வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

ரோம் மாநகர்

நாங்கள் ரோம் மாநகரை சுற்றிப் பார்க்க கோடை காலமான ஜூலை கடைசி அல்லது ஆகஸ்ட் மாதத்தை தேர்வு செய்திருந்தோம். நாங்கள் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரோமில் வெயில் நம் ஊர் வெயில் போல் வெளுத்து வாங்கியது.

ரோம் மாநகர் ரோம இதிகாசங்களின் படி ஒரு ஓநாயால் பாலூட்டி வளர்க்கப்பட்ட ரோமுலஸ், எரேமுஸ் என்ற இரட்டையர்களால் உருவாக்கப்பட்ட நகரமாகும்.

நாங்கள் வத்திகானை பார்த்துவிட்டு ரோம் நகரில் அமைந்துள்ள சில தேவாலயங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். இவை மத ரீதியாக மட்டுமன்றி கலை மற்றும் கட்டுப்பாடு விஷேஷங்கள் கொண்டவை ஆதலால் இவை தவிர்க்க முடியாதவை..

Rome

மேலும் ரோமில் உள்ள சில பேராலயங்கள் பற்றியும் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் இங்கு சொல்லியே ஆக வேண்டும். மிகுந்த பரபரப்பில்லாத இப்பேராலயத்தில் மேல் தளத்தை அடைய 28 படிகள் கடந்து செல்ல வேண்டும். இந்த படிகள் இயேசு கிறிஸ்து தன்னை தீர்வையிட்ட ஜெருசலத்தின் மன்னர் போஞ்சு பிலாத்தை சந்திக்க ஏறி சென்ற படிகளாக நம்பப் படுகிறது. இந்த 28 படிகளும் ரோமிற்கு ஜெருசலத்தில் இருந்து கொண்டு வரப் பட்டவையாகும். இந்த படிகளில் ஏறிச்செல்லும் கிறிஸ்துவ விசுவாசிகள் முட்டியிட்டே அவற்றில் ஏறிச் செல்கின்றனர். முட்டியிட்டு ஏற முடியாதவர்களுக்கென அருகிலேயே தனி படிகள் உள்ளன.

இன்னொரு பேராலயம் ரோமில் அமைந்துள்ள ஜெருசலத்தின் புனித சிலுவை பேராலயமாகும். இந்த பேராலயத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்த ஒரு ஆணியும் தலையில் சூடப்பட்ட முள் கிரீடத்தில் இருந்ததாக நம்பப் படும் இரண்டு முட்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் இயேசு கிறிஸ்துவை சிலுவயில் அறைந்த பொழுது அவர் தலைக்கு பின்னால் பொருத்தப்பட்டதாக நம்பப்படும் பலகையும் இன்றும் இங்கு பாதுகாத்து வரப்படுகிறது.

மூன்றாம் நாள் மாலை பாந்தியன் என்று அழைக்கப்படும் பேராலயம் சென்றோம். இது அக்காலத்தில் அதாவது கிறிஸ்துவர்களை அவர்கள் பின்பற்றும் கிறிஸ்துவ மதத்தை அங்கீகாரம் செய்வதற்கு முன்பு இருந்த ரோம தெய்வங்களை கொண்டிருந்த இடமாகும். கி.பி. 300 களில் ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கான்ஸ்டாண்டின் எனும் மன்னர் மன மாற்றம் கொண்டு கிறிஸ்துவ மதத்திற்கு அதிகாரம் கொடுத்தார். அப்பொழுது கிறிஸ்துவர்களிடம் கொடுக்கப்பட்ட இந்த பாந்தியன் இப்பொழுது கிறிஸ்துவர்களின் பேராலயங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பாந்தியன் உள்ளே அமையப் பெற்ற ஓவியங்களும் சிலைகளும் தவிர்த்து இந்த பாந்தியனின் கட்டிட அமைப்பும் காண்போர் உள்ளங்களை கவர்வனவாக உள்ளன.

Rome

பாந்தியனை சுற்றி பார்த்துவிட்டு நாங்கள் இரவு உணவை முடித்து கொண்டு தங்கும் விடுதி திரும்பினோம்.

