“கமல்ஹாசன் தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசினால், இனிமேல் அவர் ரசிகர்களும், விநியோகிஸ்தர்களும் அவரைவிட்டு விலகிவிடுவார்கள். அவர் நிழல்கூட அவருடன் இருக்காது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

கமல்

மதுரையில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாள்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னெச்சரிக்கையாக அனைத்துயும் மக்களுக்கு செய்துவிட்டோம் எனச் சொல்லிச் சொல்லி… கடைசி வரை எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றிய தி.மு.க அமைச்சர்கள், முதமைச்சரையும் ஏமாற்றிவிட்டனர். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் உடமைகளையும், சொத்துகளையும் மக்கள் இழந்துவிட்டனர்.

செல்லூர் ராஜூ

பல ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத மழை சென்னையில் பெய்தது. அ.தி.மு.க ஆட்சியில் 5 நாள்கள் மழை பெய்தது. அடுத்தடுத்து வர்தா, கஜா புயல்களை எதிர்கொண்டோம். மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரணப் பொருள்களை, நிதிகளை கொடுத்தோம். யாரையும் கட்டாயப்படுத்தி நிவாரண நிதி பெறவில்லை. வரும் நிதியை வைத்து மக்களுக்கு நிவாரணம் கொடுத்தோம். மழைக்காலத்தில் ஒரு ராணுவ தளபதியைப்போல் ஜெயலலிதா செயலாற்றினார்.

ரூ.6,000 நிவாரணத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் இது போன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுப்பார்கள். பாதிப்பை கண்டு கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் அதனை கவனித்து சரி செய்ய வேண்டும். வேளச்சேரியில் உள்ள நிலைமை ரத்தக்கண்ணீரை வரவழைத்தது.

இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுப்பது மிகக்குறைவான தொகை, 10 லட்சம் ரூபாயாவது இழப்பீடு கொடுக்க வேண்டும். அரசாங்கம் செயலிழந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது. சென்னையின் நிலைக்கு தி.மு.க அரசுதான் முழு பொறுப்பு.

செல்லூர் ராஜூ

தி.மு.க-வினர் தங்கள் வீட்டில் இருந்தா நிதியை எடுத்துக் கொடுக்கப் போகிறார்கள்… அரசுப் பணத்தைத்தான் கொடுக்கிறார்கள். மக்கள் நிம்மதியடையும் வகையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலில் ஒரு சீட்டுக்காக தி.முக-விற்கு லாலி பாடுகிறார். தி.மு.க-வின் ஊதுகுழலாக உள்ளார். கமல்ஹாசன் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்க மாட்டார்கள். கமல்ஹாசன் தி.மு.க-விற்கு ஆதரவாகப் பேசினால், இனிமேல் அவர் ரசிகர்களும், விநியோகிஸ்தர்களும் அவரைவிட்டு விலகிவிடுவார்கள். அவர் நிழல்கூட அவருடன் இருக்காது.

விஜய்

துன்பத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசவில்லை. பதுங்குகுழியிலிருந்து தற்போதுதான் வெளி வந்துள்ளார். அரசியல் நாகரிகமற்றவர். மதுரையில் கட்சி தொடங்கியபோது பேசிய கமல்ஹாசனின் வீராப்பு, இப்போது எங்கே சென்றது.

விஜய் எங்களுக்கு போட்டி என்றெல்லாம் சொல்லக் கூடாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களின் விருப்பம். விஜய் ஓர் இளைஞர். அவர் வருவதால் ஒன்றும் இல்லை. நான் விஜய்யின் ஊதுகுழல் இல்லை. அவர் எங்களுக்கு மாற்றும் இல்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.