சென்னை: மழை தொடர்பாகப் புகாரளிக்க உதவி எண்கள்!

Cyclone Michaung : அமைச்சர் உதயநிதி ஆய்வு..!

சென்னையில் புயலின் தாக்கம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி இரவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தனது ட்விட்டர் பதிவில், “சென்னையில் பல்வேறு இடங்களில் புயல் காரணமாக கன மழை பெய்து வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர உதவி கட்டுப்பாட்டு மையம் மற்றும் கண்காணிப்பு நிலையத்தில் சற்று முன்பு ஆய்வு செய்தோம். சென்னையின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மழை முன் எச்சரிக்கை நடவடிக்கை விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். மேலும் மண்டல வாரியாக உள்ள சூழல், சுரங்க பாதைகளின் நிலவரம் , உதவிக்காக விடுக்கப்படும் அழைப்புகள் குறித்த தகவல்களை பெற்றோம். மேலும், சூழலுக்கு ஏற்ப உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் – அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டோம். ” என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் பலத்த காற்றுடன் தொடரும் கனமழை!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சொல்லப்படுகிறது. அவசர தேவைகள் அன்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“தொடர் முன்னெச்சரிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்கி உள்ளோம்!” – ஸ்டாலின்

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அவசர கால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. புயல் எச்சரிக்கை குறித்து மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. தொடர் முன்னெச்சரிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்கி உள்ளோம். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 225 வீரர்களைக் கொண்ட ஒன்பது குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. பாதிப்பு ஏற்படும் பகுதிகள் சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் முழு அர்பணிப்போடு மேற்கொள்ள வேண்டும். புயலின் போது மரங்கள் மின் கம்பங்கள் கீழே விழும் அபாயம் உள்ளதால் மக்கள் வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.

மிக்ஜாங் புயல் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தென்கிழக்கு வங்கக் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்று வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல், வட தமிழகம் நோக்கி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் (டிசம்பர் 5) தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் கரையைக் கடக்குக் கூடும். புயல் கரையைக் கடக்கையில் 100 கி.மீ வேகத்தில் பலத்த வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பலத்த காற்று மற்றும் மிக கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேற்கு, வட மேற்கு திசையாக நகர்ந்து நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நேற்றிரவு, தென்மேற்கு வங்கக் கடலில் புதுச்சேரியிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 330 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 340 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்சமயம் புயலாக உருவாகியிருக்கிறது.

புயல் எச்சரிக்கை

5 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்துவரும் இந்தப் புயலானது, சென்னைக்கு 310 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல், நாளை (டிசம்பர் 4) தெற்கு ஆந்திர மற்றும் அதையொட்டிருக்கும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி, கடலோரப் பகுதிகளை ஒட்டி வட திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி காலை கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திருவள்ளூர் முதல் கடலூர் வரை கடலோர மாவட்டங்களில் கடற்கரை ஒட்டிய பகுதிகளில், அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்திலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்திலும் இன்று பலத்த கற்று வீசக்கூடும். அதோடு இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

கனமழை

குறிப்பாக அடுத்த மூன்று ம்ணி நேரத்தைப் பொறுத்தவரை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கொடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.