தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாநாட்டு மையம் என்ற பெயரில் ரூ. 62 கோடி மதிப்பில் மண்டபம் கட்டப்பட்டது. இதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கம் என பெயரிடப்பட்டது. இந்த அரங்கத்தில் கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மாநாட்டு மையத்தையும் சேர்த்து நிறைவுற்ற 13 திட்டங்களை திறந்து வைத்தார். இந்தநிலையில் மாநாட்டு மையத்தை தனிநபர் ஒருவருக்கு சினிமா தியேட்டர் நடத்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சைக்கை வித்திட்டுள்ளது.

மு.கருணாநிதி அரங்கம்

இது குறித்து அ.ம.மு.கவின் மாநகர செயலாளர் ராஜேஷ்வரன் கூறுகையில், “தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட மாநாட்டு மையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கம் என பெயரிட்டனர். ஒரே நேரத்தில் 1,500 பேர் அமரக்கூடிய வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா இந்த அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

தனி நபர்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கும் வாடகை அடிப்படையில் கொடுக்கப்படும் என முதலில் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த மையத்தை கட்டும் போதே பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யலாம் என்றும், அரசு போக்குவரத்து கழகத்திற்கான டிப்போ அமைக்கலாம் என்றும் அரங்கம் தேவையில்லாதது என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவற்றிற்கு இந்த இடம் ஒதுகப்பட்டிருந்தால் நிச்சயம் உபயோகமானதாக இருந்திருக்கும்.

தஞ்சாவூர்
மாநகராட்சி

ஆனால் எதிர்ப்பை மீறி மாநாட்டு மையம் கட்டப்பட்டது. இந்தநிலையில் தஞ்சாவூரில் பிரபல தியேட்டரின் உரிமையாளர் ஒருவருக்கு சினிமா தியேட்டர் நடத்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் அரங்கத்தை கொடுத்துள்ளனர். அந்த அரங்கத்தில் மூன்று தியேட்டர் திறக்க இருக்கின்றனர். அதற்கான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஷாப்பிங் காம்பளக்ஸ் உள்ளிட்டவையும் வர இருக்கிறது. தற்போது அந்த அரங்கத்திற்குள் தனி நபர யாரையும் அனுமதிப்பதில்லை.

விஷயம் வெளியே தெரிந்தால் தியேட்டர் திறப்பதற்கு சிக்கல் ஏற்படும் என்பதால் ரகசியமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தியேட்டராக மாற்றப்படுவதால் இந்த அரங்கத்திற்கு வேறு பெயர் வைக்கப்பட உள்ளது. அதற்கு தி.மு.க மேயர் சண்.இராமநாதன் எப்படி அனுமதி கொடுத்தார் என தெரியவில்லை. பழைய பேருந்து நிலையம் அருகே சுமார் 60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் வணிக வளாகத்தில் சுமார் 45 கோடி மாத வாடகை வரும் வகையில் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜேஷ்வரன்

ஆனால் இட வசதி கொண்ட இந்த அரங்கத்தை மாதம் ரூ.25 லட்சம் என குறைந்த வாடகைக்கு பிக்ஸ் செய்து கொடுத்திருப்பது ஏன் என்பது தெரியவில்லை. நிகழ்ச்சிகள் புக் ஆவதில்லை அதனால் இதனை தியேட்டர் நடத்துவதற்கு கொடுத்துள்ளோம் என மேயர் கூறி வருவதையும் ஏற்று கொள்ளமுடியவில்லை. பொதுமக்கள் பயன்பெறுவதற்காக கட்டபட்ட அரங்கத்தை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனிநபர் ஒருவருக்கு கொடுத்திருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

இது குறித்து மேயர் சண்.இராமநாதனிடம் பேசினோம், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.62 கோடியில் மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாநகராட்சி சார்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆனால் நிகழ்ச்சி நடத்துவதற்காக யாரும் மாநகராட்சியை அணுகவில்லை. மாநகராட்சிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக அரங்கத்தை தனியாரிடம் விடுவதற்கு டெண்டர் வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன்

இதில் மாத வாடகை ரூ.25 லட்சத்திற்கு தஞ்சாவூரில் தியேட்டர் நடத்தி வரும் ஒருவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அத்துடன் ரூ. 3 கோடி அட்வான்ஸ் 12 மாத வாடகை 3 கோடி என மொத்தம் 6 கோடி டெபாசிட் செலுத்தியுள்ளார். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவை அதில் வர இருக்கிறது. அதில் தியேட்டர் நடத்துவதற்கும் அனுமதி கேட்டுள்ளார். தனியாரிடம் கொடுத்தாலும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கம் என்ற பெயரில் தான் செயல்படும். இதனால் மாநகராட்சிக்கு வருமானம் கிடைத்துள்ளது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.