சென்னை வடபழனி, திருநகர் 1-வது தெரு, 100 அடி சாலை சந்திப்பு அருகே வடபழனி போலீஸார் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்த புல்லட் பைக்கில் பந்தாவாக போலீஸ் எஸ்.ஐ சீருடையில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த வடபழனி போலீஸார், யார் இவர்… எதற்காக இங்கு நிற்கிறார் என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து வடபழனி போலீஸார் அவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்தனர். ஆனால், போலீஸ் சீருடையில் நின்றவர், நீண்ட நேரமாக அங்கேயே இருந்தார். இதையடுத்து அவரிடம் வடபழனி போலீஸார், `சார் நீங்க எந்த ஸ்டேஷன்?’ என்று மரியாதையாகப் பேச்சுக் கொடுத்தனர். அதற்கு அவர், `ஸ்டேஷனா… நான் போலீஸ் எஸ்.ஐ’ என்று கூறினார். எந்த ஸ்டேஷன் என்பதை அவர் கடைசிவரை கூறாமல், தேவையில்லாதவற்றைப் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட முயன்றார். உடனே போலீஸ் சீருடையிலிருந்தவர்மீது வடபழனி போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்தது.

புல்லட்

இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் இளங்கனி ஆகியோரிடம், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் போனில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சீருடையில் இருப்பவரை வடபழனி காவல் நிலையத்துக்கு அழைத்து வரும்படி போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த நபர் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு போலீஸ் எஸ்.ஐ சீருடையில் இருந்தவரிடம் உதவி கமிஷனர் சுரேஷ், `நீங்கள் எப்போது காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தீர்கள்… உங்களின் ஐ.டி கார்டைக் கொடுங்கள்’ என்று கேட்டார். அப்போது அந்த நபர், `சார் நான் ஒரிஜினல் போலீஸ் எஸ்.ஐ இல்லை சார், நாடகத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பேன். அதற்காகத்தான் இந்தச் சீருடையிலிருக்கிறேன்’ என்று கூறி சமாளித்தார்.

அதற்கு உதவி கமிஷனர், `எந்த நாடகம்?’ என்று கேட்டதற்கு, அவரால் பதிலளிக்கத் தெரியவில்லை. பின்னர் நடந்த விசாரணையில் அவரின் பெயர் அஸ்வின் என்கிற அஸ்வின்ராஜ் (30), சென்னை ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரின் வீட்டுக்கு வடபழனி போலீஸார் சென்று ஆய்வு நடத்தியபோது, அங்கு போலீஸ் தொப்பி, பெல்ட், போலி போலீஸ் ஐ.டி கார்டு, அஸ்வின் போலீஸ் சீருடையில் எடுத்த போட்டோ, அஸ்வின் என்று எழுதப்பட்ட பெயர் பேட்ஜ் என பக்கவாக ஒரு போலீஸ் எஸ்.ஐ-க்குத் தேவையான அனைத்தும் அந்த வீட்டில் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரின் மனைவியிடம் விசாரித்தனர். அப்போது அவர், `என் கணவர் போலீஸ் எஸ்.ஐ’ என்று கூறினார். அதையடுத்து, `உங்கள்கவர் ஒரிஜினல் போலீஸ் இல்லை’ எனக் கூறிவிட்டு, போலீஸார் காவல் நிலையத்துக்கு வந்தனர்.

அஸ்வின்

பின்னர் அஸ்வினிடம் விசாரித்தபோது, வீடு புரோக்கர் வேலைப் பார்த்து வருவதாகவும் எட்டாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அந்தத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால், போலீஸ் சீருடையில் மாமூல் கேட்டால் கிடைக்கும் எனக் கருதி இந்த ஏற்பாடுகளைச் செய்ததாகத் தெரிவித்தார். மாமூல் வசூலிப்புக்காகவே புல்லட் ஒன்றை வாங்கிய அஸ்வின், அதில் `போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார். பின்னர், காக்கி நிற பேன்ட் அணிந்துகொண்டு கையில் தொப்பியை எடுத்துச் செல்லும் அஸ்வின், ஏதாவது ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, அவ்வழியாகச் செல்பவர்களிடம் போலீஸ் என மிரட்டிப் பணம் பறித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், ரீல் போலீஸ் அஸ்வின், ரியல் போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார். இதையடுத்து அஸ்வினைக் கைதுசெய்த வடபழனி போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.