.மு.க -வினர்

இந்த விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாகப் பேசியிருக்கும் மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி, “இறந்த குழந்தையாக இருந்தாலும் அதற்குரிய மரியாதைக் கொடுத்து, முறையாக பேக்கிங் செய்துதான் ஒப்படைக்கவேண்டும் என்பது மருத்துவமனையின் (Guidelines) வழிமுறை. ஆனால் பிணவறை ஊழியர் தவறுதலாக இப்படி செய்துவிட்டார். இது மருத்துமனை டீன் நடத்திய ஆய்வில் உறுதியாகியிருகிறது. அதனால்தான் ஊழியர் பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், பிணவறை ஊழியர் பணம் கேட்டதாக சொல்லப்படுவதில் உண்மைத் தன்மை இல்லை!” என விளக்கமளித்திருக்கிறார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

இந்த நிலையில், இறந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் எப்படி உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? என்பது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒரு அரசு குழந்தைகள் நல மருத்துவரிடம் பேசினோம். “பொதுவாக மருத்துவமனையில் ஒரு குழந்தை இறந்துவிட்டாலோ அல்லது இறந்து மருத்துவமனைக்கு வந்தாலோ அதை அப்படியே பெற்றோர்களிடம் ஒப்படைக்கமாட்டோம். முதலில் பெற்றோர்களைத் தேற்றும்படி ஆலோசனை வழங்குவோம். பின்னர் இறந்துபோன குழந்தையின் உடலை பத்திரமாக காடா துணிகளால் மடித்து, முறையாக பேக்கிங் செய்வோம். சில சமயங்களில் பேக்கிங் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக துணியை ஸ்டிச்சிங் செய்துகூட முறையாக வழங்குவோம். இதுதான் வழக்கமாக அனைத்து மருத்துவமனைகளும் கடைபிடிக்கும் வழிமுறை.

மார்ச்சுவரி

அதேபோல, இறந்த குழந்தைகளை பெரும்பாலும் போஸ்ட்மார்டம் செய்ய மார்ச்சுவரிக்கு அனுப்ப மாட்டார்கள். ஏதேனும் பிரச்னை, சிக்கல்கள், சந்தேகம் சர்ச்சைகள் இருந்தால் மட்டுமே உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைக்கப்படும். அதேசமயம், மார்ச்சுவரிக்கு சென்றாலும் செல்லவில்லை என்றாலும்கூட இறந்த குழந்தையின் உடலை துணிகளால் பேக்கிங் செய்துதான் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதேசமயம், குழந்தைகளின் பெற்றோர் வெளியூரிலிருந்து வந்தோ, அவர்களால் குழந்தையைக் கொண்டுபோய் அடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையிலோ மருத்துவமனை நிர்வாகத்திடமே தங்கள் குழந்தையை அடக்கம் செய்துவிடும்படி கோரிக்கை வைக்கும் சம்பவங்களும் நிகழும். அப்போது, பெற்றோர்களிடம் முறைப்படி கையெழுத்து வாங்கிக்கொண்டு, மாநகராட்சி ஊழியர்கள் மூலம் இங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வோம். அரசு விதிமுறைகள், வழிகாட்டுதல்களைத் தாண்டி மனிதாபிமான அடிப்படையில் இப்படியெல்லாம் செய்பவர்கள் ஏராளம். ஆனால், கன்னிகாபுரம் சம்பவத்தில் ஏன் இப்படி நிகழ்ந்தது என்பதுதான் புரியவில்லை!’ என்றார் வேதனையாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.