பாகிஸ்தானின் கராச்சி அருகிலிருக்கும் கிராமம் இப்ராஹிம் ஹைடேரி. ஏழ்மையான மீனவ கிராமமான இதில், ஹாஜி பலோச் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரபிக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, தங்க மீன்கள் என மக்களால் அழைக்கப்படும் சோவா மீன்கள் இவரது வலையில் சிக்கியிருக்கின்றன. வழக்கம்போல மீன்களைக் கரைக்குக் கொண்டுவந்து பார்த்தபோதுதான், அதில் சோவா மீன்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது.

தங்க மீன் எனும் சோவா மீன்

வெள்ளிக்கிழமைக் காலை கராச்சி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் வலைகளில் சிக்கிய மீன்களை ஏலம்விட்டனர். அந்த வகையில், ஹாஜி பலோச் தன்னுடைய வலையில் சிக்கிய அரிய வகை சோவா மீன்களை ஏலத்தில் விட்டிருக்கிறார். அதில் ஆச்சர்யமளிக்கும்விதமாக சோவா மீன்கள், சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருக்கின்றன. கற்பனையே செய்ய முடியாத அளவு ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய ஹாஜி பலோச், அதிர்ஷ்டவசமாக கிடைத்த பணத்தைத் தன்னுடன் உழைத்த ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். தங்க மீன் எனக் கூறப்படும் சோவா மீன் மிகவும் விலை உயர்ந்ததாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. அதன் வயிற்றிலுள்ள பொருள்கள் சிறந்த மருத்துவ குணம் கொண்டவை எனக் கூறப்படுகிறது.

குறிப்பாகப் பாரம்பர்ய மருந்துகளுக்குப் பெயர் பெற்றவை. இந்த மீனிலிருந்து எடுக்கப்படும் நூல் போன்ற பொருள், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மீன்கள் பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையும், 1.5 மீட்டர் வரையும் வளரக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் மட்டுமே இந்த மீன்கள் கடற்கரைக்கு அருகில் வரும் என்பதால், மிக அரிதாகவே வலைகளில் சிக்கும். இந்த சோவா மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது. இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு ஜிவானி கடலில், பலுசிஸ்தான் கிராம மீனவருக்குக் கிடைத்தது. அப்போதும் ரூ.7 கோடி வரை ஏலம்விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.