சமீபத்தில் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இப்போது இன்னொரு விஷயத்தைப் பற்றி பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ‘தி ரெக்கார்ட்’ என்ற மோகன்தாஸ் பை பாட்காஸ்டில் பேசும்போது, இந்தியாவுக்கு 1947ல் அரசியல் ரீதியான சுதந்திரம் கிடைத்திருந்தாலும், பஞ்சம் பட்டினியும் தலைவரித்து ஆடிய இந்தியாவில் பொருளாதாரம் சுதந்திரம் கிடைத்தது என்னவோ 1991ல் தான் என்றும், அத்தகைய பொருளாதார சுதந்திரத்தைக் கொண்டு வர காரணமானவர்கள் டாக்டர் மன்மோகன் சிங், மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ப.சிதம்பரம் ஆகிய மூவர்தான் என்று கூறியிருக்கிறார்.

நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்

அப்போது அவர் கூறியதாவது, “டாக்டர் மன்மோகன் சிங், மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ப.சிதம்பரம் ஆகிய மூவரும் தாங்கள் கொண்டுவந்த பொருளாதார கொள்கைகளால்தான் இந்தியாவுக்கு ‘பொருளாதார சுதந்திரம்’ கிடைத்தது.

இதற்காக இவர்களுக்கு இந்த நாடு மிகவும் கடமைப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 1947-ல் அரசியல் ரீதியாக சுதந்திரம் கிடைத்திருந்தாலும், 1991-ல் தான் பொருளாதார ரீதியிலான சுதந்திரம் கிடைத்தது. அது சாத்தியமானதற்கு நரசிம்ம ராவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அப்போது டாக்டர் மன்மோகன் சிங் அவருடைய நிதி அமைச்சராக இருந்தார்.

பிரதமர் நரசிம்ம ராவ் நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு முழுமையான ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால், இந்தியா இப்போது எந்த நிலையில் இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க முடியவில்லை. டாக்டர் மன்மோகன் சிங், அவரை அடுத்து மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் ப. சிதம்பரம் ஆகிய மூன்று பேர்தான் இந்தியாவிற்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வழிவகுத்தவர்கள். நாம் அனைவரும் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

மான்டெக் சிங் அலுவாலியா

1991-க்குப் பிறகுதான் இந்தியாவில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நிறுவனங்கள் லைசென்ஸ் வாங்குவதில் உள்ள பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதனால் ஒவ்வொரு தொழில் நடவடிக்கைக்கும் உரிமம் வாங்குவதற்காகப் பல காலம் நிறுவனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. நிறுவனங்கள் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளைத் திட்டமிட முடிந்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும், மக்களின் வாழ்க்கை முறையும் மேம்பட்டு வந்தது.

1991ல் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்து தயார் செய்த பட்ஜெட் இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றியது. அதனால்தான் அவர் இந்திய நவீன பொருளாதாரத்தின் ஆர்க்கிடெக் என்று அழைக்கப்படுகிறார்.

1991-ல் மான்டெக் சிங் அலுவாலியா வணிகத் துறை செயலாளராக இருந்தார். அவர்தான் பின்னர் திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பொருளாதார விவகாரங்கள் துறைக்கும், நிதித் துறைக்கும் செயலாளராக இருந்தார். அவர் தன்னுடைய ஒவ்வொரு பதவியில் இருக்கும்போது பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தார்.

ப. சிதம்பரம்

அதேபோல் ப.சிதம்பரம் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், வர்த்தக அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகுத்தார். இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதில் இவருடைய பங்கு முக்கியமானது என்று நாராயண மூர்த்தி பேசினார்.

இவர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியதில் இவர்களது பங்கு முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.