இங்கு ரோம் மாநகரில் ஓடும் வாடகை கார்களை பற்றி ஓரிரு வரிகள் சொல்லியே ஆக வேண்டும். நிறைய ஓட்டுனர்கள் மீட்டர் வாடகையே வாங்கினாலும் சில ஓட்டுனர்கள் தங்கள் இஷ்டம் போல் வாடகை வசூலிக்கின்றனர். உபெர் வாடகை கார்களும் ரோமில் கிடைக்கின்றன.

அடுத்த நாள் பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் கொலோசியம் செல்ல ஏற்பாடு. வத்திகானைப் போல கொலோசியமும் கொலோசியத்தின் அருகில் உள்ள ரோமன் ஃபாரத்தையும் கைடட் டூரில் பார்க்க பதிவு செய்திருந்தோம். அது மதியம் மூன்று மணிக்கு. காலை காடெகோம்ப்(B) என்று அழைக்கப்படும் நிலத்தின் கீழே அமையப்பெற்றுள்ள கல்லறைகளை காண முடிவு செய்தோம்.

அன்று இரவு உறக்கத்தில் க்ளாடியேட்டர் உடைகள் அணிந்து சிங்கம் புலிகளை எதிர்த்து சண்டை போடுவது போல் கனவு.

அடுத்த நாள் காலை.

காலை உணவுடன் காஃபுசினோ குடித்து விட்டு உபெரில் ஏறி அமர்ந்தோம் காடெகோம்ப் நோக்கி.

ரோம் முழுவதும் நிலத்தின் கீழே பல கல்லறைகள் அமையப் பெற்றிருந்தாலும் புனித காலிஸ்டஸ் காடெகோம்ப்கள் மிக பிரசித்தி பெற்றவை. இவற்றை சென்று பார்க்க கட்டாயம் ஒரு வழிகாட்டி தேவை. வழிகாட்டி இல்லாமல் இந்த நிலத்தடி கல்லறைகளை பார்க்க அனுமதி கிடையாது. நாங்கள் சென்ற இந்த கல்லறைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர்களுக்குக்கு மேலான பகுதி மனிதர்களால் இன்னும் சென்றடையப் படவில்லை.

ரோம் மாநகருக்குள் மெட்ரோ ரயில் வசதி கிடையாது. ஏனெனில் எங்கு தோண்டினாலும் அங்கெல்லாம் ஏதாவது சரித்திர சம்பந்தப்பட்ட புதைபொருட்கள் கிடைக்கின்றனவாம்.

கடைசியாக கொலோசியம். ரோமில் உள்ள கொலோசியம் பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கொலோசியத்தின் பகுதிகள் முதலில் இருந்த கொலோசியத்தின் மூன்றில் ஒரு பாகமே ஆகும். மற்றவை சிதிலமடைந்து விட்டன.

கொலோசியம் என்பது ஒரு வகை விளையாட்டு அரங்கமாக இருந்து வந்திருக்கிறது.

Rome

ஜூலியஸ் சீசர் காலத்தில் காலையில் கொலோசியத்தில் குற்றம் செய்தோருக்கும் எதிரிகளுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. மதியம் வீரவிளையாட்டுகள் நடக்கும்.

சீசர் காலத்தில் வீர விளையாட்டுகள் என்று கருதப்பட்ட இந்த விளையாட்டுகள் மனிதன் மனிதனுக்கு எதிராகவும் மனிதனுக்கும் மிருகங்களுக்கு எதிராகவும் நடை பெற்று வந்திருக்கிறது. இந்த வீர விளையாட்டுகளில் பங்கு பெறுவோரே க்ளாடியேட்டர் என்று அழைக்கப்பட்டனர். இந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றோருக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த அரங்கின் உள் அமைப்பு எவ்வாறு அமையப்பெற்றதென்றால் எதிரியோ தாக்கவரும் விலங்கோ எந்த வழியாக தாக்க வருவாரென்று க்ளாடியேட்டருக்கு கடைசி நிமிடம் வரை தெரியாது.

