மதுரை​யில் இருந்து உசிலம்பட்டி​ நகருக்குச் செல்லும் முன் திருமங்கலம் பிரிவு பாதையில் ஏ.ராமநாதபுரம் அருலை மலைப்பட்டி கிராமம் அருகே நரி பள்ளிக்கூடி பாறை என்ற நரிப்பாறை பகுதியில் புத்தூர் மலை உள்ளது. இந்த மலை அருகே உசுவமாநதி ஓடுகிறது. மலையில் ஆங்காங்கே இயற்கையான சுனைகளும் உள்ளன. இந்த மலைக்குகைகளில் ஒரே நேரத்தில் 50 பேர் தங்கிக்கொள்ள முடியும்.

புத்தூர் மலை

சுமார் 1500 அடி உயரம் கொண்ட இந்த மலையின் மேற்கு பகுதியில் ​ஏற்கெனவே சமண சிற்பங்கள், ஒரு சில பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக 2500 ஆண்டுகள் பழைமையான தாழிப்பானை முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் தலைமையி​லான குழுவினர் ​மலையின் வடக்குப் பகுதியில் பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வாளர் காந்திராஜனிடம் பேசினோம். “பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டுக்குச் செல்ல பல்வேறு பாதைகள் இருந்தன. இருந்தபோதிலும் மதுரையிலிருந்து வைகை கரை ஒட்டிய பாதை பெருவணிக பாதையாக இருந்துள்ளது. பெருவணிகப் பாதையில் அமைந்துள்ள ​புத்தூர் மலை வணிகர்களுக்குப் பழங்காலத்தில் கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. இங்கு இனக்குழுக்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக அக்குழுவினர் வரைந்த சுமார் 3000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள் உள்ளன.​ 

பாறை ஓவியங்கள்

இதில் சின்ன சின்ன, 50-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. இதில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன. இதில் ​30 ஓவியங்கள் மனிதர்களை மையமாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள். வில்லுடன் கூடிய மனித உருவங்கள் வேட்டைச் சமூகமாக மனிதர்கள் இருந்ததற்கான ஆதாரம்.​ அப்படியான ஓவியங்கள் 5 உள்ளன. 

பாறை ஓவியங்கள்

வேளாண் சமூகங்களை விளக்கும் வகையில் ஓவியங்களும் உள்ளன.​ நாய், மான் போன்ற விலங்குகளும் ஓவியங்களில் இடம் பெற்றுள்ளன. ​வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் வேட்டைச் சமூகம், வேளாண்மைச் சமூகம், கலப்பு பொருளாதாரமாக இருந்ததற்கான ஆதாரங்களாக உள்ளன.

இதில் குதிரைகளில் பயணிக்கும் வீரர்கள், குதிரை வீரரை ஆயுதங்கள் மூலம் மற்றவர்கள் மிரட்டுவது போன்ற ஓவியங்கள், நடக்கும் மனிதர்கள், ஓடும் மனிதர்கள், வில்லை ஏந்திய வீரர்கள் (வில்லாளிகள்) மற்றும் சின்ன சின்ன ஓவியங்க​ளும், 10-க்கும் மேற்பட்ட குறியீடுகளும் ​வரையப்பட்டுள்ளன. 

ஆய்வாளர் காந்திராஜன்

மதுரை மாவட்டத்தில் கல்லாயூத ஓவியங்கள் 4 இடங்களில் கண்டறியப்பட்டன. கருங்காலங்குடி, மீனாட்சிபட்டி, முத்துப்பட்டி, கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம், வகுரணி போன்ற இடங்களில் ஓவியங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஆண், பெண் பாலுறவு கொள்ளும் ஓவியங்கள் கண்டறியப்பட்ட 3வது இடமாக புத்தூர் மலை உள்ளது. இந்த மலையில் 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இருந்தாலும் மனிதனை ஆண், பெண் என வேறுபடுத்தி வரையப்பட்டிருக்கும் ஓவியம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

கீழடி அகழாய்வில் நகர நாகரிக வளர்ச்சி அடைந்த மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுக​ள் கிடைத்துள்ளன. ஆனால் அதற்கு முந்தைய காலகட்டங்களில் ​வேட்டை சமூகமாக வாழ்ந்த மக்களின் ஆதாரங்களாக இந்தப் பாறை ஓவியங்கள் இருக்கலாம். ​வேட்டை சமூகமாக இருந்தபோதிலும் அவர்கள் நுட்பமாக ஓவியங்கள் வரைந்து தகவலைக் கடத்துவதற்கான ஆற்றலைப் பெற்றிருந்துள்ளனர்.

ஆண், பெண் பாலுணர்வு ஓவியங்கள்

ஆய்வாளர்கள் கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின் அடிப்படையில் மட்டும் வரலாற்றைச் சொல்லக் கூடாது. அதற்கும் முந்தைய எத்தனையோ பாறை ஓவியங்களின் அடிப்படையிலும் வரலாற்றைச் சொல்ல வேண்டும். அதற்குத் தமிழகத் தொல்லியல் துறை இதுபோன்ற ஓவியங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும். அதனைக் கொண்டு ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்றார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.