பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளில், ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் மேற்கொண்டார். மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூர் நாச்சியார் கோவில் அருகே நடைபயணத்தை தொடங்கிய அவர் சாலை ரோடு, கிழக்கு தொகுதிக்குட்பட்ட மேல புலிவார் ரோடு, மரக்கடை பகுதிகள் வழியே காந்தி மார்கெட்டில் நிறைவு செய்தார்.

காந்தி மார்கெட் பகுதியில் பேசிய அவர், “கடுமையாக உழைக்கும் மக்களுக்கு வெகுமதி கொடுப்பது இந்தியர்களின் பழக்கம். 2014-ல் மோடி பிரதமராக ஆன போது பெரிய மாற்றத்தை விரும்பி மக்கள் பா.ஜ.க-வை தேர்ந்தெடுத்தார்கள். பொதுவாக, பா.ஜ.க பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது. ஆனால், 2014 -ல் மோடி தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆட்சியார்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்ய மாட்டார்கள். ஆனால், மோடி எல்லாருடைய எதிர்ப்பார்ப்பையும் தாண்டி செயல்பட்டார். அதன் காரணமாக, கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதே போல, 2024 -ல் 400 எம்.பிக்களோடு பிரதமராவார்.

அண்ணாமலை

70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி 2 சதவீதம் தான். பா.ஜ.க ஆட்சி அமைந்த பின் இந்த 9 ஆண்டுகளில் தன் சொந்த காலில் நிற்க கூடிய, உலக நாடுகளுக்கு உதவ கூடிய நாடாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 9 ஆண்டுகளில் 11 வது இடத்திலிருந்த இந்தியா 5 வது இடத்திற்கு வந்துள்ளது. 2027 -ல் மூன்றாவது பெரிய நாடாக உயர போகிறது. 2047 முடியும் போது உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கும். ஊழல் இல்லாத, நாட்டுக்காக உழைக்கும் மனிதன் ஆட்சி பீடத்தில் அமரும் போது அது நடக்கும். ஆனால், நம் ஆட்சிக்கு நேர் எதிரான ஆட்சி தான் தி.மு.க ஆட்சி.

ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து ஊழல் செய்து வருகிறார்கள். இது போன்ற ஆட்சியை தமிழ்நாடு பார்த்ததில்லை. மகனுக்கும், மருமகனுக்குமான ஆட்சியாக தி.மு.க ஆட்சி இருக்கிறது. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் சாதாரண மனிதர்கள். அவர்களுக்கு ஏழை மக்களின் கண்ணீர் தெரியும். அதனால், அவர்களுக்காக உழைத்தார்கள். ஆனால், ஸ்டாலினின் ஒரே தகுதி கருணாநிதியின் மகன் என்பது மட்டும் தான். அதே போல உதயநிதிக்கு ஸ்டாலினின் மகன் என்கிற தகுதி தான். ஏழை தாயின் மகன் என மோடி கூறியது போல் வேறு எந்த ஆட்சியாளர்களும் கூற முடியுமா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா?. வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதா?. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 3,50,000 பேருக்கு வேலை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து கேட்டால் பிரதமர் இந்தியை திணிக்கிறார் என சம்மதம் இல்லாமல் பேசுகிறார்கள்.

உதயநிதி, ஸ்டாலின்

கும்மிடிப்பூண்டியை தாண்டி தமிழ் மொழியை செல்லாமல் வைத்திருந்தது தான் தி.மு.க. ஆனால், இன்று பிரதமர் மோடி ஐ.நா சபை வரை தமிழ் மொழியை கொண்டு சென்றுள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய சின்னமான செங்கோலை பிரதமர் வைத்துள்ளார். புதிய கல்வி கொள்கையில் 5 ஆம் வகுப்பு வரை தாய் மொழி தான் பயிற்று மொழி என கூறப்பட்டுள்ளது. இனி, பிரதமர் தமிழ் மொழியை இந்தியா மேல் திணிக்கிறார் என தி.மு.க வினர் குற்றச்சாட்டு வையுங்கள்.