இந்த விளையாட்டுகளை காண ரோம பேரரசருக்கும் அவரின் மந்திரிகளுக்கும் சிறப்பு இருப்பிடம் வழங்கப்பட்டது. மேலும் சில கன்னிகளும் விஷேச இருக்கைகளில் அமர்ந்து இவ்விளையாட்டுகளை பார்வையிடுவர்.

இந்த கன்னிகள் ஆறு வயதிலிருந்து பத்து வயதிற்குள் தேர்ந்தெடுக்கப்படுவர் ரோம சம்பிரதாயங்கள் படி. இவர்கள் நாற்பது வயது வரை கன்னிகளாகவே வளர்க்கப்படுவர். நாற்பது வயதில் இவர்களின் கன்னித்தன்மை சோதிக்கப்படும். அவர்கள் கன்னிகளென நிரூபணம் ஆனால் அவர்கள் ரோமர்களால் பெரிதும் மதிக்கப்படுவர். நிரூபணம் ஆகவில்லையெனில் சிரச்சேதம் செய்யப்படுவர்.

நாம் கொலோசியத்தை அக்காலத்தில் குடிமக்கள் அமர்ந்து பார்வையிட்ட மேல்தள காலரிகளில் இருந்து பார்வையிடலாம். அந்த மேல்தளத்தை அடைய படிகளில் நடந்து செல்ல முடியாதோற்கு லிஃப்ட் வசதியும் இருக்கிறது.

மேலே இருந்து கொலோசிய அரங்குகளை பார்த்துவிட்டு நம்மை வழி நடத்துனர் ரோமன் ஃபாரத்திற்கு அழைத்து சென்றார்.

இத்தாலிய மொழியில் ஃபாரம் என்றால் வெளியே என்ற பொருளாம்..

Rome

கொலோசியத்தின் வெளியில் இந்த அரங்கம் அமைந்துள்ளதால் இது ரோமன் ஃபாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஃபாரத்திலேயே சட்ட வல்லுநர்களும் மேதைகளும் பண்டைய ரோம சட்டங்களை நிறுவினர். பொது ஜனங்கள் தங்கள் சட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண ரோம் மாநகரில் உள்ள வல்லுநர்களையே அணுகினர்.

ஜூலியஸ் சீசரின் காலத்தில் ரோமன் ஃபாரத்தில் சீசருக்கு ஒரு மிகப் பெரிய சிலை அமையப் பெற்றிருந்ததாக நம்பப்படுகிறது. சீசரின் கொலைக்கு பின்னர் அந்த சிலையும் அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அக்காலத்தில் நடைபெற்றதாக கருதப்படும் பிரசித்தி பெற்ற ரதங்களின் பந்தயமும் இந்த ரோமன் ஃபாரத்திலேயே நடை பெற்றதாக நம்பப்படுகிறது.

இந்த ரோமன் ஃபாரமும் கொலோசியத்தின் பாகங்களும் ரோமில் ஏற்பட்ட தீ விபத்தினாலும் பெரு வெள்ளத்தாலும் அழிந்துவிட்டதாக வரலாறும் அந்த விபத்திலிருந்து தப்பித்த ஆவணங்களில் இருந்தும் கல்வெட்டுகளில் இருந்தும் தெரிய வந்திருக்கிறது.

ரோமன் ஃபாரம் இவ்வாறெல்லாம் இருந்திருக்கலாம் என்று நமது கற்பனைக்கே விடுகிறார் வழிகாட்டுனர்.

இரவில் ரோம்

பகலில் ரோமை மாநகரை சுற்றிப் பார்க்க பேருந்து வசதிகள் உள்ளன. இவற்றில் ஒரு நாளுக்கு உண்டான கட்டணத்தை செலுத்திவிட்டு முக்கிய இடங்களில் இறங்கிக் கொண்டு அந்த இடத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வேறொரு பேருந்தில் ஏறி இன்னொரு இடத்தை அடையலாம்.

பகலில் ரோம் மாநகர் புராதன வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் கலை நயம் மிக்க ஓவியங்களையும் பளிங்கு சிலைகளையும் கொண்டுள்ள பேராலயங்களையும் நம் கண் முன் நிறுத்துமேயானால் இரவில் ரோம் மாநகர் அலங்கார விளக்குகள் கொண்டு முற்றிலும் மாறுபட்ட காட்சியை நம் கண் முன் நிறுத்துகிறது.

