கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அடிமாலிக்கு அருகில் உள்ள இருநூறேக்கர் பொன்னொடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மரியகுட்டி. இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். 36 வயதில் கைவிட்டுச் சென்ற கணவர், பின்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் தன் நான்கு பெண்களையும் தனியாளாக வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்துள்ளார் மரியகுட்டி. வருமானம் ஈட்டி கவனித்துக்கொள்ள கணவனோ, மகனோ இல்லாத நிலையில் கடந்த 45 ஆண்டுகளாக கைம்பெண் பென்ஷன் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். மாதம் 1,600 ரூபாய் பென்ஷன் பெற்றுவந்தார்.

மரியகுட்டிக்கு வீடுதேடிச் சென்று பென்ஷன் வழங்கிய அதிகாரிகள்

இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திடீரென மரியகுட்டிக்கு பென்ஷன் நிறுத்தப்பட்டத்து. அதுபற்றி அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று கேட்டுள்ளார். அதற்கு, ‘நீங்கள் உம்மன்சாண்டியிடம் கேளுங்கள், நரேந்திரமோடியிடம் கேளுங்கள்’ எனச் சில அதிகாரிகள் கிண்டலாகக் கூறியதாகத் தெரிகிறது. நான்கு மாதங்களுக்கு மேலாக பென்ஷன் கிடைக்காததை அடுத்து தனி ஒருத்தியாக போராட தயாரானார் மரியகுட்டி. அதற்காக மண்சட்டியில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நவம்பர் 7-ம் தேதி தொடங்கினார்.

’மண்சட்டி சமரம்’ என கேரளா முழுவதும் மரியகுட்டியின் போராட்டம் பிரபலம் ஆனது. இரண்டு வருடங்களாக முதியோர் பென்ஷன் கிடைக்காத 80 வயதான அன்னா யோசேப்பும் அவருடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

கேரளாவில் ஆளும் சி.பி.எம் கட்சியினர் மரியகுட்டிக்கு எதிராக சில அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டனர். தன் கடைசி மகளின் வீட்டில் வசித்துவரும் மரியகுட்டி, தனக்கு சொத்து இருக்கிறது என்று பரப்பப்பட்ட அனைத்து பொய் பிரசாரங்களையும் ஆதாரபூர்வமாக முறியடித்தார். மேலும், பென்ஷன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு அளித்தனர்.

மண்சட்டி சமரம் நடத்திய மரியகுட்டி

இந்த நிலையில் மரியகுட்டியின் வீட்டுக்கு நடிகரும் பா.ஜ.க முன்னாள் எம்.பி-யுமான சுரேஷ்கோபி சென்று அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார். மேலும், தனது சொந்த செலவில் மாதம் 1,600 ரூபாய் வழங்க உள்ளதாகவும் சுரேஷ்கோபி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மண்சட்டி சமரம் செய்த மரியகுட்டியின் மன உறுதிக்கு முன் அரசு பணிந்தது. அடிமாலி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் நேற்று மரியகுட்டி வீட்டுக்குச் சென்று ஜூலை மாத பென்ஷன் தொகையான 1,600 ரூபாயை நேரடியாக வழங்கினர்.

அதை பெற்றுக்கொண்ட மரியக்குட்டி கூறுகையில், “இன்னும் நான்கு மாத பென்ஷன் தொகை பாக்கி உள்ளது. அவற்றை வழங்காமல் இருந்தால் போராட்டத்தை தொடருவேன். எல்லோருக்கும் சேரவேண்டியதை அரசு வழங்க வேண்டும். எனக்கு மட்டும் அல்ல, கிடைக்க வேண்டிய அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமல் உள்ளவர்கள் அனைவருக்கும் அது வழங்கப்பட வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்தினேன்.

மண்சட்டி சமரத்தில் மூதாட்டி மரியகுட்டி

ஆனால், சிலர் எனக்கு சொத்து இருப்பதாக பரப்பினர். இந்த விளையாட்டுகள் எதுவும் என்னிடம் நடக்காது. நான் டீ கூட கடன் வாங்கித்தான் குடித்தேன். அந்தக் கடனை அடைக்க வேண்டும். முதல்வர் இப்படி ஆட்சி செய்தால் மக்கள் என்ன செய்வார்கள்? பா.ஜ.க-விலோ, முஸ்லிம் லீக்கிலோ, நக்‌ஸலைட் அமைப்புகளிலோ சேருவார்கள்.

‘தொழிலாளி சமூகம் ஜிந்தாபாத்’ எனக்கூறிதான் பினராயி விஜயன் அதிகாரத்திற்கு வந்தார். நாங்கள்தானே தொழிலாளி? அப்படியானால் எங்களுக்கு தரவேண்டியதை தரவேண்டாமா? அவரைவிட நன்றாக ஆட்சி செய்யும் பிள்ளைகள் இங்கு இருக்கிறார்கள். மக்களின் வயிற்றுப் பிழைப்புதான் விஷயம். அனைவருக்கும் பாக்கியுள்ள முழு தொகையையும் வழங்காவிடில் போராட்டம் தொடரும்” என்று பேசியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.