தி.மு.க ஆட்சியில் அவர்களுக்கு பிடித்த நான்கு ஐந்து தலைவர்களுக்கு மட்டும் போஸ்டர் ஒட்டி சிலை வைத்துள்ளார்கள். இந்தி கட்டாய மொழி ஆக்கப்படும் போது அதற்கு போராடியவர் கி.ஆ.பெ அவர்கள். கி.ஆ.பெ தன் கடைசி காலத்தில் தமிழகத்தில் மும்மொழி கொள்கை வேண்டும் என கூறியுள்ளார். 1967 க்கு பிறகு நான்கு தலைவர்கள் பெயர் தான் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. 511 வாக்குறுதிகளில் 20 கூட திமுக நிறைவேற்றவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வரும் பொழுது கோவிலுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாக்கியங்கள் இருக்க கூடிய பலகை இருக்காது என ஸ்ரீரங்கத்தில் பேசினேன். நம்முடைய அரசியல் வளர்ச்சி அரசியல், ஏழைகளின் முன்னேற்றத்திற்கான அரசியல், எல்லா மதமும் சம்மதம் என்கிற அரசியல்.

அண்ணாமலை

கோயிலுக்கு செல்லும் போது எல்லா மனிதர்களும் கோயிலுக்கு அழைத்து சென்றவர்கள் சிலை வைக்கப்படும். மதுரையில் முத்துராமலிங்க தேவர், வைத்தியநாத ஐயர் ஆகியோர் சிலை கோவில்களுக்கு வெளியே வைக்கப்படும். கோவில்களுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாக்கியங்கள் அடங்கிய சிலை பொது இடத்தில் வைக்கப்படும். சிலையை உடைக்க மாட்டோம். மனிதர்களை முன்னிலைப்படுத்தி தான் பா.ஜ.க ஆட்சி இருக்கும். திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஸ் பொய்யாமொழி இருவரும் சண்டையிட்டு கொண்டிருக்கார்கள். இருவரும் திருச்சி முன்னேற கூடாது என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அன்பில் மகேஸ் பொய்யாமொழி 90% உதயநிதியுடன் இருக்கிறார். 10 சதவீதம் சினிமா நிகழ்ச்சிகளில் இருக்கிறார்.

தமிழகத்தில் 11,711 வகுப்பறைகள் குறைவாக இருப்பதாக 2022 ல் சி.ஏ.ஜி அறிக்கை கூறி உள்ளது. அந்த குழந்தைகள் மரத்தடியில், மேற்கூரை இல்லாத இடங்கள், ஆய்வகத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். 18,862 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அடுத்த கட்டமாக குழந்தைகள் அரசு பள்ளிகளில் தோற்று கொண்டிருக்கிறார்கள். தி.மு.க அமைச்சர்களுக்கு கல்வி அறிவே கிடையாது. அவர்கள் குழந்தைகளிடம் சென்று நீட்டுக்கு எதிராக கையெழுத்து வாங்குகிறார்கள். இதையெல்லாம் மகேஸ் பார்ப்பதில்லை. அதே போல, அமைச்சர் கே.என்.நேரு மார்கெட்டையும், பேருந்து நிலையத்தையும் திருச்சி மாநகரின் வெளியே கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார். மாவட்டத்தின் வளர்ச்சியை கெடுப்பது தான் கே.என்.நேரு வின் சாதனை. திருச்சியில் ஜப்தி நடவடிக்கைக்காக சென்ற மண்டல துணை வட்டாட்சியரை கே.என்.நேரு வின் வலது கரமான காஜமலை விஜய் மற்றும் 15 பேர் சென்று அடித்தார்கள். பா.ஜ.க போராட்டத்தை அறிவித்த பின் வழக்கு பதிவு செய்தார்கள். உதயநிதி ஸ்டாலின் முட்டை மந்திரவாதி போல் நீட்டை ஒழிக்க வேண்டும் என சுற்றி வருகிறார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.