Rome

இத்தாலியில் சுற்றி பார்ப்பதற்கு மிலான், வெனிஸ், ஃப்ளோரென்ஸ், பிசாவின் சாய்ந்த கோபுரம் போன்ற வேறு பல இடங்கள் இருந்தாலும் நாட்கள் பற்றாக்குறையால் ஸ்டுட்கார்ட் திரும்பினோம்.

இத்தாலியின் கடின வெயிலுக்கு பின் ஸ்டுட்கார்டின் இளம் குளிர் உடலுக்கும் மனதுக்கும் இதம் தந்தது.

நல்ல ஒரு உல்லாசப் பயணம் கலந்த விடுமுறைக்கு பின் வீட்டை நோக்கி பயணம்.

வழி அனுப்ப மகளும் மருமனும் ஃப்ரான்க்ஃபர்ட் வரை வந்தனர்.

ஃப்ரான்க்ஃபர்ட்டில் மதிய உணவு அஞ்சப்பரில் உண்டோம். மதியம் 3.30க்கு துபாய் பயணம்.நாங்கள் 1.30க்கு ஃப்ரான்க்ஃபர்ட் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்தோம். எமிரேட்ஸ் பயணிகளுக்கென்று தனி செக் இன் கவுண்டர்.ஜனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆமை வேகத்தில் பயணிகள் நகர்ந்தனர்.

ஒரு விஷேஷ கவுண்டர் திறந்து சற்று வேகமாக மக்கள் நகர்ந்தனர்.

ஒரு வழியாக ஃப்ரான்க்ஃப்ர்ட் விட்டு துபாய் சற்று தாமதமாக வந்து சேர்ந்தோம்.

அதே எமிரேட்ஸ். அதே போன்ற வேலை ஆட்கள். ஆனால் பயணிகளை கவனித்ததில் ஒரு நேர்த்தி இருந்தது. ஏனென்றால் நாங்கள் இருந்த விமான நிலையம் துபாய் பன்னாட்டு விமான நிலையம்.

Rome

துபாயில் இருந்து சென்னை. அடுத்த நாள் காலை வந்தடைந்தோம்.

சென்னையில் இருந்து திருச்சி ஒரு வழி ட்ராப் டாக்சி.

வழியில் இரண்டு மினரல் வாட்டர் பாட்டில் வாங்கி கொண்டோம் .

வழி முழுவதும் ஜெர்மனி, ஸ்விட்சர்லாண்ட் மற்றும் இத்தாலி மக்களின் கலாச்சாரம் பற்றியும் அவர்கள் தங்கள் ஊர்களையும் தங்கள் சுற்று வட்டாரத்தையும் ஈடுபாட்டுடன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது பற்றியும் மீராவும் நானும் பேசிக் கொண்டே வந்தோம்.

ஒரு மினரல் வாட்டர் பாட்டில் காலியாகி விட்டது.

கார் ஓட்டுனரிடம் சொன்னேன்,” வழியில் எங்காவது குப்பை போடும் இடத்தில் நிறுத்துங்கள். இந்த காலி பாட்டிலை போடவேண்டும்”

என்னை ஒரு முறை திரும்பி பார்த்த ஓட்டுனர், தன் இடது கையை என்னிடம் நீட்டினார். குறிப்புணர்ந்த நானும் அந்த காலி பாட்டிலை அவரின் கையில் கொடுத்தேன்.

அந்த பாட்டிலை வாங்கிய ஓட்டுனர் கார் கண்ணாடியை இறக்கி காலி பாட்டிலை ரோட்டில் விட்டெறிந்து விட்டு மீண்டும் வண்டி ஓட்டுவதில் மும்முரமானார்.

சட்டென்று என் தலையில் யாரோ அடித்தது போல் இருந்தது.

இந்தியா அடைந்துவிட்டதை உறுதிப்படுத்தி விட்டார் கார் ஓட்டுனர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.