சென்னை மாநகரில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் புதிய வேகக் கட்டுப்பாட்டை சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருக்கிறது. இதற்கான ஆலோசனைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக, காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சென்னை போக்குவரத்து

புதிய விதிகளின்படி, சென்னை மாநகரில் இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் செல்லலாம். கனரக வாகனங்களும் இரு சக்கர வாகனங்களும் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் செல்லலாம். ஆட்டோ ரிக்‌ஷா அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருக்கிறது.

புதிய விதிகளின்படி, சென்னை நகரின் உள்பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் அதிகபட்சமாக 30 கி.மீ வேகத்தில்தான் செல்ல முடியும். இந்த புதிய வேகக் கட்டுப்பாடு விதிகள், நேற்றைய தினம் (நவம்பர் 4-ம் தேதி) அமலுக்கு வந்தன.

வாகனங்கள்

சென்னை நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும், புதிய வகை வாகனங்கள் அதிக அளவில் வந்துகொண்டிருப்பதாலும் சாலை உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை ஆய்வுசெய்து, அதனடிப்படையில் வாகனங்களின் வேகத்தைப் புதிதாக வரையறுக்க ஆறு பேர்கொண்ட ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது.

சென்னை மாநகரைப் பொறுத்த அளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் பல்வேறு வகையான வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு குறித்து ஆய்வுசெய்த குழுவினர், சென்னை மாநகருக்கான புதிய விதிகளை வரையறுத்தனர். அதன்படி, தற்போது இந்த விதிகள் அமலுக்கு வந்திருக்கின்றன.

சென்னை அண்ணாசாலை

இந்த நிலையில், புது வேகக் கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளில், 121 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சென்னை போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், நேற்றைய தினம் (நவம்பர் 4-ம் தேதி) 121 வழக்குகள் புது வேகக் கட்டுப்பாடு விதிகளின்படி பதிவுசெய்யப்பட்ட நிலையில், ரூ.1.21 லட்சம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.