மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் மொத்தமாக அனைவரையும் கலங்கடித்துவிட்டாலும், அதன் பிறகான மீட்பு நடவடிக்கைகள், நிவாரண உதவி அளித்தல் போன்ற அரசின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் சென்றடைகின்றனவா என்ற கேள்வி பொதுவாக நிலவுகிறது. காரணம், கனமழை பெய்து ஓய்ந்த அடுத்தநாளே சென்னையின் பிரதான இடங்களில், சாலைகளில் வடிந்த நீர் வடசென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உட்பட பல இடங்களில் இன்னும் வடிந்தபாடில்லை.

`அரசு அதிகாரிகளும் எட்டிப்பார்க்கவில்லை, அரசின் நிவாரண உதவிகளும் இன்னும் வரவில்லை’ என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில், எண்ணூர் பகுதியிலிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள், இந்த மழைவெள்ள சூழலைப் பயன்படுத்தி, கொசஸ்தலை ஆற்றில் (கொற்றலை ஆறு) எண்ணெய்க் கழிவுகளைக் கலப்பதாக வந்த தகவலையறிந்த விகடன் செய்தியாளர்கள், கள நிலவரத்தை அறிய எண்ணூர் பகுதிக்குச் சென்றனர்.

களத்தில் இறங்கிய பிறகு, வந்தது வெறும் தகவல் மட்டுமல்ல… உண்மை என்பதை அறிந்த நம் செய்தியாளர்கள், அந்தப் பகுதி மக்களிடையே உரையாடியபோது, “இது இப்போது மட்டுமல்ல, இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் இப்படித்தான் செய்கின்றன” என்றனர். வெறும் கள ஆய்வோடு நிற்காத நம் செய்தியாளர்கள், அந்தப் பகுதியின் தற்போதைய நிலையையும், அந்தப் பகுதியினரின் வாக்குமூலத்தையும் வீடியோவாகப் பதிவுசெய்து, `விகடன் வெப் டி.வி’ யூடியூப் சேனல், சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றமும் செய்தனர்.

இந்த நிலையில், விகடன் வெப் டி.வி பதிவிட்ட வீடியோவை கவனித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், எண்ணெய் நிறுவனங்கள் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய்க் கழிவுகளைக் கலக்கும் விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. இது, நாளை காலை விசாரணைக்கும் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.