கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பந்தல்விளை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி எமிலி. 85 வயதான எமிலியின் கணவர் பொன்மணி இறந்துவிட்டார். எமிலிக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என ஆறு பிள்ளைகள் இருந்தனர். அதில் ஒரு மகன் இளமையில் விபத்தில் இறந்துவிட்டார். ஒரு மகன் தேன் வியாபாரியாகவும், ஒரு மகன் ஓய்வு பெற்ற ராணுவ வீரராகவும், மற்றொருவர் வெளிநாட்டிலும் வேலை செய்துவருகின்றனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

கணவர் இறந்த பிறகு எமிலி மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களின் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளார். இவரின் மகன் விபத்தில் இறந்தது சம்பந்தமான வழக்கு முடிந்து சில மாதங்களுக்கு முன்பு எமிலிக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைத்துள்ளது. அந்தப் பணத்தையும் 5 பிள்ளைகளும் பங்குபோட்டு உள்ளனர்.

படுக்கையில் கிடந்த மூதாட்டி எமிலி

மூதாட்டி எமிலிக்கு சொந்தமாக பந்தல் விளை பகுதியில் 17 சென்ட் நிலமும், அதில் சிதிலமடைந்த சிறு வீடும் உள்ளது. அந்த நிலம் மற்றும் வீட்டை, தான் இறந்த பிறகு பிள்ளைகளுக்கு சேரும் வகையில் பிள்ளைகளின் பெயரில் உயிர் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்ட மூதாட்டி எமிலியை அவரின் பிள்ளைகள் கவனிக்காமல் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதிலமடைந்த தனது வீட்டில் எமிலி தனியாக இருந்துள்ளார். அவரை கவனிக்க யாருமில்லாததால், அவருக்கு அப்பகுதி மக்கள் உணவளித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மூதாட்டி வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். அவரை காணாததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரது வீட்டுக்குத் தேடிச் சென்றுள்ளார். அங்கு, மூதாட்டியின் உடலை எறும்புகள் சூழ்ந்த நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்துள்ளார். உடலில் கடித்துக்கொண்டிருந்த எறும்புகளை விரட்டும் அளவுக்கு சக்தி இல்லாத நிலையில் மூதாட்டி கிடந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் அருமனை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

மூதாட்டி வீட்டில் விசாரணை நடத்திய போலீஸ்

அங்கு சென்ற போலீசார் மூதாட்டியை எழுப்பி ஆசுவாசப்படுத்தி விசாரணை நடத்தினர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மகன் ஒரு வாரத்திற்கு முன்பாக குடிபோதையில் இவர் வீட்டிற்கு வந்து, 17 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதற்கு கையெழுத்து போடவேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாகவும், சொத்தை எழுதித்தர முடியாது எனக் கூறியதால், தனது கையை முறுக்கி உடைத்ததாகவும் மூதாட்டி கூறியிருக்கிறார்.

இதையடுத்து காய்ச்சலால் அவதிப்பட்டு வீட்டைவிட்டு வெளியே போகமுடியாத நிலை ஏற்பட்டதாகவும், படுத்த படுக்கையாக கிடந்ததாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் கொடுத்த ஒரு சீப்பு வாழைப்பழங்களை சாப்பிட்டு ஒரு வாரம் உயிர்வாழ்ந்ததாகவும் மூதாட்டி கூறியது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மூதாட்டி எமிலி

இதையடுத்து மூதாட்டி நடைக்காவு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். பிள்ளைகள் சொத்துக்காக தன்னை கொடுமைப்படுத்திய நிலையிலும் அவர்களை போலீஸ் வருத்தி கண்டிக்க வேண்டாம் எனக் கூறியதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ எனக் கூறியப்படி கனத்த மனதுடன் கலைந்து சென்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.