பஞ்சாப் மாநிலத்தில் நெல் மற்றும் கோதுமை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நெல் அறுவடையின் போது கிடைக்கும் வைக்கோல் அப்படியே வயல்களில் விடப்படும். மாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டும் வைக்கோலை எடுத்துக்கொண்டு எஞ்சிய வைக்கோலை அப்படியே விளைந்த நிலத்தில் போட்டு தீவைத்துவிடுவர். இதனால் ஒவ்வோர் ஆண்டும் பஞ்சாப்பில் காற்று மாசுபடுவது அதிக அளவில் நடந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார் ஹரிந்தர்ஜீத் சிங் என்ற பட்டதாரி.

எரிக்கப்படும் வைக்கோல்

லூதியானா அருகில் உள்ள நுர்புர் பேட் என்ற இடத்தை சேர்ந்த ஹரிந்தர்ஜீத் சிங் வழக்கறிஞர் வேலைக்கு படித்துவிட்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். அவர் மொத்தம் 52 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதில் 10 ஏக்கரில் கொய்யா மற்றும் பேரிக்காய் பயிரிட்டுள்ளார். 12 ஏக்கரில் மரங்களை வைத்திருக்கிறார்.

மீதி 30 ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் மட்டும் 30 ஏக்கரில் 900 குவிண்டால் நெல் அறுவடை செய்துள்ளார். இந்த நெல் அறுவடையின் மூலம் கிடைக்கும் வைக்கோலை என்ன செய்வது என்று நீண்ட நாட்களாக ஹரிந்தர்ஜீத் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஹரிந்தர்ஜீத் இது குறித்து கூறுகையில்,”வைக்கோல் பிரச்னைக்கு தீர்வு காண முதல் கட்டமாக சொந்தமாக 5️ லட்சம் செலவு செய்து வைக்கோலை பண்டலாக கட்டும் ஒரு இயந்திரத்தை விலைக்கு வாங்கினேன். அந்த இயந்திரத்தை கொண்டு 17000 குவிண்டால் வைக்கோல்களை பண்டல்களாக கட்டினோம்.

வைக்கோல்

அவற்றை ஒரு குவிண்டால் ரூ.185 என்ற விலையில் பேப்பர் மில்களுக்கு விற்பனை செய்தோம். இதன் மூலம் ரூ.31.45 லட்சம் வருமானம் கிடைத்தது. இரண்டு டிராலி மற்றும் பண்டல் கட்டும் இயந்திரங்களுக்கான செலவு போக 20.45 லட்சம் லாபம் கிடைத்தது. எனது தொழிலை விரிவுபடுத்த வட்டம் மற்றும் சதுர பண்டல் போடும் இயந்திரங்கள், அவற்றை எடுத்து செல்ல டிராலி என மொத்தம் 57 லட்சத்திற்கு புதிய வாகனங்களை வாங்கி இருக்கிறேன். புதிய இயந்திரங்கள் மூலம் ஆண்டுக்கு 900 டன் நெல்லும், அதன் முலம் கிடைக்கும் வைக்கோல் பண்டல்களையும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறேன்.

கடந்த 7 ஆண்டுகளாக எனது தோட்டத்தில் ஒரு போதும் வைக்கோல்களை எரித்தது கிடையாது. என்னை பின்பற்றி எனது கிராம மக்களும் இப்போது வைக்கோல்களை எரிப்பது கிடையாது” என்று தெரிவித்தார்.

இதன் மூலம் ஹரிந்தர்ஜீத் சுற்றுச்சூழலுக்கு பாதுகாவலனாக விளங்குவதோடு மற்ற விவசாயிகளுக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். ஹரிந்தர்ஜீத் சிங்கின் செயல்பாடுகளை லூதியானா துணை போலீஸ் கமிஷனர் சுரபி மாலிக், இவரை வெகுவாக புகழ்ந்துள்ளார். ஹரிந்தர்ஜீத் சிங் மற்ற விவசாயிகளுக்கும் வைக்கோலை எந்த மாதிரி அப்புறப்படுத்த வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுப்பதோடு ஊக்கப்படுத்தி வருவது மிகவும் பாராட்டத்தக்கது என்று சுரபிமாலிக் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வேளாண்மைத்துறை அதிகாரி அமன்ஜித் சிங் கூறுகையில்,”வைக்கோல்கள் எரிக்கப்படுவதை தடுக்க அறிவியல் ரீதியான மேலாண்மை உடனடி அவசியம் ஆகும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் வைக்கோல்களை அப்புறப்படுத்த விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார். இதே போன்று பஞ்சாப் மாநிலம் பெரோஷாபூர் என்ற இடத்தை சேர்ந்த குர்பிரீத் சிங் என்ற விவசாயியும் வைக்கோல்களை பண்டல் கட்டி விற்பனை செய்து கடந்த ஆண்டு 16 லட்சம் சம்பாதித்துள்ளார். இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டத் திட்டமிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.