அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில், `முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் காமராஜ். இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்திருக்கிறார். அது தொடர்பாக நான் அளித்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி A.D.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப் ஆஜாராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அதில், `முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது இதே முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது.

2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்யும் டெண்டர் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் விவரங்களை அவர்களின் முகவரியோடு வழங்குமாறு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

அந்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த டெண்டர்களில் பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற நிறுவனங்களின் தகவல்களை அளிக்குமாறு, கம்பெனிகளின் பதிவாளருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட காலத்தில் 48 டெண்டர்கள் கோரப்பட்டன. அது தொடர்பாக 24,000 பக்கங்கள்கொண்ட ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்வதற்குக் கால அவகாசம் தேவைப்படும். விரிவான முதற்கட்ட விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், விசாரணையில் புகாருக்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறப்பட்டது.

அறப்போர் இயக்கம்

இதற்கிடையே, `இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனு இன்னும் பட்டியலிடப்படவில்லை (NUMBERING)’ என அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, A.D.ஜெகதீஷ் சந்திரா, இரண்டு மனுக்களும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.