கவர்ச்சிகரமான தங்க நகை சேமிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்று, 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி பொருளாதாரக் குற்றப்ப்பிரிவு போலீஸ் பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் மதன் மற்றும் கிருத்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. அந்த விசாரணையின் முடிவில் பிரணவ் ஜூவல்லர்ஸில்  சட்டவிரோதமான பணப் புழக்கம் இருப்பதாகச் சொல்லப்பட, இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்தது.

இதைத்தொடர்ந்து, சென்னை, திருச்சியில் பிரணவ் ஜூவல்லர்ஸ் தொடர்பான இடங்களில் கடந்த நவம்பர் 20-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. மேலும் கணக்கில் வராத சுமார் 23.70 லட்சம் பணம் மற்றும் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்ல, பினாமிகள் மூலம் பிரணவ் ஜூவல்லர்ஸ் 100 கோடி ரூபாய்க்கு மேல் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிக்கொண்டதாகவும் அமலாக்கத்துறை கூறுகிறது. இதனிடையே 100 கோடி ரூபாய் பொன்சி திட்ட முறைகேடு தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் பிரகாஷ் ராஜ்

பிரணவ் ஜூவல்லர்ஸ் தொடங்கும் போது தொலைக்காட்சிகளில் பிரமாண்டமான அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தில் நடித்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். எனவே, பிரகாஷ் ராஜ்-க்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மன் விளம்பரத்தில் நடித்ததற்காக மட்டுமா என்ற விசாரணையில் இறங்கினோம்.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். “நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். உலகக் கோப்பை தோல்வியை அடுத்து வீரர்களை அவர்களின் டிரஸ்ஸிங் ரூமில் சென்று பிரதமர் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து சிறப்பான நடிகரின் திரைக்கதை தவறாக போய்விட்டது, இதுபோல இன்னும் சில வரலாம்” எனச் சொல்லி #justasking என்ற ஹேஸ்டேக்குடன் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.

மேலும், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “மோடி சிறந்த நடிகர், மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறாரே” என விமர்சித்திருந்தார். சந்திரயான் 3 குறித்து அனைவரும் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும்போது பிரகாஷ் ராஜ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில், “வாவ்… நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்” என்ற கேப்ஷனோடு, #justasking என்ற ஹேஷ்டேக்குடன் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற கார்ட்டூன் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதுவும் அப்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகி பிரகாஷ் ராஜ் மீது பா.ஜ.க-வினர் காவல் நிலையங்களில் புகாரளிக்கும் வரை சென்றது.

தேசிய விருதுகள், இந்தித் திணிப்பு உள்ளிட்டவற்றுக்கு பா.ஜ.க-வினரை மட்டுமல்லாது, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கும் நடிகர் சுதீப், நடிகை கங்கனா ரணாவத் போன்றவர்களையும் விமர்சித்து வந்தார்.” என்றவர்கள்…

பிரகாஷ் ராஜ் விமர்சனம்

“இதன் விளைவாகத்தான் இப்போது பிரணவ் ஜூவல்லர்ஸ் விவகாரத்தில் பிரகாஷ் ராஜ்க்கு சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரணவ் ஜூவல்லர்ஸே பிரகாஷ் ராஜ்-இன் பணத்தில்தான் இயங்குகிறது. ஒட்டுமொத்த முதலீடுமே பிரகாஷ் ராஜ்-னுடையதுதான் என்பது போன்ற கட்டமைப்பு உருவாக்க நினைக்கிறார்கள். இதனால், மத்தியில் ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்களை திருப்தி படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். இப்படித் திருப்திபடுத்துவதன் மூலம் அமலாக்கத்துறையின் தோல்விகளை மறைக்கப் பார்க்கிறார்கள்” என்கின்றனர்.

பா.ஜ.க தரப்பில் இது குறித்து விசாரித்தோம். “கருணாஸ் ஒரு படத்தின் காமெடியில் ‘எங்கே எது காணாமல் போனாலும் என்னைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள்’ என நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு சொல்வார். அதுபோல இப்போது எங்கே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடத்தினாலும் அது பா.ஜ.க-வின் தூண்டுதலில்தான் நடக்கிறது என்கிறார்கள். யார்மீது எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் சோதனைகள் நடத்துவதில்லை. அப்படி ஒரு ஆதாயத்தைத் தேட வேண்டிய அவசியம் பா.ஜ.க-வுக்கு இல்லை. பல ஆயிரம் மக்களை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தக் குற்றத்தை நிரூபித்து மக்களுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுத்தர வேண்டியது ஒரு அரசின் கடமை. இதை மாநில அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்குத் தங்களின் அமைச்சர்களைக் காப்பாற்றவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி மக்களைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.” என்றவர்கள்…

அமலாக்கத்துறை

“அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. தன்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லையென்றால் அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்து வெளியில் வரப் போகிறார். அதற்காக எல்லாவற்றுக்கும் பா.ஜ.கதான் காரணம் எனச் சொல்லுவதை ஏற்க முடியாது” என்றனர் சற்றுக் கோவமாக.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.