திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள ஸ்வீட்ஸ் பேக்கரி கடையொன்றில், பட்டாக் கத்தியைக் காட்டி ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிச்செல்லும் ரௌடிகளின் மிரட்டல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, பதைபதைக்க வைத்திருக்கின்றன. கடந்த ஏழாம் தேதி இரவு 9:30 மணியளவில், இந்த அட்டூழியம் நடந்தேறியிருக்கிறது. சி.சி.டி.வி காட்சியைப் பார்க்கும்போது, ரௌடி கும்பலைச் சேர்ந்த இருவர் முதலில் கடைக்கு வருகிறார்கள். கடை உரிமையாளரின் மனைவியும், வேலையாள் ஒருவர் மட்டுமே அந்நேரத்தில் கடையில் இருந்திருக்கிறார்கள்.

ரௌடிகள்

பெண்ணை கூப்பிட்டு, ‘அக்கா ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடு’ என்று கேட்கிறார்கள். அதற்கு ‘காசு இல்லப்பா. இப்பதான் வாங்கிய பொருள்களுக்கு பில் கொடுத்து அனுப்பினேன்’ என்று சொல்கிறார் அந்தப் பெண். பில் பேப்பரையும் எடுத்துக் காட்டுகிறார். இதை கவனித்த மூன்றாவது ரௌடி ஒருவன் அங்கு வருகிறான். ஆள் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்துடன் இருப்பதால், பேச்சில் திமிர் காட்டுகிறான். அந்தப் பெண்ணிடம் ‘எடுடி காசை. குடுடி காசை’ என்று அடிக்கப் பாய்கிறான்.

அருகில் இருந்த இன்னொருவன் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து, கடையில் இருந்த பொருள்களை அடித்து உடைக்கிறான். ‘காசு கொடுக்கலைனா, கடையை உடைச்சிடுவோம்’ என்று மீண்டும் மீண்டும் பட்டாக் கத்தியால் தாக்குதலில் ஈடுபடுகிறான். முரட்டுத்தனமாக இருந்த ரௌடியோ தனக்கு முன்பிருந்த பில் பேப்பரை எடுத்து பெண்ணின் முகத்தின் அடித்துவிட்டு, ‘தேவையில்லாத பிரச்னை வேணாம். ஆயிரம் ரூபாய் கொடுத்துடு. கல்லா பெட்டியை திறடி’ என்கிறான்.

ரௌடிகள்

பெண்ணும் அச்சத்துடன் கல்லா பெட்டியை திறந்து காட்டுகிறார். ஒருவழியாக, ஆயிரம் ரூபாயை மிரட்டிப் பறித்துக்கொண்ட ரௌடிகள் மூன்று பேரும், ‘கேமரா வச்சிருக்கியா. போலீஸ்கிட்ட போனால் உன்னையும் உன் புருஷனையும் போட்டுத் தள்ளிடுவோம். கேஸ், கோர்ட்டுனு போனா நீங்க இருக்க மாட்டிங்க..’ என்று மிரட்டிவிட்டு தப்பி ஓடினர். கடை உரிமையாளரோ பாதுகாப்புக் கருதி, காவல்துறையில் புகாரளிக்கச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மூன்று நாள்களுக்குப் பிறகு ரௌடிகளின் மிரட்டல் வீடியோ காட்சிகள் வெளியாகி வியாபாரிகளையும், பொதுமக்களையும் கடும் பீதியடைய வைத்திருக்கிறது. சி.சி.டி.வி காட்சிகள் வைரலான நிலையில், மப்பேடு போலீஸார் அந்த ரௌடிகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.