`இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்’ என அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போரானது, தற்போது `பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்’ என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. காரணம், 1,400 இஸ்ரேலியர்களை ஹமாஸ் குழு கொன்றிருக்கிறது, 200-க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக வைத்திருக்கிறது எனக் கூறும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே 7,000-க்கும் மேற்பட்டோர் என மொத்தமாக 9,000-க்கும் மேற்பட்டோரின் இறப்புக்குக் காரணமாகியிருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

`இன்னும் போர்த் தொடுப்போம், ஹமாஸை அழிப்பதுதான் எங்களின் வேலை’ என அப்பாவி மக்களையும் சேர்த்து கண்மூடித்தனமாகக் கொன்றுகுவிக்கிறது இஸ்ரேல். இதில் குறிப்பிடப்பட வேண்டியது, ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டபோது தீவிரவாத தாக்குதல் என வெகுண்டெழுந்த நாடுகள் எல்லாம், பாலஸ்தீன மக்கள் கொல்லப்படும்போது `தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது’ என நடுநிலை தவறி உரிமைக்குரல் பேசுகின்றன.

இத்தகைய சூழலில்தான், இஸ்ரேல் அமைச்சர் அமிச்சாய் எலியாஹு (Amichai Eliyahu), `காஸா மீது அணுகுண்டு வீசுவதும் எங்களின் ஒரு விருப்பம்‘ எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்ரேலிய அமைச்சரின் இந்தக் கூற்று, அரபு நாடுகள் மட்டுமல்லாது இஸ்ரேலின் நட்பு நாடுகளும் கண்டனங்களைத் தெரிவிக்க வைத்தது.

இஸ்ரேல் அமைச்சர் அமிச்சாய் எலியாஹு

அதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் X வலைதளப் பக்கத்தில், “அமைச்சர் அமிச்சாய் எலியாஹுவின் பேச்சு உண்மையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இஸ்ரேலும், அதன் படைகளும் அப்பாவி மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், சர்வதேச சட்டங்களுக்கு இணங்கச் செயல்படுகின்றன. எங்களுக்கு வெற்றி கிடைக்கும் வரை அவ்வாறே செயல்படுவோம்” எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல்

இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து அமிச்சாய் எலியாஹு தற்காலிகமாக நீக்கப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. இதற்கிடையில், தன்னுடைய கருத்துகள் திரிக்கப்பட்டுவிட்டதாக அமிச்சாய் எலியாஹு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.