வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விட்டுவிட்டு பெய்த கனமழை, இன்று காலை முதல் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது.

சென்னை

குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 4.5 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16-ல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக, அடுத்த ஐந்து நாள்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை

அதோடு, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கைக் கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்று பெய்த கனமழையால் எட்டு மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தயாராக இருக்கும்படி, 27 மாவட்ட நிர்வாகங்களை வருவாய்த்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

சென்னை

இது குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில், “மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. கடலோர மாவட்டங்களில் 121 இடங்களில் புயல் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. மழை பாதிப்புகள் குறித்துப் புகாரளிக்க 1070 என்ற எண்ணில் மாநிலக் கட்டுப்பாட்டு மையத்தையும், 1077 என்ற எண்ணில் மாவட்டக் கட்டுப்பாட்டு மையங்களையும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். 9445869848 வாட்ஸ்அப் எண்ணிலும் புகாரளிக்கலாம்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

கனமழையால் இதுவரை உயிரிழப்புகள் உட்பட எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. கனமழை பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள், தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். குடிசை வீடுகளில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக அரசின் ஆய்வு மையங்களுக்குச் சென்று தங்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முன்னதாக, சென்னை எழிலகத்திலுள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இன்னொருபக்கம், சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.